Published : 25 Mar 2019 03:35 PM
Last Updated : 25 Mar 2019 03:35 PM

கோடையே வா வா! - சமாளிக்க சத்தான டிப்ஸ்

ஜெமினி தனா

ஃபேஷன் என்பதெல்லாம் உணவு விஷயத்தில் அதுவும் இந்தக் கொளுத்தும் கோடையில் சரிபட்டு வராது.

அளவுக்கு மீறிய சாட் வகைகள் நமக்குப் பிடித்தமானதாக இருக்கலாம்.  ஆனால் கோடை வெயிலின் எரிச்சலோடு வயிறும் எரியத் தொடங்கி மேலும் மேலும் எரிச்சலையும் குடைச்சலையும்   உண்டாக்கிவிடும்.

ஜூனியர் முதல் சீனியர் வரை கோடை காலங்களில் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது மிக மிக நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆகவே, சுள்ளென அடிக்கும் வெயில் காலத்தில், உணவில் ரொம்பவே அக்கறை செலுத்துவோம்.

இதோ... இப்போதே வெயிலின் உக்கிரம் பல மாவட்டங்களில் செஞ்சுரி போட்டுக்கொண்டிருக்கிறது. ‘தாங்கலடா சாமீ’ என்று தகித்துக்கொண்டிருக்கிறோம். உடலைப் பாதுக்காக்க உணவே வழி என அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

நம் உடலானது 60 சதவிகிதம் தண்ணீரால் ஆனது என்பதை அறிவோம்தானே. உடலில் நீர் குறையும்போதுதான் பல உபத்திரவங்கள், நம்மைப் பதம் பார்க்கின்றன. குறிப்பாக, கோடை காலத்தில்தான், நீர் இழப்பு என்பது ரொம்பவே அதிகமாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால்தான், மலச்சிக்கல், அதிக வறட்சி, அதிக தாகம் என்றெல்லாம் ஏற்படுகின்றன. சில தருணங்களில், சிலருக்கு போதிய நீரில்லாமல், டீ ஹைட்ரேட் ஆகி, உயிரையே இழக்கும் அபாயமும் நேரிடும் சோகம் உண்டு.

பொதுவாகவே, தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்தவேண்டும் என்பது இயல்பான விஷயமாகவே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் வேலைக்குப் பயணமாதல், வேலை நேரத்தில் அடிக்கடி எழுந்திருக்க முடிவதில்லை, அலுவலக மீட்டிங் முதலான பல காரணங்களால் தண்ணீர் குடிப்பதையே குறைத்துக்கொள்கிறவர்கள்தான் இங்கு அதிகம். இதில் ஆண்களை விட, பெண்களே குறைவான தண்ணீரை குடிக்கின்றனர் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கோடையில், வியர்வை வழியே வெளியேறும் நீரின் அளவை சமன்செய்ய இன்னும் கூடுதலாக தண்ணீரைக் குடிக்கவேண்டும் என்பது அவசியம். அதேபோல், நீர்ச்சத்து சமன் செய்யும் அதேவேளையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதும் அடிக்கடி எடுத்துக்கொள்வதும் பலம் சேர்க்கும்.

 

இளநீர், ஜீரகம், எலுமிச்சை, நெல்லி :

  டீ, காஃபி போன்ற பானங்களை கோடைக்காலத்தில் தவிர்ப்பது நல்லது. இளநீர் ஆல் டைம் சூப்பர்ஹிட் மாதிரி எப்போதும் கைகொடுக்கும். வெளியே செல்லும்போது இளநீரை எங்கு பார்த்தாலும் தவிர்க்காமல் பருகுங்கள். குளுக்கோஸ், வைட்டமின், அமினோ அமிலங்கள், தாதுச்சத்துகள், கால்சியம் சத்துக்களோடு தாகம் தணிக்கும் வல்லமையும் இளநீருக்கு உண்டு. பெயரில்தான் இளநீர். சத்துகளைத் தருவதில் பெருநீர். உடலையும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.  கட்டுப்பாட்டில் உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்றது இளநீர்.

