Published : 28 Feb 2019 10:08 AM
Last Updated : 28 Feb 2019 10:08 AM

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமே உண்மையான ஜனநாயகம்

தமிழகத்தில் சுமார் ஐந்தரை சதவீத வாக்கு வங்கியைப் பெற்றிருக்கும் பாமகவால் பிரதானக் கட்சிகளோடு கூட்டணி சேராமல் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது என்றால், அது பாமகவின் தவறு மட்டுமா? தனித்து நின்று ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே வெற்றிபெற முடிந்த தேமுதிக கூட்டணி சேர்ந்து எதிர்க்கட்சியாகவும் முடியும் என்றால் வாக்குகள் என்பது வெறும் கூட்டல் கழித்தல் மட்டும்தானா? தேர்தல் என்பது அதில் பங்கேற்கும் சகல தரப்பு வாக்காளர்களையும் பிரதிபலிக்க வேண்டாமா?

தீர்க்கமான தொலைநோக்குப் பார்வையோடு தேர்தல் ஜனநாயகத்தில் பங்கேற்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் வாக்கு வங்கி குறைவானதே என்றாலும் சிதைவுறாத வலுவான ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. இருந்தும் ஏன் அவர்களும்கூட கூட்டணிக்காக பிரதான கட்சிகளுக்குப் பின்னால் நிற்க வேண்டியிருக்கிறது?

தேர்தல் முறையின் பிரச்சினை

இந்தியாவில் எந்த அரசியல் கட்சி என்றாலும், அக்கட்சியின் கொள்கைகளும் செயல்திட்டங்களும் எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருந்தாலும் அந்தக் கட்சி தேர்தலில் நிறுத்தும் வேட்பாளர்கள் வெற்றிபெற்றால் மட்டுமே நாடாளுமன்றத்திலோ சட்டமன்றங்களிலோ தனது குரலை ஒலிப்பதற்கான வாய்ப்பைப் பெறமுடியும். எனவே, இந்தப் பிரச்சினை கூட்டணி சேர்வதற்காக அலைந்துகொண்டிருக்கும் அரசியல் கட்சிகளின் பிரச்சினை அல்ல. இந்திய ஜனநாயக முறையின், தனிநபரை மையப்படுத்தும் அதன்வாயிலாக இருதுருவ அரசியலைக் கட்டமைக்கும் இந்தியத் தேர்தல் முறையின் பிரச்சினை.

இந்தச் சிக்கலை அரசியல் கட்சிகள் புரிந்துகொண்டிருக்கின்றனவா என்பதும்கூட சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது. மற்ற அரசியல் கட்சிகளைக் காட்டிலும் தலித் கட்சிகள் இந்தப் பிரச்சினையை உணர்ந்துகொண்டிருக்கின்றன என்று சொல்ல முடியும். அதனாலேயே தனித்தொகுதிக்கு மாற்றாக இரட்டைத் தொகுதி முறை வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்துவருகின்றன. ஆனால், அரசியல் பொதுவெளியிலிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வதற்குப் பதிலாக அக்கட்சிகள் தேர்தலில் பெறும் மொத்த வாக்குகளின் அடிப்படையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைக்கு கோரிக்கை விடுக்கலாம். மற்ற கட்சிகளுக்கும்கூட அதுவே சரியான தீர்வாக இருக்க முடியும்.

ஒரு வாக்கு என்றாலும்கூட அது வெற்றியைத் தீர்மானிக்க வல்லது என்கிற தற்போதைய தேர்தல் முறையே, இன்று ஜனநாயகத்துக்குத் தீங்காக மாறிக்கொண்டிருக்கிறது. வாக்குகளைப் பெறுவதற்காக எந்த உத்தியையும் நாடலாம், பணம் கொடுக்கலாம், மது பாட்டில்களை விநியோகிக்கலாம் என்று சகலவிதமான கேடுகளும் பரவிவருவதற்கு அதுவே காரணமாக இருக்கிறது. தேர்தலில் வெல்லும் கட்சிகள் அனைத்துமே 50%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுவிடுவதில்லை. வெற்றிபெறும் கட்சிக்கும் தோல்வியடையும் கட்சிக்கும் இடையில் மிகப் பெரிய வாக்கு வித்தியாசங்களும் இருப்பதில்லை. தோல்வியைச் சந்திக்கும் கட்சிகளின் வேட்பாளர்கள் எவ்வளவு வாக்குகள் பெற்றாலும் அதற்கு எந்த மதிப்புமே இல்லை என்பது மக்களின் மன உணர்வுகளை முழுமையாகப் பிரதிபலிப்பது ஆகாது.

