Published : 12 Feb 2019 08:51 AM
Last Updated : 12 Feb 2019 08:51 AM

ஆய்வறிஞர் சலபதிக்கு அறிவுலகம் நடத்திய இருநாள் விழா

வரலாற்றுப் பேராசிரியர் என்ற ஒற்றை அடையாளத்துக்குள் சுருக்கிவிட முடியாத ஆளுமை ஆ.இரா.வேங்கடாசலபதி. தமிழகத்தின் சமூக, பண்பாட்டு வரலாற்றைத் தேடித் தேடிப் பதிவுசெய்பவர், தமிழகத்தின் நினைவிலிருந்து அகன்றுபோய்விட்ட அறிவாளுமைகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்திவருபவர், கவிதையிலும் புனைவிலும் புதிய திசைவழிகளை உருவாக்கிய பாரதியையும் புதுமைப்பித்தனையும் வரலாற்றுக் கோணத்தில் ஆராய்ந்தவர், புதுமைப்பித்தன் படைப்புகளைச் செம்பதிப்பாக வெளியிட்டவர், தமிழ்த்தாத்தா உவேசாவின் பதிப்பு முயற்சிகளை ஆராய்ந்தவர், உவேசாவின் கடிதங்களைப் பெருந்தொகுப்புகளாகப் பதிப்பித்திருப்பவர், சுந்தர ராமசாமியின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர், வரலாற்றுப் புலத்துக்கு வெளியே தமிழ் இலக்கியத்தையும் சமகால அரசியலையும் பற்றி எழுதுகின்ற துறைகளிடை ஆய்வுகளின் சமகாலத் தமிழ் முன்னுதாரணம்.  இந்தப் பட்டியலில் விடுபடல்களும் இருக்கின்றன என்பதே சலபதியின் விரிந்த பரந்த ஆய்வுவெளிக்கு சான்று. சலபதியின்  50-வது பிறந்த நாளையொட்டி, அவரது பங்களிப்புகளைப் பற்றி விரிவும் ஆழமும் என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம் பிப்.8 மற்றும் 9-ம் தேதிகளில் சென்னையில் நடந்தது. ‘காலச்சுவடு’, ‘கடவு’ மற்றும் ‘தி இந்து லிட் ஃபார் லைப்’ ஆகியவை இணைந்து இக்கருத்தரங்கை நடத்தின.

கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த முதல்நாள் நிகழ்வில் வே.வசந்திதேவி, கோபாலகிருஷ்ண காந்தி, ராமச்சந்திர குஹா, ஸ்ரீநாத் ராகவன், நிர்மலா லக்‌ஷ்மண், டி.எம்.கிருஷ்ணா, முகம் மாமணி ஆகியோர் உரையாற்றினர்.  ‘காலச்சுவடு’ கண்ணன் வரவேற்புரை கூற, தேவேந்திர பூபதி நன்றியுரையாற்றினார்.

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வே.வசந்திதேவி அப்பல்கலைக் கழகத்தில் ஆ.இரா.வேங்கடாசலபதி பணியமர்த்தப்பட்டதைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.  ‘‘விரிவுரையாளராகச் சலபதி தேர்வுசெய்யப்பட்டபோது  ‘யாரேனும் கருத்துக்கூற விரும்புகிறீர்களா?’ என்று குழுவினரிடம் கேட்டேன். அதற்கு, ‘நேரத்தை வீணாக்க வேண்டாம். சரியான முடிவு’ என்று மிகுந்த மனநிறைவுடன் கூறினார்  நியமனக் குழுவில் இடம்பெற்றிருந்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி செங்கோட்டுவேலர். வேறு எவருக்கும் அப்படி அவர் சொன்னதில்லை. ஒரு சரியான நபரைப் பல்கலைக்கழகம் தவறவிட்டுவிடக் கூடாது என்ற அக்கறை அவரது அவசரத்தில் வெளிப்பட்டது’’ என்றார் வசந்திதேவி.

மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, ‘‘மகாகவி பாரதியார் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு ஆங்கிலத்தில் எழுதிய கடிதங்கள், பாரதியின் எழுத்துகள் தொகுப்பில் இல்லை. அவ்வாறு தொகுக்கப்படாத பாரதியின் எழுத்துக்களை தொகுத்த பெருமை சலபதியைச் சாரும். பாரதி ஆங்கிலத்தில் எழுதிய அந்தக் கடிதங்களை அவர் தற்போது தமிழில் மொழிபெயர்த்து ‘பாரதி கருவூலம்’ என்ற நூலாக வெளியிட்டுள்ளார். அவர் எழுதிய நூல்களிலேயே எனக்குப் பிடித்த நூல் இது’’ என்று குறிப்பிட்டார்.

