Last Updated : 01 Mar, 2019 09:34 AM

 

Published : 01 Mar 2019 09:34 AM
Last Updated : 01 Mar 2019 09:34 AM

எஸ்.தனபால்: கலைவெளியில் ஓர் இசைப் பாடகன்

நம் இந்தியக் கலை மரபின் அழகியல் நுட்பங்களோடு, நவீனத்துவக் கலை வெளிப்பாட்டின் சுதந்திரமான அம்சங்களையும் தன் சிற்பக் கலையில் இசைபடப் பிணைத்த கலை மேதை எஸ்.தனபால்.

பல்லவ மற்றும் சோழச் சிற்பிகள் முதல் சமகாலச் சிற்பிகளான ரூடின், ஹென்றி மூர் வரையான படைப்பாளிகளின் பாதிப்பை ஆரோக்கியமாக ஏற்று, தனதான உலகையும் கலை நுட்பங்களையும் தன் படைப்புகளில் வெளிப்படுத்தி, இந்தியக் கலைவெளியில் தனித்துவமிக்க கலை மேதையாகத் திகழ்ந்தார். நவீனத்துவ எழுச்சியும் தமிழ் அழகியல் கூறுகளும் லயப்படும் சிற்பங்கள் இவருடையவை.“மரபுக் கூறுகளை முற்போக்கு எண்ணங்களுக்குள் இசைமைப்படுத்திய முதல் சமகால இந்தியச் சிற்பியாக தனபாலையே குறிப்பிட வேண்டும்” என்கிறார் எழுத்தாளரும் கலை விமர்சகருமான முல்க் ராஜ் ஆனந்த்.

சிற்பங்களும் இசையின் ஏழு ஸ்வரங்களைப் போன்றவையே. இயற்கையானவை அல்ல. கலை மனதால் உருவாக்கப்படுபவை. இந்த மன வெளிப்பாடுதான் கலையின் அடிநாதம். அவை உருவான பின்னும் அதன் மிச்சங்கள் மனதில் இருந்துகொண்டிருக்கும். அவனுள் சலனித்தபடி அவனை இயக்கிக்கொண்டிருக்கும் அவனுடைய பிரத்யேகமான அந்த நாதம்தான் கலையின் அடிப்படை. சப்த ஸ்வரங்களில் லயப்படும் இசையின் குணாம்சத்தையே சிற்பங்களும் கொண்டிருக்கின்றன என்று கருதியவர் எஸ்.தனபால். “சிற்பம் என்பது கொள்ளளவு, இசை மற்றும் வெளி அடங்கியது” என்கிறார் அவர்.

ஓவிய பாணி

நூறாண்டுகளுக்கு முன்பு, 1919-ம் ஆண்டு, மார்ச் 3-ல், சென்னை மைலாப்பூரில் பிறந்த இவர், கோயில், திருவிழா, இசை, நடனம் என்றமைந்த வளமான கலாசாரப் பின்புலத்தில் வளர்ந்தார். கோயில் தேருக்காக ஒரு முதியவர், மரத்தில் உருவத்தைச் செதுக்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தபடி நின்றிருந்த பள்ளிப் பருவ நாட்கள் இவருடையவை. பள்ளிப் பருவத்திலேயே நடனமும் கற்றுக்கொண்டார். அந்நாட்களில் இவர் பள்ளியில் வரைந்தவை, ஓவிய ஆசிரியர் உட்படப் பலரின் கவனத்தை ஈர்த்தன. அப்பகுதியைச் சேர்ந்த மரபு ஓவியர் கோவிந்த ராஜுலுவிடம் பெற்ற பயிற்சியின் பலத்தோடு 1935-ல் சென்னை ஓவியப் பள்ளியில் மாணவனாகச் சேர்ந்தார்.

