Published : 27 Mar 2019 08:22 AM
Last Updated : 27 Mar 2019 08:22 AM

360: அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் தூதுவர்

அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் தூதுவர்

டெல்லி தெற்குத் தொகுதியில் ஆஆக வேட்பாளராகக் களம் இறங்கியிருக்கிறார் ராகவ் சட்டா. வயது 30. படிப்பு சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட். திருமணம் ஆகவில்லை… என்ன மணமாலை விளம்பரம்போல இருக்கிறதே என்கிறீர்களா? அப்படித்தான் ஆகிவிட்டது. சட்டா தனது புகைப்படத்துடன் சுயவிவரக் குறிப்புகளையும் எழுதி வாக்களிக்குமாறு கேட்டால், ‘என்னைத் திருமணம் செய்துகொள்வீர்களா? எங்கே பார்த்துப் பேசலாம்?’ என்று ஏராளமான பதில்கள். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கதவுகளையெல்லாம் பூட்டிவிட்டார் சட்டா. இப்போது இணையதளத்தில் மட்டுமே தகவல் போடுகிறார். ஆஆகவின் பொருளாளரும் அரசியல் விவகாரக் குழு உறுப்பினரான சட்டா, ஜன்லோக்பால் மசோதா தயாரிப்பில் ஈடுபட்டவர். டெல்லி நிதியமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சில மாதங்கள் நிதி ஆலோசகராகவும் செயல்பட்டார். கட்சி தொடர்பான வழக்குகளுக்கு சட்ட ஆலோசனைகளும் வழங்கிவருகிறார். திரிணமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் உடன்பாடு பேச, இவரைத்தான் அனுப்புகிறார் அர்விந்த் கெஜ்ரிவால்.

தேவ கவுடாவுக்குப் போட்டியாக காங்கிரஸ் எம்.பி.

கர்நாடகத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையிலான தேர்தல் ஒப்பந்தப்படி துமகூரு தொகுதி, முன்னாள் பிரதமர் தேவ கவுடாவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அத்தொகுதியின் தற்போதைய உறுப்பினரான முத்தஹனும கவுடாக்குத் தொகுதியை விட்டுத்தர விருப்பமில்லை. வேட்பு மனு தாக்கலும் செய்துவிட்டார். “வேடிக்கைக்காகப் போட்டியிடவில்லை, நான் இத்தொகுதியின் உறுப்பினர், கட்சித் தலைமை எனக்கு இத்தொகுதியைப் பெற்றுத்தந்துவிடும்” என்கிறார் முத்தஹனும கவுடா. துணை முதலமைச்சர் ஜி.பரமேஸ்வரா முன்னிலையில் இதே தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த தேவ கவுடா, “வகுப்புவாத பாஜகவுக்கு எதிராக நாம் ஒற்றுமையாகப் போராட வேண்டும், பழைய கசப்புகளை மறப்போம்” என்று இரு கட்சித் தொண்டர்களையும் கேட்டுக்கொண்டார். ஆனால், பழைய கசப்பு அவ்வளவு எளிதில் நீங்கிவிடாதுபோலிருக்கிறது. ‘அக்கட்சியின் வலிமைக்கு ஆறு தொகுதிகளைத்தான் கட்சி மேலிடம் தரும் என்று எதிர்பார்த்தோம், அதிகமாகவே தரப்பட்டிருப்பது ஏமாற்றம் தருகிறது’ என்கிறார்கள் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x