Last Updated : 22 Feb, 2019 01:22 PM

 

Published : 22 Feb 2019 01:22 PM
Last Updated : 22 Feb 2019 01:22 PM

ஐ.டி. மோகம் அவ்வளவுதானா? – ஓர் அலசல்

’ஹை ஃபை-யா வாழணும்னா ஐ.டி.துறைக்குத்தானே போகணும். அதான் என் லட்சியம்’ என்று பெருமையாக சொல்லும் தலைமுறையினரைப் பெரு மிதத்தோடு பார்த்தோம். இதற்காக, பல முன்னணி நிறுவனங்களைத்தான் டார்கெட் செய்தார்கள்.    தகவல் தொழில் நுட்பம் என்று அழைக்கப்படும் ஐடி துறையில் அப்படி என்ன  இருக்கு?  ஆறு இலக்க சம்பளம், வெளிநாட்டுப்பயணம்,  சொகுசான வாழ்க்கை என அனைத்துமே உண்டு.  திறமைமிக்க பட்டதாரிகளை வேலை வேலை என்று அலைய விடாமல், படிக்கும் போதே  முன்னணி கல்லூரிகளுக்கு வந்து அள்ளிச்சென்றன  முன்னணி நிறுவனங்கள். இப்போதும் இவை தொடரத்தான் செய்கின்றன. ஆனாலும் ஐ.டி. மோகம் குறைந்து வருவதாகவே சொல்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்.

ஏன் இப்படி? எதனால் இவ்விதம்? கொஞ்சம் விரிவாகவேப் பார்ப்போமா?

மோகம் அதிகரிக்க காரணம் :

ஐ.டி. பணியில் அலைச்சல் இல்லை.  கடினமான உடல் உழைப்பு இல்லை. வியர்க்க விறுவிறுக்க வேலை செய்ய வேண்டியதில்லை. வெயிலில் பைக்கை எடுத்துக்கொண்டு சுற்றவேண்டியதில்லை. ஏஸிக்கு கீழே உட்கார்ந்து வேலை பார்க்கலாம். வீட்டிலிருந்து ஆஃபீஸுக்கு செல்ல   கேப்- வசதி உண்டு. இரட்டிப்பு சம்பளத்துடன்  வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கிடைக்கலாம்.

அப்போதைய குடும்பத்தலைவருக்கு, அதாவது அப்பாக்களுக்கு, நான் இவ்வளவு சம்பாதிக்கிறேன் என்று கெளரவமாய் சொல்லிக் கொள்ளவே  15 லிருந்து 20 வருடங்கள் தேவைப்பட்டது.  ஆனால் அதற்கும் அதிகமான சம்பளத்தை ஐடி துறை  முதல் மாதமே மகன்களுக்கும் மகள்களுக்கும் வழங்கியது. தந்தையின் ஒரு வருட சம்பளத்தை ஒரே மாதத்தில் ஈட்டிய  பிள்ளைகளின் எண்ணிக்கையும் உண்டு.  வாரத்தில் ஐந்து நாள் வேலை.   இரண்டு நாள்  விடுமுறை என்று சொல்லியபோது பள்ளிக் குழந்தைகள் போல் கொண்டாடினார்கள்.

பழைய வீட்டை சரி செய்யவும், டூ வீலர் லோனும் கேட்டு அலைந்த தந்தைக்கு முன்பு , முன்னணி  பெருநகரங்களில்  அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டுக்கும், விலை உயர்ந்த காருக்கும் நாங்களே  லோன் தருகிறோம் என்று வங்கிகள் தேடி வந்தன. இப்போதும் வந்துகொண்டிருக்கின்றன.