இருதுருவ அரசியல்

இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்கிற அதேவேளையில் அது பல கட்சி ஆட்சிமுறையை ஏற்றுக்கொண்டுள்ள நாடு. எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கு உரிமையுண்டு, கட்சி சாராத சுயேச்சைகளுக்கும் அந்த உரிமையுண்டு என்றெல்லாம் பெருமை பேசிக்கொள்கிறோம். ஆனால், பல கட்சிகள் தேர்தலில் பங்கேற்றாலும் சிறிய கட்சிகள் தனித்து நின்று வெற்றிபெறுவதற்கான வாய்ப்பும் சூழலும் அரிதினும் அரிதாகவே அமைகிறது. இந்திய அரசியல் எப்போதும், இருதுருவ அரசியல் கலாச்சாரத்திலேயே தேங்கிப்போய் நிற்கிறது. வெவ்வேறுபட்ட அரசியல் கோட்பாடுகளைப் பேசவும் விவாதிக்கவும் பிரச்சாரம் செய்யவும் அனுமதிக்கப்படும் ஒரு நாட்டில் அவற்றுக்கு நாடாளுமன்றத்திலோ சட்டமன்றங்களிலோ உரிய பிரதிநித்துவம் கிடைப்பதில் இன்னமும் கண்ணுக்குத் தெரியாத தடைகள் இருக்கின்றன.

இன்றைய நிலையில் தேசிய அளவில் பாஜக - காங்கிரஸ், தமிழகத்தில் அதிமுக - திமுக என்பதாகவே அரசியல் களம் சுருங்கிப்போய் நிற்கிறது. மூன்றாவது அணிக்கு முயற்சி செய்த கட்சிகள், ஏற்கெனவே ஆட்சியிலிருந்த கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்திய கட்சிகள் என எல்லாமும் தேர்தல் நெருங்க நெருங்க மீண்டும் இந்தக் கட்சிகளுடன் ஏதோவொரு காரணத்தைச் சொல்லி கூட்டுசேர்ந்துகொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், அது தங்களுடைய தவறு அல்ல, தேர்தல் அமைப்பின் தவறு என்று விமர்சிக்க அந்தக் கட்சிகள் ஏன் தயங்குகின்றன?

பிரதானக் கட்சிகள் ஒருபோதும் அப்படி பேசப்போவதில்லை. பெரிய அளவில் வாக்கு வித்தியாசங்கள் இல்லாமல், மாறி மாறி ஆட்சியில் அமரும் வாய்ப்பை அக்கட்சிகள் அனுபவித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், மற்ற கட்சிகள் அனைத்துமே தங்களது பிரதிநிதித்துவ இழப்புக்கான காரணத்தை வெறும் கூட்டணி விஷயமாக மட்டுமே சுருக்கிப்பார்க்கின்றன?

மாறும் நிலைப்பாடுகள்

அதிக வாக்கு பெற்றவர் வெற்றி பெற்றவர் என்ற கணக்கு, தேர்தல் நடைமுறையை எளிமைப்படுத்துவதால் அதுவே தொடர வேண்டும் என்ற நியாயத்தை இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீட்டித்துக்கொண்டிருக்கப் போகிறோம்? தற்போதைய நடைமுறைக்கு ஆதரவாக வாதிட்ட தேர்தல் அதிகாரிகளும்கூட தங்களது கருத்துகளை மாற்றிக்கொண்டுவிட்டார்கள். 2014 தேர்தலில் 20% வாக்குகளைப் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. இத்தனைக்கும் அதிக வாக்குகளைப் பெற்ற மூன்றாவது கட்சி இது. பகுஜன் சமாஜ் கட்சியின் தோல்விக்குப் பிறகு, முன்னாள் தேர்தல் ஆணையர் ஒய்.எம்.குரேஷி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கிறார். “இது ஜனநாயகம் அல்ல. இது தொடர்பாக ஒரு தேசிய விவாதத்தைத் தொடங்க வேண்டிய நேரம் இது. ஜெர்மனியில் உள்ளதுபோல் இரண்டு தேர்தல் முறைகளும் கலந்த ஒரு அமைப்பை உருவாக்குவதுபற்றி நாம் யோசிக்கலாம்” என்று பரிந்துரை செய்துள்ளார் ஒய்.எம்.குரேஷி.

அண்டை நாடுகளான இலங்கையிலும் நேபாளத்திலும் விகிதாச்சார முறை பின்பற்றப்படுகிறது. இந்தியா மட்டும் அதைத் திட்டமிட்டுத் தவிர்க்கிறதா? சுதந்திரம் பெற்றபோது, செல்வாக்கு மிக்க ஒரு தேசியக் கட்சியின் கீழ் தேச ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியிருந்தது. அந்தத் தேவை எப்போதோ நிறைவேறிவிட்டது. இன்றைக்கும் அந்த நடைமுறை தொடர்வது இந்திய ஜனநாயகத்தைப் பின்னோக்கி இழுப்பதாகத்தான் முடியும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x