  ஜீரகம், எலுமிச்சை, நெல்லி தயிர், பனைவெல்லம் ஐந்தும் எப்போதும் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக வீட்டில் வைத்திருந்தால் மட்டும் போதாது. தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடித்தாலும்  தணியாத உடல் வெப்பம்  தண்ணீரைக் கொதிக்க வைத்து ஜீரகம் சேர்த்து  குடிக்கும்போது குளிர்ச்சி அடைந்து தாகம் தீர்க்கிறது. மண்பானையில் மெல்லியதுணியைச் சுற்றி கொதிக்க வைத்த ஜீரகத்தண்ணீரை குடித்தால்  ஃப்ரிட்ஜ் தண்ணீரே தேவைப் படாது.

ஃப்ரிட்ஜுக்குள்  விதவிதமான கலரில் நிரப்பி வைக்கப்படும் குளிர்பானங்களை கட்டாயம் தவிர்த்துவிடுங்கள். எலுமிச்சைச் சாறைப் பிழிந்து உப்பும் சர்க்கரையும் சேர்த்து குடித்தால்   நீர் சுளுக்கு பிரச்சினைகளிலிருந்தும் உடல் உஷ்ணத்திலிருந்தும் விடுபடலாம்.

 நெல்லியும் எலுமிச்சையும் கலந்து சாறாக்கி குடிக்கலாம்.  மோருடன் நெல்லி அரைத்து குடிக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் வெயிலில் செல்லும் போது மயக்கம் உண்டாகும்.   சிட்ரஸ் பழங்களான  இவற்றில் வைட்டமின் சி அதிகமிருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

 தினமும் ஒரு தம்ளர் நீர்மோர்  உங்களை எரிச்சலிலிருந்து பாதுகாக்கும்.  ஒரு தம்ளர் மோரில் நான்கு தம்ளர் நீர் சேர்த்து அருந்துவதுதான் நீர்மோர். இரவு வடித்த சாதத்தில் நீரை ஊற்றி மறுநாள் காலை வெறும் வயிற்றில் நீராகாரம் அருந்தினாலும் வயிற்றில்  குளிர்ச்சி நீண்டநேரம் குடியிருக்கும்.  

     ஒரு சொம்பு பானைத்தண்ணீரில் சிட்டிகை ஏலத்தூள் சேர்த்து  பனைவெல்லத்தைப் பொடித்துக் குடித்தால் சிறுநீரகம் கழிக்கும் போது எரிச்சல் இருக்காது.  இத்தகைய பானங்கள் உடலில்  நீரிழிப்பையும் தடுக்கிறது. ஆற்றலையும் அதிகரிக்கிறது.

நீர்ச்சத்து காய்கறிகள்:

     வெயிலில்  தொண்டைக்கு குளிர்ச்சியாக குடிப்பதையே விரும்புவதால் உணவில் அவ்வளவு ஈர்ப்பு இருக்காது.  தினம் ஒரு  காய்கறிகளை சாலட் ஆக செய்து  சாப்பிடலாம். வைட்டமின் ஏ,பி,சி,டி, ஈ, பி -12, பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம்,  மெக்னீஷியம், பீட்டா கரோட்டின் என்று அனைத்து சத்துக்களும்  கலந்திருக்கும் நீர்ச்சத்து மிக்க காய்கறிகள், வாட்டி வதைக்கும் கோடையிலிருந்து  உங்களை  ஃப்ரெஷ்ஷாகவே வைத்திருக்கும்.  