ஷாப்பிங் போவதற்கு பணம் தேவையில்லை. கிரெடிட் கார்டு போதும் என்றும்  வழிகாட்டின வங்கிகள். அதுவரை 70 ஆயிரம் ரூபாயில் பைக் என்று வாய் பிளந்தவர்கள் அசால்ட்டாக 2 லட்ச ரூபாயில் பைக் வாங்கினார்கள். ஐடி துறையில் நுழைந்தவர்கள் அடுத்த வருடமே வங்கிகளின் உபயோகத்தோடு... பொருளாதாரரீதியாக  வளமிக்க செல்வாக்கோடு உறவினர்களால்  பார்க்கப்பட் டார்கள். இப்படித்தான்  ஐ.டி. துறையில் இருப்பவர்களைப் பார்த்து ஐடி மோகத் தில்   ஊறினார்கள்  இளைஞர்கள் பலரும். இது… 6 வருடங்களுக்கு முந்தையை நிலை.

ஐ.டி. வேலைல சேரு; கொண்டாடு!

புதிய வேலை, புதிய நட்பு வட்டம்,  குடும்பத்தில் உயர்ந்திருக்கும் பொருளா தாரம்,. பார்க்கும் பொருளெல்லாம் வாங்கும் அளவுக்கு பணப்புழக்கம் எல்லாமே மனதில் மகிழ்ச்சியை அதிகப்படுத்தின. சினிமாவில்  மட்டுமே பார்த்த டிஸ் கொதே கிளப்கள் நண்பர்களோடு கொண்டாட்டம் போட பிடித்த இடமானது.

பெண்கள், புகைப்பிடிக்கவும், மதுஅருந்தவும் செய்வதையும் உச்சக்கட்டமாக டேட்டிங் கலாசாரத்தையும் விழிகள் விரியப் பார்த்தார்கள். கையில் பணம் புரளும் போது  ஆண் பெண் நட்பு வட்டத்தில்  அளவு மீறினாலும்  தவறில்லை என்னும் மனோபாவம்  ஒரு சிலருக்கு உண்டானது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு வரும்போது  கடுமையான நிபந்தனைகளே  இருந்தாலும்  பறக்கும் ஆசையே  இறுதி யில் ஜெயித்தது.

அலுப்பு சலிப்பு:  

வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை என்றாலும் விடுமுறைக்கேற்ற வேலையை ஐந்து நாட்களிலேயே   முடித்துக் கொடுக்க வேண்டும் எனும் அழுத்தத்தில்  தொடங்குகிறது முதல் மன உளைச்சல்.   அலுவலகத்தில் நுழையும் போதே  செல்ஃபோனுக்கும் அவர்களுக்குமான தொடர்பு துண்டிக்கப்படுகிறது.    அவசியத்துக்கு  தொடர்பு கொள்வது கூட சிரமமாக இருக்கிறதே என்று  மனம் எரிச்சலடைய வைக்கிறது.

பெரும்பாலும் நைட் ஷிப்ட் வேலையே  என்பதால் உணவு மற்றும் தூக்கம் சுழற்சி முறையில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.  இயற்கையை  மீறிய இச்செயல் தொடரும் போது  உடல் ஒத்துழைக்க மறுக்கிறது.    ஒருபுறம் உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு.. மறுபுறம்    வேலைச்சுமை எனும் சூழ்நிலையில் வேறு வேலை தேடுவோம் என்றால்  செழிப்பான வாழ்க்கையும், வரிசைக்கட்டி நிற்கும் லோன்களும்  அவர்களை பயமுறுத்துகின்றன. அதனால் எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் வேலையில் தவறு நேரக்கூடாது என்ற எண்ணம் அதிக பேருக்கு  இன்னும் இன்னுமான மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. விளைவு… திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல, எல்லா இடங்களிலும் மலங்க மலங்க விழித்து, வெறித்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.   

குடும்ப வாழ்க்கையில் சிக்கல்?

ஐடி துறையில் வேலை செய்யும் பிள்ளைகளின் பெற்றோர் பாடு ரொம்பவே திண்டாட்டம் தான். ஒரே துறையில் இருந்தாலும் பையனை விட மூன்று மடங்கு வருமானம் ஈட்டும் பெண்ணைக் கொடுக்க தயங்குவார்கள். சரி எப்படியிருந்தால் என்ன? இருவரும் ஒரே துறையில் இருக்கிறார்களே. வயதும் பொருந்தி வரு கிறதே  என்று திருமணம் முடித்தால் கணவன் பகல் வேலை பணி முடிந்து இரவு வரும் போது இரவு நேரப் பணிக்கு  மனைவி சென்று கொண்டிருப்பாள். இருவரும் ஹலோ சொல்லிக்கொள்ள  கூட நேரம் இருக்காது. 

