Last Updated : 29 Mar, 2019 08:29 AM

 

Published : 29 Mar 2019 08:29 AM
Last Updated : 29 Mar 2019 08:29 AM

முதல்வர் பழனிசாமி பேசும் இடங்களில் நல்ல கூட்டம் கூடுகிறது!- மாஃபா க.பாண்டியராஜன் பேட்டி

சக்திமிக்க ஜெயலலிதாவை இழந்துவிட்டபோதிலும் தமிழக ஆட்சியைத் தக்கவைக்கவும், மக்களவையில் கணிசமான இடங்களைப் பெறவும் தீவிரமாக உழைத்துக்கொண்டிருக்கிறது அதிமுக. அதன் தளபதிகளில் ஒருவரான அமைச்சர் மாஃபா க.பாண்டியராஜனுடன் ஒரு பேட்டி.

தமிழை மத்திய அரசு அலுவலகங்களில் இணை ஆட்சிமொழியாக்குவோம் என்று திமுக வாக்குறுதி அளித்திருக்கிறது. தமிழ் வளர்ச்சித் துறையின் அமைச்சராக இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்?

இந்தியாவின் தேசிய மொழிகளாக 22 பிராந்திய மொழிகள் இருக்கின்றன. அவை அனைத்தையும் மத்திய ஆட்சிமொழியாகக் கருத வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. அப்படிப் பார்க்க திமுக கொடுத்திருப்பது, தமிழர்கள் எதிர்பார்ப்பதைவிட ஒரு படி கீழான வாக்குறுதிதான். யுனெஸ்கோவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் நான் ஆங்கிலத்தில் உரையாற்ற, அடுத்த நொடியே அது தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. ‘ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜன்ஸ்’ எனும் செயற்கை அறிவு வளர்ந்துவிட்ட சூழலில், 22 மொழிகளைக் கொண்ட இந்தியாவில் அனைத்தையுமே ஆட்சிமொழியாக்குவது ஒன்றும் கடினமான விஷயமல்ல. அதை அதிமுக சார்பில் நாங்கள் வலியுறுத்துவோம். கூடவே, தமிழை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக்குவதற்கான பணிகளும் நடந்துகொண்டிருக்கின்றன. ஐந்தாறு ஆண்டுகளில் அது நடைமுறைக்கு வந்துவிடும்.

‘ஜெயலலிதா மட்டும்தான் குற்றவாளி, சசிகலாவை சிறையில் அடைத்தது தவறு’ என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியிருக்கிறாரே?

அவர் உதிர்க்கும் முத்துகளையெல்லாம் பொருட்படுத்திக் கேள்வி கேட்கிறீர்களே, நியாயமா? அவரே பாவம், கட்சியிலேயே ஒதுக்கப்பட்டுக் கிடக்கிறார். அவர் ஏதோ உள்நோக்கத்தில் அப்படிச் சொல்லியிருக்கலாம் அல்லது அவருக்கு இந்தக் கூட்டணியில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். கடினமாக உழைத்து 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்று, அவரது வார்த்தைகளைப் பொய்யாக்குவோம்.

முதல்வர் பழனிசாமியின் பிரச்சாரத்தைக் கேட்கக் கூட்டமே இல்லை என்கிறார்களே?

சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் நச்சு விதைதான் அது. அதில் ஒரு அங்குலம்கூட உண்மை கிடையாது. நேற்று மதுரவாயலில் ஆரம்பித்து பூந்தமல்லி, ஆவடி வழியாக 8 இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். நல்ல கூட்டம். ஒவ்வொரு இடத்திலும் குறைந்தது 5,000 பேர் திரண்டிருந்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x