Published : 27 Mar 2019 02:46 PM
Last Updated : 27 Mar 2019 02:46 PM

பசங்களுக்கு கோடை லீவு தருவோம்

ஜெமினி தனா

லீவு விட்டாச்சு என்று சொல்லும் குழந்தைகள், அதை துள்ளிக்குதித்து வரவேற்கிறார்களா என்றால் இல்லை. விடுமுறையைக் குதூகலமாகக் கழிக்கும் குழந்தைகள் குறைந்துகொண்டே வருகின்றனர். காரணம்... சம்மர் பள்ளிகள். கோடைகால வகுப்புகள்.

ஃப்ளாஷ் பேக்:

    ”இன்னியோட பரீட்சை முடிஞ்சிடுச்சு..  எல்லாம் என்ன செய்யப் போறீங்க?” என்று வாத்தியார் கேட்பார். ஒவ்வொருவரும் எழுந்து ”எங்க மாமாகிட்ட நீச்சல் கத்துக்கப் போறேன் சார்…” ”எங்க அண்ணன் சைக்கிள் ஓட்ட கத்துத்தரேன்னு சொல்லியிருக்கான் சார்…” ”எங்க வீட்ல எல்லோரும் தாத்தா பாட்டி வீட்டுக்கு போகப்போறோம் சார்…” இப்படித்தான் குழந்தைகள் விடுமுறையை உறவுகளோடும் நண்பர்களோடும் கழித்தார்கள். ஒரு பக்கம் உறவு, இன்னொரு பக்கம் பாசம், நடுவே கற்றல் என வாழ்வியல் இருந்தது.

லேட்டஸ்ட்:

 ”டியர் ஸ்டூடண்ட்ஸ். லீவுல யாரெல்லாம் சம்மர் கிளாஸ் அட்டெண்ட் பண்ணப் போறீங்க… இந்த ஃபார்ம்ல எழுதி எடுத்துட்டு வாங்க… ஸ்விம்மிங், பாட்டு, மியூஸிக், டான்ஸ் , ஆர்ட் அண்ட் க்ராஃப்ட், ஹேண்ட்ரைட்டிங், இந்தின்னு நிறைய கோச்சிங் கொடுக்கபோறோம். நீங்க எல்லா க்ளாஸ்லேயும் கூட கலந்துக்கலாம். ஹேண்ட் ரைட்டிங், இந்திலாம் அடுத்த க்ளாஸ்க்கு போகும் போது உதவியா இருக்கும்” என்று அடுத்த வருட அழுத்தத்தை அப்போதே கொடுத்துவிடுகின்றன தனியார்பள்ளிகள்.

”நாங்க மட்டும் என்ன சும்மாவா” என்று களத்தில் இறங்குகிறது வீதிக்கு நான்கு என்று அமைந்திருக்கும் சம்மர்கோச்சிங் சென்டர்கள். கோடை  விடுமுறைக்குக் காத்திருந்து வலைவிரித்து, துள்ளித் திரிய வேண்டிய குழந்தைகளின் றெக்கைகளை பெற்றோர்களின் உதவியோடு  கத்திரித்து விடுகிறார்கள் கோச்சிங் சென்டர்காரர்கள்.     

 இதற்கு காரணம் மதிப்பெண்கள். குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் மதிப்பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாகத் தீர்மானித்ததால் விளைந்த சிந்தனைக் கோளாறு இது.

வேகமான உலகில் வேகமாக கற்றுக்கொள்ளவும் வேண்டுமே  என்று  படிக்காத பெற்றோர்களிடமும், படித்த பெற்றோர்களிடமும் உருவேற்றியிருக்கிறது சமூகம். பக்கத்துவீட்டு பையனின் பெற்றோருக்கு மியூஸிக் பிடித்திருக்கும். ஆனால் ”அவன் மியூஸிக் க்ளாஸ் போறானே. நீயும் பாட்டுக் கத்துக்கோ” என்று வீம்புக்கு அனுப்பும் பெற்றோர்களே இங்கு அதிகம். ”லீவுல கண்டிப்பா  க்ளாஸ் அனுப்பிடணும். இல்லன்னா பசங்க ரொம்ப சேட்டை பண்ணுவாங்க. நமக்கு நெஞ்சுவலியே வந்துரும்பா” என்று சொல்லும் பெற்றோர்களின் இன்னொரு பக்கத்தின் ப்ளான் இது!

  எடுத்த காரியங்களில் தோல்வியுற்று அழுவதும், நம்மால் முடியாதோ... என்ற எதிர்மறையான எண்ணங்களும் இன்றைய தலைமுறையினரிடம் வரக் காரணமே தனிமைதான். மூத்த தலைமுறையினர் குழந்தைகளுக்குத் தனிமையைத் தராமல் தன்னம்பிக்கை, புத்திகூர்மை, ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும் விளையாட்டுகள் என கற்றுக்கொடுத்தார்கள்.

 விளையாட்டில் வாழ்க்கைக் கல்வி:

 வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள், மேடுபள்ளங்கள் பொதுவானவை. முயன்றால் வெற்றி பெறலாம். என்பதை உணர்த்தும் பரமபதம்.

