Published : 11 Feb 2019 08:38 AM
Last Updated : 11 Feb 2019 08:38 AM

360: ஹைதராபாத் ஹோட்டலில் சர்வர் ரோபோக்கள்

பிரிட்டனில் போராடும் இந்திய மருத்துவர்கள்

பிரிட்டனில் தங்கி பணிபுரியும் மருத்துவர்களுக்கும் சுகாதாரப்பணி  நிபுணர்களுக்கும் வழங்கப்படும் சுகாதார சேவைகளுக்கான கூடுதல் தீர்வை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.  ஆண்டுக்கு 200 பவுண்டுகளாக இருந்த தீர்வை இப்போது 400 பவுண்டுகள் ஆகியிருக்கிறது. இதை எதிர்த்து போராட்டக் களத்தில் குதித்திருக்கிறார்கள் இந்திய மருத்துவர்களும் சுகாதாரப் பணி நிபுணர்களும். அவர்களுக்கு ஆதரவான குரல்கள் பிரிட்டனுக்கு உள்ளிருந்தும் கேட்க ஆரம்பித்திருக்கின்றன.  ‘பிரிட்டனின் தேசிய சுகாதார சேவைக்கு மிகப் பெரிய பங்களிப்பைச் செய்யும் ஐரோப்பிய ஒன்றியம் சாராத மருத்துவத்துறையினர் மீது இப்படி தீர்வையை அதிகரிப்பது அவர்களை அதிருப்தி அடைய வைக்கும், நாளடைவில் அவர்கள் பிரிட்டனுக்கு வரமாட்டார்கள், அதனால் இழப்பு பிரிட்டனுக்குத்தான்’ என்பது அவர்களின் வாதம்.  இந்திய மருத்துவர்களும் செவிலியர்களும் மருத்துவத் தொழில்நுட்பப் பணியாளர்களும் நீண்ட நேரம் பணிபுரிகின்றனர். தரமான சேவையையும் வழங்குகின்றனர். ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தரப்படும் ஊதியத்தைவிட அவர்களுக்குக் குறைவான ஊதியமே தரப்படுகிறது.

மின் வாகனங்களுக்கு மாறுகிறது கர்நாடகா...

கர்நாடக அரசின் பட்ஜெட்  ‘அட’ என்று ஆச்சர்யப்படும்படி  ஒரு  திட்டத்துக்கு நிதி ஒதுக்கியிருக்கிறது. மின்சாரத்தில் ஓடும் கார், இருசக்கர வாகனங்களை ‘சார்ஜ்’ செய்ய, பெங்களூரு நகரில் 10 நிலையங்களைத் தொடங்குவதற்கான நிதி ஒதுக்கீடுதான் அது. அவரவர் வீடுகளில் மின்சாரத்தை ஏற்றிக்கொண்டது போக,  இனிமேல் பயணத்தின் இடையிலேயும் சார்ஜ் செய்துகொள்ளலாம்.  நாட்டிலேயே முதல் முறையாக 2017-லேயே மின்சார வாகனங்களுக்கென்று ஊக்குவிப்புக் கொள்கையை அறிவித்தது கர்நாடகம்தான். ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து செயல்படுத்தப்படும் இத்திட்டத்துக்கு ரூ.31,000 கோடி முதலீடு உத்தேசிக்கப்பட்டுள்ளது. 55,000 பேருக்கு இது வேலைவாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்கு தரவும் மாநில அரசு முன்வந்திருக்கிறது. நகரில் டீசலில் ஓடும் பேருந்துகளுக்குப் பதிலாக இயக்க 3,000 மின்சார பேட்டரி பேருந்துகளை வாங்கியிருக்கிறது. இந்த வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகளை வடிவமைக்கவும் தயாரிக்கவும் கூட தனி ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்திருக்கிறது கர்நாடக அரசு. அத்துடன் மாநிலம் முழுவதும் மின்சார வாகனங்களின் தேவைகளுக்காக 1,000 மையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. இங்கு மின்சார வாகனங்களின் விற்பனை, பழுதுபார்ப்பு, பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். நகரின் காற்று மாசைக் குறைக்கவும் பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் இம்முயற்சியில் தீவிரம் காட்டுகிறது கர்நாடக அரசு.

ஹைதராபாத் ஹோட்டலில் சர்வர் ரோபோக்கள்

மோட்டார் வாகனத் தயாரிப்பில் ஆதிக்கம் செலுத்திவரும்  ரோபோக்கள், இப்போது உணவக சேவையிலும் களமிறங்கிவிட்டன. ஹைதராபாத்தில் உள்ள ‘ரோபோ கிச்சன்’  ஹோட்டலில் விருந்தினர்களை வரவேற்பதும் சிற்றுண்டி வழங்குவதும்  ரோபோக்கள்தான். தற்போதைக்கு 4 ரோபோக்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. எல்லா டேபிள்களிலும் மெனுவுடன், ஆர்டர்களைத் தெரிவிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நமக்குப் பிடித்தவற்றை டேபிளிலிருந்தே சமையல் கலைஞருக்குத் தெரிவித்துவிடலாம். அவற்றை ரோபோ தட்டில் வைத்து எடுத்துவந்து கொடுக்கும்.  ரோபோக்கள் நடந்து வரும் அழகை குழந்தைகளை விட முதியவர்கள் அதிகம் ரசிக்கிறார்கள். இளைஞர்கள் ரசிக்க ஏதும் இல்லையா? ஒரு பெண் ரோபோவும் உண்டு. ஒரு ரோபோவை ரூ.5 லட்சம் கொடுத்து வாங்கியிருக்கிறார் முதலாளி மணிகாந்த். இனி தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் உள்ளே நுழைந்து சம்பளப்பட்டியலைக் கேட்டு தொல்லை செய்ய முடியாது. ஏனென்றால் ‘சம்பள ஆள் இல்லை’ என்ற போர்டு தொங்கப்போகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x