வரலாற்றாய்வாளர் ராமச்சந்திர குஹா பேசும்போது தன்னுடைய ‘மேக்கர்ஸ் ஆஃப் இந்தியா’ நூலில் சலபதியின் பங்களிப்பை நினைவுகூர்ந்தார். ‘‘புத்தகத்தில் சேர்ப்பதற்காகப் பெரியாரின் எழுத்துகளைச் சலபதியிடம் கேட்டேன். அதற்காக அவர் பெரியாரின் எழுத்துகளைத் தானே தேர்ந்தெடுத்து, மொழிபெயர்த்துக் கொடுத்தார். இத்தகைய பெருந்தன்மை ஆய்வாளர்களுக்கிடையே மிக அரிதானது. சலபதி மொழிபெயர்த்துத் தந்த பெரியாரின் எழுத்துகளை என் 82 வயது அம்மா படித்துவிட்டு, பெண்ணியவாதி ஆகிவிட்டார்’’ என்றார்.

ஊடகவியலாளர் ஸ்ரீநாத் ராகவன், ‘‘பெரும்பாலும் எல்லோரும் சலபதியின் உள்ளடக்கப் பெறுமதியைப் பாராட்டுவார்கள். நான் அவரது ஆராய்ச்சி முறையியலை முக்கியமாகக் கருதுகிறேன். ஒருமுறை சர்வபள்ளி கோபாலின் கட்டுரைகளைத் தொகுத்திருந்தேன். அதைப் படித்த சலபதி, கோபாலுக்கு இருந்த பண்பாட்டுக் கருத்தாக்கத்தைப் பற்றிக் கேள்வி எழுப்பினார். அது எனக்குச் சிறப்பானதாகப் பட்டது. சமூக வரலாற்று முறையியலில் உற்பத்தியின் வரலாறு பற்றியே பேசுவது வழக்கமான நடைமுறை. நுகர்வின் வரலாறு பற்றிச் சலபதி பேசுவது இந்திய அளவில் புதிது’’ என்று சலபதியின் ஆய்வு முறையியலை மதிப்பிட்டார்.

‘தி இந்து’ குழும இயக்குநர் நிர்மலா லக்‌ஷ்மண், ‘‘சலபதியின் அறிமுகம் எனக்கு ராமச்சந்திர குஹா வழியே கிடைத்தது. அறிவை நோக்கிய சலபதியின் அபாரத் தேடலும் அற்புதமான எழுத்தாற்றலும் எனக்கு வியப்பு ஊட்டுபவை. சென்னை குறித்து நான் எழுதிய நூல் சலபதியின் உதவியின்றி சாத்தியமாகியிருக்காது. என் அருமைத் தம்பியை மனமார வாழ்த்துகிறேன்’’ என்று வாழ்த்தினார்.

பாடகர் டி.எம்.கிருஷ்ணா பேசும்போது, ‘‘சலபதியின் நூல்களைப் படிக்கும்போது, அவர் ஒரு கட்டியக்காரன் என்று எனக்குத் தோன்றும். கூத்து, அரூபக் கதைகளைப் பேசும். கூத்து பார்ப்பவர்கள் யதார்த்தத்தின் பக்கம் இருப்பார்கள். அரூபம், யதார்த்தம் இரண்டையும் கட்டியக்காரன் மாறி மாறிக் கேள்விகளுக்கு உட்படுத்துவார். இறுதியில் அரூபமும் யதார்த்தமும் கட்டியக்காரனால் இணைக்கப்பட்டிருக்கும். சலபதி கடந்த கால நிகழ்வுகளையும் நிகழ்காலச் சமூகத்தையும் ஆய்வுசெய்து, அவற்றை ஒரு புள்ளியில் இணைத்துவிடுகிறார். எனக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. உரையாடல்களில் அவரிடமிருந்து வரும் ஒரே ஒரு கூற்றும் என்னை அன்று முழுதும் தூங்கவிடாது. ஏனென்றால், உண்மை அதில்தான் இருக்கும். சலபதி சங்கீதத்தை நன்கு உள்வாங்கத் தெரிந்தவர். அதனால்தான் அவரால் பொதுக்கருத்துகளுடன் தொடர்ந்து உறவாட முடிகிறது’’ என்று சலபதியுடனான நட்பின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