தேவிபிரசாத் ராய் செளத்ரியின் தலைமையில் சென்னைப் பள்ளி கலைமுகம் பெற்றிருந்த காலமது. இந்திய அரங்கில் கலை மாணவனாக விழையும் இளைஞர்களின் கனவுக்கு ஆதர்சமாகத் திகழ்ந்த ராய் செளத்ரியின் விரிந்த சிறகுகளுக்குள் பல மாநிலத்தவரும் தங்கள் கனவுகளைப் பொறிக்க வந்து கூடிய காலம். மாணவப் பருவத்தில் வங்க மறுமலர்ச்சி இயக்கத்தின் தன்மைகளையும், மேற்கத்திய பாணிகளையும், தென்னிந்தியக் கலை மரபின் அழகியல் நுட்பங்களையும் தனபால் கற்றறிந்தார். ஓவியராகக் கலை வாழ்க்கையைத் தொடங்கிய தனபாலின் ஆரம்ப கால ஓவியங்கள் வங்க ஓவிய இயக்க மற்றும் மேலை நாட்டு ‘இம்ப்ரஷனிஸ’ இயக்கப் பாதிப்புகளிலிருந்தே உருவாகியிருக்கின்றன. ராய் செளத்ரி முதல்வராக இருந்த அக்காலத்தில் சென்னைப் பள்ளிச் சூழலில் நிலவிய பொதுத் தன்மை இது.

தனபாலைப் பொறுத்தவரை, வங்க ஓவியரான நந்தலால் போஸின் சித்திரங்கள் அவரை அதிகம் ஈர்த்திருக்கின்றன. அவருடைய மன உலகுக்கு அணுக்கமாக அவை இருந்திருக்கின்றன. மெல்லிய, வெகு லகுவான, சரளமும் சுதந்திரமும் இசைமையும் கூடிய கோடும், அனுசரணையான வெளியும் இணக்கமாக அமைந்து உருவாகும் லயத்தை இவருடைய ஓவியங்களில் காண முடிகிறது.

தனபாலின் படைப்பாற்றல் ராய் செளத்ரியின் கவனத்தை ஈர்த்தது. இது, ஆறாண்டு கால ஓவியப் படிப்பு முடிந்ததும், 1941-ல் ஓவியப் பயிற்றுவிப்பாளராகச் சென்னைக் கலைப் பள்ளியில் தனபால் சேர வழி செய்தது. இக்காலகட்டத்தில், முதல்வர் ராய் செளத்ரி சிற்பப் படைப்பில் ஈடுபட்டிருக்கும்போது, அவருக்கு ஒத்தாசையாக இருந்த தனபாலுக்கு சிற்பக் கலையாக்கத்தில் நாட்டம் ஏற்பட்டது. கே.சி.எஸ்.பணிக்கரும் சிற்பப் படைப்பாக்கத்தில் ஈடுபடும்படி அவரைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார். உருவச் சிலைகள் வடிப்பதில் தனபால் முதலில் கவனம் செலுத்தினார். காமராஜர், பெரியார், டாக்டர். ராதாகிருஷ்ணன் ஆகிய தமிழ் அரசியல் தலைவர்களையும், திரு.வி.க., பாரதிதாசன் போன்ற தமிழ்ச் சான்றோர்களையும் உருவச் சிலைகளாகப் படைத்திருக்கிறார். தமிழ்க்கவி ஒளவையார் சிற்பம் அலாதியான அழகு கொண்டது. பாரதிதாசனோடு நெருங்கிய நட்பும் கொண்டிருந்திருக்கிறார்.

நுட்பங்களை இசைமைப்படுத்தியவர்

1957-ல் ராய் செளத்ரி, முப்பதாண்டுக் கால உத்வேகமிக்க பணிக்குப் பின் ஓய்வு பெற்றபோது, பணிக்கர் முதல்வரானார். தனபால் சிற்பத் துறையின் பொறுப்பேற்றார். இக்காலத்தில் சிற்பத் துறையின் முழு வளர்ச்சிக்கு வெகுவாகப் பிரயாசைப்பட்டார். சிற்பக் கலையின் நவீனத்துவ வெளிப்பாடுகளில், இந்தியத் தன்மை கூடிவரும் வகையில், சுயமானதும் மரபானதுமான அழகியல் நுட்பங்களை இசைமைப்படுத்தினார். 1968-ல் கும்பகோணம் ஓவியக் கல்லூரியின் முதல்வரானார். பின்னர், 1972-ல் சென்னை ஓவியக் கல்லூரியின் முதல்வரானார். 1977-ல் பணி ஓய்வு பெற்றார். அதன் பின்னரும் வீட்டில் தன்னிடம் வரும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தபடி இருந்தார்.

