Published : 08 Mar 2019 08:54 AM
Last Updated : 08 Mar 2019 08:54 AM

360:மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைக்குமா காங்கிரஸ்?

மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைக்குமா காங்கிரஸ்?

வங்கத்தில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையிலும், 2021 சட்டமன்றத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தும் வகையிலும் மார்க்சிஸ்ட் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் அல்லது குறைந்தபட்சம் தொகுதிப் பங்கீடாவது செய்துகொள்ள வேண்டும் என்று வங்க காங்கிரஸில் குரல்கள் வலுத்திருக்கின்றன. இது தொடர்பாக, ராகுல் காந்திக்குக் கடிதம் எழுதியிருக்கும் வங்க காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா, “கட்சிக்குள் இரண்டுவிதமான கருத்துகள் நிலவுகின்றன. ஒன்று, தனியாகக் களம் காண்பது; இன்னொன்று, மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது. இரண்டாவது தேர்வே பலனளிக்கும்” என்கிறார். வங்கத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி, திரிணமூல் காங்கிரஸுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது பாஜக. இந்நிலையில், தலைமை எடுக்கும் முடிவுக்காகக் காத்திருக்கிறது வங்க காங்கிரஸ்!

இமாச்சலில் வேட்பாளர் வேட்டையில் பாஜக

மக்களவைத் தேர்தலில் மீண்டும் வெற்றியை ருசித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக எத்தனைத் தீவிரமாக இருக்கிறது என்பதை இமாச்சல பிரதேசத்தில் வேட்பாளர் தேர்வில் அக்கட்சியினர் காட்டும் மும்முரம் தெளிவாக உணர்த்துகிறது. 2014 தேர்தலில் அம்மாநிலத்தின் நான்கு மக்களவைத் தொகுதிகளிலும் வென்ற பாஜக, தற்போதைய எம்.பி.க்களை மீண்டும் களமிறக்குவதா, புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதா என்று பரிசீலித்துவருகிறது. வெல்லக்கூடியவர்களுக்கே வாய்ப்பளிக்கப்படும் என்கிறார்கள் கட்சியினர். முதல்வர் ஜெய் ராம் தாக்கூர், மத்திய அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா, கட்சியின் மாநிலத் தேர்தல் பொறுப்பாளர் தீரத் சிங் ராவத் ஆகியோருடன் எம்பிக்கள், எம்எல்ஏக்களும் தலைநகர் சிம்லாவில் கூடி ஆலோசனை நடத்திவருகிறார்கள். நான்கு தொகுதிகளிலும் களப் பணியை பாஜக ஏற்கெனவே தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது!

காங்கிரஸுக்கு செக் வைக்கும் டிஆர்எஸ்!

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியில் (டிஆர்எஸ்) சேர்ந்திருப்பது தெலங்கானாவில் காங்கிரஸுக்குப் புதிய நெருக்கடி உருவாக்கியிருக்கிறது. ஆசிஃபாபாத் தொகுதி எம்எல்ஏ அத்ராம் சாக்குவும், பினாபாகா தொகுதியை எம்எல்ஏ ரெங்குல கந்த ராவும் கட்சியிலிருந்து விலகி, நேராக டிஆர்எஸ் தலைவரைச் சந்தித்து அக்கட்சியில் இணைந்திருக்கிறார்கள். கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ சந்திர வெங்கட வீரய்யாவும் டிஆர்எஸ்ஸில் சேர முடிவெடுத்திருக்கிறார். 2018-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், மொத்தம் உள்ள 119 இடங்களில் டிஆர்எஸ் கட்சி 88 இடங்களில் வென்று ஆட்சியமைத்தது. காங்கிரஸுக்கு 19 இடங்கள் கிடைத்தன. தெலுங்கு தேசம் கட்சிக்கு இரண்டே இடங்கள். அதேசமயம், காங்கிரஸுக்கு 32.32% வாக்குகள் கிடைத்ததை டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ் மறந்துவிடவில்லை. குறிப்பாக, கம்மம் மாவட்டத்தில் கணிசமான இடங்கள் காங்கிரஸுக்குக் கிடைத்தன. இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக. காங்கிரஸைப் பலவீனப்படுத்தும் நோக்கத்தில் அக்கட்சி எம்எல்ஏக்களுக்கு வலைவிரிக்கத் தொடங்கியிருக்கிறது டிஆர்எஸ்!

கோலியாத்களும் டேவிட்டுகளும்: சி.சுப்பிரமணியம்

அனுபவம் வாய்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சி.சுப்பிரமணியம், 1967 மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் பி.ஏ. சாமிநாதனிடம் 48,945 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது அன்றைக்குப் பேசப்பட்ட விஷயம். முதல்வர் பதவிக்கான தேர்தலில் காமராஜருக்கு எதிராகப் போட்டியிட்டவர்; ராஜாஜி, காமராஜர் ஆட்சிகளில் அமைச்சராக இருந்தவர். 1962 முதல் மத்திய அரசிலும் உருக்கு-சுரங்கம் மற்றும் உணவு-விவசாயம் ஆகிய துறைகளில் அமைச்சராகப் பதவி வகித்தவர் என்று பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் சி.சுப்பிரமணியம். அவரை வென்ற சாமிநாதனுக்கோ அதுதான் முதல் தேர்தல். எளிய பின்னணியைக் கொண்ட சாமிநாதன், மிகப் பெரிய தலைவரை முதல் தேர்தலிலேயே வீழ்த்திவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x