  விரலுக்கு பயிற்சியும், கணக்கு வழக்கில் தெளிவும் ஏற்படுத்தும் பல்லாங்குழி. திறமைசாலிகளாக இருந்தாலும் இக்கட்டான சூழலில் எதிரிகளை சமாளிக்க விவேகமும் தேவை என்பதை உணர்த்தும் தாய விளையாட்டு.  சேமிப்புப் பழக்கத்தின் நன்மையையும், ஒருமுகப்பட்ட கவனத்தையும் இயல்பாகவே கொண்டுவர உதவும்  கோலி விளையாட்டு.

 மந்தநிலையை நீக்கி உடலையும் மனதையும் புத்துணர்வு கொள்ளச் செய்யும் நொண்டி ஆட்டம். கண்ணாமூச்சி ரே...ரே...கண்டுபிடி ரே..ரே..., பூப்பறிக்க வருகிறோம்...   இப்படிச் சிறுவர்களிடம் ஒற்றுமையையும் அன்பையும் வளர்க்கும் விளையாட்டுகள்  இருந்தன.

கிச்சு கிச்சுத் தாம்பாளம், கிட்டிப் புல், பச்சக் குதிரை தாண்டுதல், பம்பரம் விடுதல் இப்படி இன்னும் நீளும் விளையாட்டுகளை கோடையில் விளையாடினார்கள் பதின்ம வயது உள்ளவர்களும். இன்று கிரிக்கெட், டென்னிஸ், கேரம், ஃபுட்பால்,வாலிபால்,பேட்மின்ட்டன் விளையாட்டுகளை தெரிந்து வைத்திருக்கும் குழந்தைகள் நமது பாரம்பரிய விளையாட்டுகளைப் பற்றி படித்து, கேட்டு தெரிந்து கொள்கிறார்கள்.

இன்று  பெரும்பாலான பெற்றோர்கள், வேலை வேலை என்று இருக்க... எப்போதும் ”படி படி” என்று வருடம் முழுக்க குழந்தைகளையும் படுத்தி எடுக்கிறார்கள். விடுமுறையிலும் ஏதாவது கற்றுக்கொள்.. ஆட்டம் பாட்டம் வேண்டாம் என்று அடக்கிவைக்கிறார்கள்.

அவசரயுகம், போட்டிகள் மிகுந்த வாழ்க்கை, குழந்தைகளின் மீது திணிக்கப்படும் அளவுக்கதிகமான அறிவு பாரங்கள், பணிச்சுமை, கூட்டுக் குடும்பத்திலிருந்து சிதறிய தனிக்குடும்பங்கள் என்றாகி விட்ட சோகத்தில், இந்த சோகமும் வேறு!

 தாயிடம் அன்பையும், தந்தையிடம் பண்பையும், தாத்தாவிடம் இருந்து நேர்மையும், பாட்டியிடம் நீதி நெறிக் கதைகளையும் மாமாக்களிடம் தைரியத்தையும் அத்தைகளிடம் அன்பையும் கொண்ட குழந்தைகள் இன்றைக்கு இருந்தால், அவர்கள் அதற்காகவே கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறலாம்!

 குழந்தைகள் அறிவுஜீவியாக வளர வேண்டும் என்று உறவுகளை அந்நியமாக்கி வருகிறார்கள். அத்தை, சித்தி, பெரியம்மா, மாமி, அண்ணி எல்லோருமே இன்று ஆன்ட்டிகள்தான். மாமா, சித்தப்பா, பெரியப்பா இவர்கள் எல்லோ ரும் இன்று அங்கிள்தான். பக்கத்துவீட்டில் இருப்பவர்களை உறவுமுறை சொல்லி அழைத்த நாம் இன்று அனைத்து உறவுகளையும் அங்கிள், ஆன்ட்டி என்னும் வார்த்தையில் அந்நியப்படுத்தி வைத்திருக்கிறோம்.

என்ன செய்யலாம்:

விடுமுறை என்றாலே படிப்பு, பயிற்சி, கணினி என்று இருக்கவேண்டாமே.

தொலைக் காட்சி,  மொபைல் ஃபோன் என்றும் இருக்கத்தேவையில்லை.

 வருடந்தோறும் பணிச்சுமையில் திளைக்கும்  பெற்றோர்களுக்கும் உற்சாகம் தேவை.

குழந்தைகளின் விடுமுறை நாட்களில் உறவினர், நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று இளைய தலைமுறை கைகோக்க  நட்பை புதுப்பியுங்கள். உங்கள் சுகங்களிலும், துன்பமான சூழ்நிலையிலும் நாங்கள் துணை நிற்கிறோம் என்ற நம்பிக்கை விதையை உறவுகளுக்குள் ஏற்படுத்துங்கள்.

உறவினர்களுடன் இணைந்து சுற்றுலா, சுப நிகழ்ச்சிகள், விழாக்கள் போன்ற கொண்டாட்டங்களைத்  திட்டமிடுங்கள்.

முக்கியமாக குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக உணவருந்துங்கள்.

குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேசி அவர்களது லட்சியத்தை அறிந்துகொள்ளுங்கள்.

குழந்தைகள்தான் நம் உலகம். அதேநேரம் குழந்தைகளுக்கான உலகத்தை, குழந்தைகளின் உலகமாகவே வழங்குவதுதான், உண்மையான கோடைப் பரிசு! குழந்தைகளுக்கான பரிசு என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x