‘முகம்’ மாமணியின் உரை சலபதியின் பதின்பருவ எழுத்தார்வத்தைப் பற்றியதாக அமைந்தது.   ‘‘சலபதி எனக்கு அறிமுகமானபோது அவருக்கு 15 வயது இருக்கலாம். அவர் சக மாணவர்கள் சிலருடன் என்னிடம் வந்து, “சார், நாங்கள் ஒரு பத்திரிகை தொடங்க விரும்புகிறோம். உங்கள் உதவி தேவைப்படுகிறது” என்றார். “அதெல்லாம் பெரிய விஷயம்ப்பா. பணமும் நிறைய செலவாகும்” என்று அறிவுரை கூறி அனுப்பினேன். சில நாட்களிலேயே சலபதி, “நாங்கள் பத்திரிகை ஆரம்பிச்சுட்டோம் சார்” என்று மகிழ்ச்சியுடன் ஒரு பத்திரிகையைக் கொண்டு வந்து கொடுத்தார். அதன் பெயர் ‘காட்டாறு’. அதைத் தொடர்ந்து நான் ‘முகம்’ இதழைத் தொடங்கியபோது, சலபதி அதன் துணை ஆசிரியராகப் பொறுப்பு வகித்தார்.  அப்போது ‘ஆனந்த விகடன்’ இதழில் ‘15 வயதில் துணை ஆசிரியர்’ என்று சலபதியைப் பற்றிய செய்தி வந்தது. நான் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம் சலபதி சென்று வந்துகொண்டிருக்கிறார்’’ என்று சலபதியை வாழ்த்தினார் அவரது முதல் ஆசிரியர்.

அமர்வுகள் ஆறு

பிப்.9 அன்று தமிழ் இணையக் கல்விக்கழக அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கத்தின் ஆறு அமர்வுகளிலும் சலபதியின் பன்முகப் பரிமாணங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன. இரண்டாம் நாள் நிகழ்வின் தொடக்கவுரை ஆற்றிய கவிஞர் உ.சேரன், “பல்வேறு தளங்களில் தங்கள் ஆய்வைக் கொண்டுசெல்ல வேண்டிய கடப்பாடு ஆய்வறிஞருக்கு உள்ளது. அந்த விஷயத்தில் சலபதி பிற ஆய்வாளர்களுக்கு முன்னோடி. சலபதியின் இருமொழிப் புலமை உலக அரங்கில் ஆய்வை எடுத்துச் செல்ல உதவுகிறது” என்றார். புதுமைப்பித்தனின் மகள் தினகரி சொக்கலிங்கம் வாழ்த்துரை வழங்கினார். சிறப்புரை வழங்கிய சு.தியடோர் பாஸ்கரன், “ஆஷ் கொலை, பாரதி வரலாறு போன்றவற்றில் திரும்பத் திரும்ப ஒரே தகவல்களே சொல்லப்படுகின்றன. சலபதி இவ்வரலாற்றின் உண்மையான பகுதிகளைக் கூறுகிறார். புதிய கேள்விகள், தரவுகள், நவீனத் தொழில்நுட்பம் இவற்றை உட்படுத்தி சலபதி போல தமிழில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றார்.

அமர்வு 1: பங்களிப்பு

முதலாம் அமர்வில் பேசிய பா.மதிவாணன், “சொற்களின் மீது பிரக்ஞை மிக்கவர் சலபதி. அவரது நூலை வாசித்து முடிக்கும்போது வரலாறு நமக்குள் இறங்கியிருக்கும்” என்றார். சலபதியின் மொழி ஆளுமை, விவரிப்பு, ஆய்வுத்திறம், தமிழ் - ஆங்கிலப் புலமை போன்றவற்றை நூல் பகுதிகளோடு குறிப்பிட்டுப் பேசினார் கா.அ.மணிக்குமார்.  “ஆய்வு மாணவர்களுக்கு வாசிப்பை வலியுறுத்துபவர். போதிய வாசிப்பு இல்லாமல் ஆய்வை மேற்கொள்ள அவர் அனுமதிப்பது இல்லை” என்று குறிப்பிட்டார் ஜெ.பாலசுப்ரமணியம்.  பெருமாள் முருகன் பேசும்போது, “சலபதி இதுவரை 17 நூல்கள் பதிப்பித்துள்ளார். நவீனப் பதிப்பு நெறிமுறையைத் தமிழுக்குக் கொண்டுவந்தது அவர்தான்” என்று கூறினார்.