எந்தக் காய்கறியாக இருந்தால் என்ன.. வெள்ளரிக்காய் இல்லாத சாலட் இனிக்காது. வெள்ளரியைத் துண்டாக்கி நான்கை சாலட்டிலும், இரண்டை  கண்களின் மீது வைத்தும் ஜில் ஆக்கி கொள்ளலாம். கேரட், பீட்ரூட் போன்றவற்றைச்  சாறாக்கி குடிக்கலாம்.  இரவு வடித்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி பழைய சாதத்தில் தயிர், சாம்பார் வெங்காயம்  சேர்த்து சாப்பிட்டால் வயிறு அன்று முழுவதும் குளிர்ச்சியாக இருக்கும். செரிமானமும் எளிதாகும்.  எல்லாவற்றையும் விட  சத்து மிக்க பானம் கேழ்வரகு, கம்பங் கூழ். வாரம் இரு முறையாவது குடியுங்கள். 

பொரியல், வறுவல் வகைகளுக்கு இந்தக் கோடைகாலத்தில் டாட்டா சொல்லுவது நல்லது. புளிக்குழம்பு, காரக்குழம்பு, மசாலாக்கள் நிறைந்த குழம்பு, பருப்புக் குழம்பு அதிகம் பயன் படுத்துவதைத் தவிர்த்து  முள்ளங்கி, கோஸ், சுரக்காய், புடலங்காய், புரோக் கோலி, பீர்க்கங்காய், குடைமிளகாய், வாழைத்தண்டு  என நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளை தினம் ஒன்றாக கூட்டாக செய்து சாப்பிடலாம். சாம்பார் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.

தர்பூசணி, நுங்கு,  வெள்ளரி பழங்கள்:

கோடைக்காகவே இறைவன் கொடுத்த வரம் தர்பூசணி. முழுக்க முழுக்க நீர்ச் சத்து மிக்க பழம்.  எல்லோருக்கும் பிடித்த பழம்.  தினமும் சாப்பிடலாம். எந்த விதமான ராசயனமும் இல்லாமல் இருக்கும்  கோடை அமிர்தம் நுங்கு. பதநீர்.  உடலுக்கும் குளிர்ச்சி.. உள்ளத்துக்கும் குளிர்ச்சி.

பசியைத் தூண்டி செரிமானத்தை எளிதாக்கும். மலச்சிக்கல் பிரச்சினையை மேலும் சிக்கலாக்காமல் தீர்க்கும் அருமருந்து இது. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். நுங்கு நீரை  முகம், கை,கால்களில் தடவினால் கோடையிலும் சருமம் மின்னும். குழந்தைகளை தொந்தரவு பண்ணுகிற வேனிற் கட்டிகள்.. வியர்க்குரு போன்றவையும் ஓடிவிடும்.

  முலாம், வெள்ளரி பழங்களை ஜூஸ் செய்யும் போது  வெள்ளைச் சர்க்கரை கலக்காமல்  வெல்லத்தைப் பொடித்துப்  போட்டு சாப்பிடுவது நல்லது. ஆரஞ்சு, திராட்சை, கொய்யா,  மாதுளை,  சாத்துக்குடி, பப்பாளி. சப்போட்டா பழங்களை தினம் ஒன்றாக எடுத்துக்கொள்ளலாம். கூடுமானவரை பழங்களை   சர்க்கரை சேர்த்து கூழாக்காமல் அப்படியே தோலோடு சாப்பிடுவதே நல்லது  என்கிறார்கள்   டயட்டீஷியன் வல்லுநர்கள்.

காலையில் வயிற்றை நிரப்ப ஜீரக நீர், திரவ ஆகாரத்துடன் எளிதில் ஜீரணமாக்கும் உணவுவகைகள், தினம் ஒரு பழச்சாறு, பழங்கள், வெள்ளரி கலந்த காய்கறி சாலட்கள், வியர்வையை உறிஞ்சும் பருத்தி ஆடைகள், தினசரி இரு வேளை  குளியல் இவையெல்லாம் கடைப்பிடித்தால்  நெருப்பை கக்கும் கோடையை ஜில்லுன்னு சமாளிக்கலாம்.

‘நீங்க வர்றபடி வாங்க, நாங்க இருக்கிறபடி இருக்கிறோம்’ என்று கோடையை பாதுகாப்புக் கவசங்களுடன் எதிர்கொள்வோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x