படித்து முடித்ததும் வேலைக்கு வந்துவிட்டோமோ கொஞ்ச நாள் ஹேப்பியாக இருக்கலாமே. கடனையும் அடைத்துவிட்டு பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று  குழந்தைப் பிறப்பை தள்ளிப்போட்டு, தம்பதியர் பலரும்  இன்று குழந்தையின்மை சிகிச்சையில் வரிசை கட்டி நிற்கிறார்கள்.

மன உளைச்சல், குடைச்சல்:

பொருளாதாரத்தை முன்னிறுத்தி பல்வேறு கனவுகளுடன் ஐ.டி. துறையில் கால்பதிக்கும்  சிலருக்கே  வாழ்க்கை இனிக்கிறது. திட்டமிட்டு  வெளிநாடு சென்று பணிபுரிந்தாலும் குறிப்பிட்ட வருடத்தில்  வாழ்க்கையின் தரத்தை உயர்த்திக் கொள்பவர்களும் ஐடி துறையில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒரு சில  ஐடி நிர்வாகத்தில் சம்பளம் குறைக்கப்பட்டு வருகின்றன. மேலும்  ஆட் குறைப்பு நடவடிக்கையும் மேற்கொள்வதால் தாங்கள் வாங்கிய வங்கிக் கடன்களை அடைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தினால் குடும்பத்துடன் ஒட்டாமல் சிலர் மன இறுக்கத்தோடு வேலை செய்கிறார்கள். ஐ.டி.துறை என்பது பன்னாட்டு தொழில் வேலை சட்டதிட்டங்களுடன் இருப்பதால், தொழிலாளர்களுக்கான நலம் சார்ந்து இருப்பதில்லை என்று வேலையை இழந்த இளைஞர்கள் பலர் குமுறுகிறார்கள்.

சமீபகாலமாக  பட்டதாரிகளிடம் ஐடி மோகம் குறைந்துவருகிறது. முன்னணி நிறுவனங்கள் என்றால் சரி இல்லையென்றால்  வேறு துறைக்கு மாறலாம் என்ற மனநிலைக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள்.   

ஐடி துறையில்  பணி நிரந்தரமின்மை, மிகக் குறைந்த சம்பளம் என்றாகிவிட்ட இப்போதைய சூழலை உணர்ந்து,  இன்றைய தலைமுறையினர் , பொறியியல் பட்டதாரிகளாக இருந்தாலும்  எட்டாம் வகுப்புக்கு தகுதி வாய்ந்த அரசு வேலைக்கும்  விண்ணப்பிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஐடி மோகம் குறைந்து வருவதற்கு இதையே உதாரணமாக சொல்லலாம்.

‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெரிக் கட்டிக்கொள்ளும்’ என்பது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ… அமெரிக்காவின் தும்மலுக்கு இங்கே நம்மூர் ஐடி இளைஞர்கள், மருந்து தேடும் பரிதாபம் ஒருபக்கம்… கடன், இஎம்ஐ, கிரெடிட் கார்டு பயன்பாடு என்று சிக்கித்திணறுவது இன்னொரு பக்கம்… ஒழுக்கம் – ஒழுக்கமீறல் பற்றிய குழப்பங்களுக்குள் காலந்தள்ளவேண்டிய பட்டிமன்ற நிலை இன்னொருபக்கம் என்று இளைஞர்களையும் யுவதிகளையும் இந்த ஐடி சிஸ்டம் வரவர ரொம்பவே அலைக்கழிப்பதாகச் சொல்லிப் புலம்புகிறார்கள் என்று தெரிவிக்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

உண்மையிலேயே ஐடி சிஸ்டம் சரியில்லையோ? என்று கல்லூரியில் முதலாம் ஆண்டில் நுழையும் இளைஞன், நகம் கடித்து யோசிக்கிறான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x