அமர்வு 2 : மதிப்பீடு

இரண்டாவது அமர்வு, சலபதியின் ஆய்வு நூல்கள் பற்றிய மதிப்பீடு அரங்கமாக அமைந்தது.  “நாட்டார் வழக்காற்றியலின் கோட்பாட்டுடன் அமைக்கப்பட்ட நூல் ‘முச்சந்தி இலக்கியம்’. உயர்வு மனப்பான்மை மொழிகள் நாட்டார் வழக்காற்றியலின் எழுத்துகளை ஒதுக்கும் நிலை உருவானதை சலபதி அந்நூலில் விவரிக்கிறார்’’ என்றார் அ.கா.பெருமாள்.  சலபதியின் முன்னுரைகளைப் பற்றி சுடர்விழியும் அவருடைய தனித்தமிழ் நடையைப் பற்றி மண்குதிரையும் குறிப்பிட்டுப் பேசினார்கள். ஸ்டாலின் ராஜாங்கம், சலபதியின் ஆய்வுகளில் தலித்திய பார்வை கடந்த காலங்களில் மாறி வந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். ‘பன்முகப் பரிமாணம்’ என்ற தலைப்பில் பேசிய அரவிந்தன்,  ‘‘சலபதிக்கு சினிமா, கிரிக்கெட் குறித்து நல்ல பார்வை உண்டு. ஆனால் அதை அவர் எழுத்தில் வெளிப்படுத்தியது இல்லை. வருங்காலத்தில் அதை அவர் செய்ய வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

அமர்வு 3: எங்கள் ஆசிரியர்

இந்த அமர்வில் சலபதியின் மாணவர்கள் தங்களது கல்வி மற்றும் ஆய்வுப் பணி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டது இக்கருத்தரங்கின் முத்தாய்ப்பாக அமைந்தது. பத்திரிகையாளரும் ‘செம்மை’ செயற்பாட்டாளருமான ஆனந்த் செல்லையா,  “மாணவர்களை நியாயமான ஊதியத்துடன் வேலையில் அமரச்செய்வதைத் தன் பொறுப்பாகவே நினைப்பவர் அவர்” என்றார். பேராசிரியர் ஆ.நீலகண்டன், சலபதியின் ஆய்வுப் பயணத்தின்போதான மனிதாபிமானச் செயல்பாடுகளை நினைவுகூர்ந்தார். கண்டிப்பு கலந்த ஆய்வு வழிகாட்டலைப் பேராசிரியர் ரவிச்சந்திரனும், வேலையில்லாமல் சிரமப்படும் தனது மாணவர்களுக்கு அவர் செய்த உதவிகளை விரிவுரையாளர் குருசாமியும் நினைவுகூர்ந்தார்கள்.

அமர்வு 4: நட்பும் மதிப்பும்

“ஆங்கிலத்தில் காதல் கவிதைகள் எழுதிய சலபதியை என்னைப் போல சிலர் மட்டுமே அறிவார்கள்” என்று அரங்கில் கலகலப்பூட்டினார்  கலை விமர்சகர் இந்திரன்.  “எங்களிடையே கருத்து கருத்தாக இருக்கிறது. நட்பு நட்பாக இருக்கிறது. அதுதானே உண்மையான அன்பு” என்றார் ச.தமிழ்ச்செல்வன். “சலபதி எல்லோருடனும் எல்லா நேரங்களிலும் இருக்கிறார். அவருக்கு எழுத எப்படி நேரம் கிடைக்கும் என்று தெரியவில்லை” என்று வியந்தார் எழுத்தாளர் களந்தை பீர் முகமது. ஊடகவியலாளர் கவிதா முரளிதரன், “சலபதியிடமிருந்து மொழிபெயர்ப்புகள் குறைவான எண்ணிக்கையில் வந்திருப்பினும், அவை தரத்தில் நிறைவானவை” என்று மதிப்பிட்டார். புதுமைப்பித்தன் கதைகள் செம்பதிப்பில் பிழை கண்டு மின்னஞ்சல் அனுப்பியமைக்கு நன்றி தெரிவித்த சலபதியின் குணத்தை வியந்து பேசினார் கிருஷ்ணபிரபு. சலபதியின் நகைச்சுவை உணர்ச்சியைப்  பகிர்ந்துகொள்ளும் வகையில் அமைந்திருந்தது ‘விடியல்’ கே.எம்.வேணுகோபாலின் பேச்சு.