கடைசி ஆண்டுகளில் கலாக்ஷேத்ராவில் நுண்கலைத் துறைப் பேராசிரியராக இவரின் ஆசிரியப் பணி தொடர்ந்தது. இக்காலகட்டத்தில் அவ்வப்போது மந்தைவெளியிலுள்ள அவருடைய வீட்டுக்குச் சென்று அவரைப் பார்த்துவந்தேன். நம்முடைய கலை மரபையும், மேதமைமிக்க மேலைக் கலைஞர்களின் படைப்புகளையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பேதம் காட்டுவதில்லை அவர். அதேசமயம், தனதான அர்த்தமுள்ள கோடுகளுடன் மாணவர்கள் வெளிப்படும்போது அவர் கொள்ளும் எக்களிப்பு அலாதியானது. 2000 மே மாதத்தில் தனபால் காலமானார்.

தமிழ் மாணவர்களின் ஆதர்சம்

தமிழக நவீனக் கலைச் சூழலின் வளத்துக்கு வலுவான அடித்தளம் அமைத்த மூன்று மேதைகள்: தேவி பிரசாத் ராய் செளத்ரி, கே.சி.எஸ்.பணிக்கர் மற்றும் எஸ்.தனபால். இவர்களில் தனபாலின் முக்கியத்துவம் தனிச் சிறப்பானது. இம்மூவரில் இவர் மட்டுமே தமிழர். அக்காலகட்டத்தில் ஓவியப் பள்ளியில் மாணவனாகச் சேர்வதற்குக் குறைந்தபட்ச கல்வித்தகுதி எதுவும் கிடையாது. ஓவியத் திறனும் ஆர்வமும் போதும். தமிழ் மட்டுமே பேசத் தெரிந்து மிகுந்த ஆர்வத்தோடு அப்பள்ளியில் சேர்ந்த, சேர விழைந்த மாணவர்களுக்குப் பெரும் ஆதர்சமாகத் திகழ்ந்தவர் தனபால்.

இவரது சுபாவமான எளிமையும் தோழமையும் ஆதரவும் அரவணைப்பும் அனுசரணையும் அபாரமான ஆசிரியத்துவமும் தமிழ் மாணவர்களுக்கு மிகுந்த உத்வேகமளித்தன. பின்னாளில் கலைவெளியில் முதனிலை வகித்துச் செயல்பட்ட கலைப் படைப்பாளிகளில் பலரும் இவருடைய மாணவர்களே. எல்.முனுசாமி, சந்தான ராஜ், கே.ராமானுஜம், ஆதிமூலம், தட்சிணாமூர்த்தி, ஆர்.பி.பாஸ்கரன், டிராட்ஸ்கி மருது, விஸ்வம், வீர.சந்தானம் என நீளும் மிக நீண்ட பட்டியல் அது. இவர்கள் தனபால் மாஸ்டரின் ஆசிரியத்துவத்தை நினைவுகூர்வதும் போற்றுவதும் இவருடைய அருமையை உணர்த்துகின்றன.

அர்ப்பண உணர்வோடும் தீர்க்கமான கலை நம்பிக்கையோடும் வாழ்ந்த இவரின் கலைப் பணி அளப்பரியது. தனபாலின் வீட்டிலேயே தங்கி, சாப்பிட்டு உருவான கலைஞர்கள் பலர். 1966-ல் சோழ மண்டலம் உருவாக்கப்பட்டபோது, அங்கு வேலி போடுவதிலிருந்து கொட்டகை அமைப்பதுவரை, அங்கு வேலையில் ஈடுபட்டிருந்தோருக்கு மைலாப்பூரிலுள்ள தன் வீட்டிலிருந்து உணவினைத் தினந்தோறும் சைக்கிளில் எடுத்துச் சென்றிருக்கிறார் (சுமார் 20 கிலோமீட்டர் தூரம்.) பேருந்து வசதியோ டீக்கடைகளோ அங்கு இல்லாதிருந்த காலம்.

ஒரு கலை இயக்கமாக, தனபாலின் கலை வாழ்வு முழுமையானது. தனபாலின் அர்ப்பண உணர்வையும், உத்வேகமிக்க ஆசிரியத்துவத்தையும், லட்சிய வேட்கையையும், கலை நம்பிக்கையையும் போற்றி சுவீகரிக்க வேண்டிய கட்டாயத்தைக் காலம் கேட்டுநிற்கிறது.

- சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

மார்ச் 3 - எஸ்.தனபால் பிறந்ததினம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x