Published : 01 Mar 2019 09:19 AM
Last Updated : 01 Mar 2019 09:19 AM

அச்சுறுத்தும் குடிநீர்த் தட்டுப்பாடு: நாம் தயாராக இருக்கிறோமா?

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர்த் தட்டுப் பாடு தலைகாட்டத் தொடங்கிவிட்டது. தலைநகரம் சென்னை பிரச்சினையின் மையமாகிவிடும் நிலையில் இருக்கிறது. லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிப்பது கணிசமாக அதிகரித்திருக்கிறது. ஜனவரியில் 100 நடைகள் சென்ற லாரிகள் தற்போது 6,450 நடைகள் செல்கின்றன. பல்வேறு பகுதிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று 55 கோடி லிட்டர் தண்ணீர் தற்போது விநியோகிக்கப்படுகிறது. நிலைமை இன்னும் மோசமாகும் என்று அஞ்சப்படுகிறது.

2016-ல் தமிழகத்தில் பருவ மழை இயல்பைக் காட்டிலும் 62% அளவுக்குக் குறைந்தது, சென்னையில் இதன் பாதிப்பைக் கடுமையாக உணர முடிந்தது. 2017-ல் சென்னை குடிநீர் வழங்கல், வடிகால் வாரியத்தின் நான்கு நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு கடுமையாகக் குறைந்திருந்தது. 1,100 கோடி கன அடி மொத்தக் கொள்ளளவில் 83 கோடி கன அடிதான் கையிருப்பில் இருந்தது. அது பெரும் அவஸ்தையை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்சினைகளுக்குப் பிறகும் அதிமுக அரசு எந்தத் தீர்வையும் நோக்கி நகராதது

கொடுமை. பிரச்சினையின் தீவிரத்தை அரசும் உணர்ந்ததாகத் தெரியவில்லை; மக்களுக்கும் உணர்த்த தலைப்படுவதாகத் தெரியவில்லை. இத்தகைய சூழலில், 2018-லும் மழைப் பொழிவு சுமார் 55% அளவுக்குக் குறைந்தது. விளைவாக இப்போதே சென்னையை வாட்டத் தொடங்கியிருக்கிறது தண்ணீர்த் தட்டுப்பாடு.

சென்னையைப் பொறுத்தவரை ஏறத்தாழ 80% மக்கள் தங்கள் குடிநீர்த் தேவைக்காகத் தனியாரையே சார்ந்துள்ளனர்.

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் 50%-60% தண்ணீர்த் தேவையைத் தனியார் லாரிகளே பூர்த்திசெய்கின்றன. இப்படியான சூழலில் இன்றைக்கு, கட்டணம் செலுத்தித் தண்ணீர் லாரிக்கு ஏற்பாடு செய்தாலும் 7 முதல் 10 நாட்கள் கழித்துத்தான் லாரி வருவதாகச் சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. பிப்ரவரி தொடக்கத்தில் ஆந்திரத்திலிருந்து சென்னை வந்தடைந்த கிருஷ்ணா நதிநீர் இன்றைக்கு ஓரளவுக்குக் குடிநீர்ப் பிரச்சினையைச் சமாளிக்கும் வகையில் கைகொடுக்கிறது என்றாலும், அடுத்தடுத்த மாதங்களைச் சமாளிப்பதற்கு உடனடி செயல்திட்டம் வேண்டும்; குறிப்பாக மக்களிடம் நிலைமையின் தீவிரத்தை உணர்த்தி, பயன்பாட்டைக் குறைப்பது மிக முக்கியம்.

வெளியூர்களிலிருந்து பெறும் தண்ணீரைத்தான் பயன்படுத்துகிறோம் என்ற பொறுப்புணர்வே இல்லாமல், சென்னையின் நட்சத்திர விடுதிகள் தொடங்கி வீடுகளில் ஷவர் குளியல் குளிப்பவர்கள் வரை எல்லாருமே ஆடம்பரப் பயன்பாட்டைத் தொடர்ந்தால், அதன் விளைவுகள் கீழே உள்ள மக்களையே கடுமையாகப் பாதிக்கும். 2020-வாக்கில் சென்னையில் நிலத்தடிநீர் பெரிய அளவில் கீழே இறங்கிவிடும் என்ற ‘நிதி ஆயோக்’  எச்சரிக்கையைச் சென்னைவாசிகள் இந்த நேரத்தில் நினைவுகூர வேண்டும். அரசு தொலைநோக்கிலான செயல்திட்டத்துக்குத் தயாராக வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x