அமர்வு 5 : மொழிபெயர்ப்புகள்

சலபதியின் மொழிபெயர்ப்புகளைப் பற்றியும் அதன் சிறப்பம்சங்களைப் பற்றியும் விவாதித்தது ஐந்தாம் அமர்வு. “பாரதியின் கவிதைகளுக்கான காப்புரிமை வழக்கில் விஸ்வநாதய்யரின் கடிதம் ஓர் இலக்கிய ஆவணம். அதன் தன்மை கொஞ்சமும் மாறாமல், ‘ஹூ ஓன்ஸ் தட் சாங்?’ நூலில் சலபதி ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்” என்று பாராட்டினார் ஆர்.சிவகுமார். பாரதியின் வறுமைக்குக் காரணமாக அன்றைய நடுத்தர வர்க்கத்தின் பொருளாதார மேம்பாடு அடைந்திராத காலம் என்ற சலபதியின் கருத்தை வழிமொழிந்தார் மருதன்.  “சலபதியின் ‘தமிழ் கேரக்டர்ஸ்’ நூல், தமிழ்நாட்டுக்கு வெளியே இருப்பவர்களை, அதிலும் குறிப்பாக இளைய தலைமுறையினரை இலக்காகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு ஏன் தமிழ்நாடாக இருக்கிறது என்பதை சலபதி அந்நூலில் மிக அழகாகக் கூறியிருக்கிறார்” என்று சுட்டிக்காட்டினார் மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி.  “வேறு யாரும் தொடாத கருப்பொருட்கள்  மீது வெளிச்சம் பாய்ச்சுவதில் நிபுணர்” என்று பெர்னார்ட் சந்திரா பாராட்டினார்.

 அமர்வு 6: உரைகள்

“அறிவுப்புலத்தைச் சேர்ந்தவருக்கும் புனைவுப்புலத்தைச் சேர்ந்தவருக்கும் இடையிலான ஒவ்வாமையை இல்லாமல் செய்தவர் சலபதி” என்று கவிஞர் சுகுமாரன் குறிப்பிட்டார். தனது ஆய்வுகளுக்கு சலபதி அளித்த ஆலோசனைகளைப் பற்றி பேசினார் பிரான்சிஸ் கோடி.  “பதிப்பியல் முயற்சிகளில் ஈடுபட்டுவரும் என்னைப் போன்றவர்களுக்குச் சலபதியின் ஒவ்வொரு வார்த்தையும் பாலபாடம்” என்றார் அவருடைய ஆய்வுத்தோழர் ப.சரவணன். “தமிழ்ப் படைப்புகளை மொழி கடந்து பலரிடம் கொண்டுசேர்க்கும்  சலபதி குறித்து நெகிழ்ச்சியடைகிறேன்” என்று பாராட்டினார் ய.மணிகண்டன். “சலபதியின் நூல்கள் 41.

இதில் 27 நூல்களைத் தன் ஆசிரியர்களுக்குச் சமர்ப்பித்திருக்கிறார். சாதி பேதம் இல்லாத சமர்ப்பணங்கள்” என்றார் சலபதியின் மற்றொரு ஆய்வுத்தோழர் பழ.அதியமான்.

ஆ.இரா.வேங்கடாசலபதியின் ஏற்புரை நிகழ்வின் உச்சம். “என்னை நிமித்தமாகக் கொண்டு தமிழ்ப் பேராளுமைகளுக்கு எடுத்த விழாவாக எல்லோர் மனங்களிலும் இந்தக் கருத்தரங்கம் நிலைத்திருக்கும் என்றே கருதுகிறேன்.  முகம் மாமணி, த.கோவேந்தன், சுந்தர ராமசாமி, ஆ.சிவசுப்பிரமணியன், எம்.எஸ்.எஸ்.பாண்டியன், வே.வசந்திதேவி, வி.கே.நட்ராஜ் ஆகியோரை இவ்வேளையில் நினைத்துக்கொள்கிறேன்” என்றார் மிகவும் தன்னடக்கத்தோடு. அவருடைய ஆய்வுப் பயணத்திலும் பதிப்புப் பணியிலும் இன்னும் பல ஆய்வுச் சாதனைகளை நிகழ்த்த, அவருக்கு இந்த விழா உற்சாகத்தை வழங்கட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x