Published : 07 Feb 2019 08:52 AM
Last Updated : 07 Feb 2019 08:52 AM

பம்புசெட்டுகளுக்குச் சூரியஒளி மின்சாரம்: வழிகாட்டுகிறது மகாராஷ்டிரம்!

இந்தியாவில் பாசன வசதிபெற்றுள்ள மொத்த விவசாய நிலங்களில் மூன்றில் இரண்டு பங்கு, நிலத்தடி நீரை பம்புசெட்டுகள் மூலம் இறைத்துத்தான் சாகுபடி செய்யப்படுகிறது. 2 கோடிக்கும் மேற்பட்ட மின்சார பம்புசெட்டுகளும் 75 லட்சம் டீசல் பம்புசெட்டுகளும் நீர் இறைப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன. நிலத்தடி நீரைத் தொடர்ந்து இறைக்க மின்சாரம் தொடர்ந்து கிடைக்க வேண்டும். மின்சாரத்துக்கு ஆகும் செலவு கட்டுப்படியாக வேண்டும். கிராமப்புற ஏழைகளான விவசாயிகள் நலன், நாட்டின் உணவுப் பாதுகாப்பு இரண்டுமே இதைச் சார்ந்துள்ளன.

மின்நுகர்வில் வேளாண்மைத் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. இது சில மாநிலங்களில் மொத்த நுகர்வில் நான்கில் ஒரு பங்காகவும், பல மாநிலங்களில் மூன்றில் ஒரு பங்காகவும் இருக்கிறது. ஆனால், விவசாயத்துக்குத் தரும் மின்சாரமோ தரமற்றதாக இருக்கிறது. அடிக்கடி மின்தடை, பம்புசெட்டுகளில் காயில்கள் எரிவது போன்றவை நிகழ்கின்றன. பகல் நேரங்களில் வீடுகள், வணிகப் பயன்பாடு, தொழிலகங்களுக்கு அதிக மின்சாரம் தேவைப்படுவதால், விவசாயத்துக்கான தனி இணைப்புகளுக்குப் பெரும்பாலும் நள்ளிரவு, பின்னிரவு, அதிகாலை என்றுதான் மின்சாரம் தரப்படுகிறது. இவையெல்லாம் சேர்ந்து, மின்வாரியங்கள் மீது விவசாயிகளும் அவநம்பிக்கை கொள்ள நேர்கிறது.

இரட்டிப்பாகும் மின்தேவை

விவசாயத்துக்கான மின்தேவை அடுத்த பத்தாண்டுகளில் இரட்டிப்பாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சிந்தனைகள், புதிய உத்திகள் தோன்றாத வரையில் விவசாயத்துக்குக் கிடைக்கும் மின்சாரம் தரம் இல்லாததுடன், நிச்சயமில்லாமலும் இருக்கும். விவசாயத்துக்குப் பகல் நேரத்தில், போதிய அளவில், மின்மோட்டார்களைச் சேதப்படுத்தாத மின்சாரம் அவசியம். அப்படிக் கிடைக்கும் மின்சாரமும் விலை குறைந்ததாக இருக்க வேண்டும். அதே வேளையில், அரசுக்கு ஏற்படும் மானியச் செலவும் குறைய வேண்டும்.

இந்த நிலையிலிருந்து மீளவும், இதற்குச் சரியான தீர்வைத் தரவும், மூன்று நிகழ்வுகள் நடந்துவருகின்றன. முதலாவது, சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.2.75-லிருந்து ரூ.3 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சூரியஒளி மின்சாரத்துக்கு எரிபொருள் தேவையில்லை என்பதால், அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒரே விலையில் ஒப்பந்தம் செய்துகொள்ள முடிந்திருக்கிறது.

இரண்டாவதாக, சூரியஒளி மின்உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், அதன் கொள்முதலை எல்லா மாநிலங்களும் விரைவுபடுத்தவும் அதிகப்படுத்தவும் நேர்ந்திருக்கிறது. இறுதியாக, இந்தியாவின் அனைத்துக் கிராமங்களையும் மின்கட்டமைப்பு அடைந்திருக்கிறது. விவசாயத்துக்கான மின்இணைப்புகள் தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளில் இது செய்து முடிக்கப்பட்டிருக்கிறது.

தடையற்ற மின்சாரம்

மகாராஷ்டிரத்தில், ‘முதலமைச்சர் சூரியஒளி வேளாண்மை மின்னூட்டுத் திட்டம்’ தொடங்கப்பட்டிருக்கிறது. இது, 1 முதல் 10 மெகாவாட் வரை சூரியஒளி மின்சாரத்தைத் தயாரிக்கும் பிரிவாகும். இது அருகில் உள்ள 33/11 கிலோவாட் துணை மின்நிலையத்துடன் இணைக்கப்படும். 1 மெகாவாட் திறனுள்ள சூரியஒளி மின்உற்பத்திப் பிரிவு 5 குதிரைச் சக்தி உள்ள 350 பம்புசெட்டுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும். இதை நிறுவ 5 ஏக்கர் நிலம் தேவை. ஒரு சில மாதங்களிலேயே இந்த மின்உற்பத்திப் பிரிவை நிறுவிவிட முடியும்.

ஒவ்வொரு மின்னூட்டியுடனும் இணைக்கப்படும் பம்புசெட்டுகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை (அன்றாடம் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை) மின்சாரம் வழங்கப்படும். ஒருவேளை, மேகமூட்டம் காரணமாகவோ, வேறுகாரணங்களாலோ சூரியஒளி மின்சாரம் தடைப்பட்டால், வழக்கமான மின்சாரத்தை மின்வாரியங்கள் வழங்கும். எனவே, தொடர்ந்து மின்சாரம் கிடைக்கும். பருவமழைக் காலத்திலோ, விவசாயச் சாகுபடி இல்லாத நேரங்களிலோ பம்புசெட்டுகளுக்கு மின்சாரம் தேவையில்லை எனும்போது, மின்னூட்டியில் கிடைக்கும் மின்சாரம், மின்தடம் மூலம் மின்விநியோக அமைப்புக்குச் சென்றுவிடும். இதனால் மின்உற்பத்தி நிலையங்களால் சிறப்பாகச் செயல்பட முடியும்.

இத்திட்டத்தில் மின்உற்பத்திப் பிரிவுகளை அமைப்பதற்கான ஒப்பந்ததாரர்கள் பொது ஏலத்தில் போட்டியின் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். சூரியஒளி மின்உற்பத்திப் பிரிவுகள் தயாரிக்கும் அனைத்து மின்சாரத்தையும் அரசு அடுத்த 25 ஆண்டுகளுக்கு வாங்கிக்கொள்ளும். மின்விநியோக நிறுவனம் விவசாயிகளுக்கு மின்சாரத்தை வழங்கும்.

இந்தத் திட்டத்தின் மிகப் பெரிய பலன் என்னவென்றால், விவசாயிகள் தங்களுக்கு வேண்டிய மின்சாரத்தைப் பகல் நேரத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். சூரியஒளி மின்சாரத்துக்காக அரசு மூலதன மானியம் எதையும் செலவிட வேண்டியதில்லை. ஒரு முறை இப்பிரிவுகளை நிறுவிவிட்டால், பிறகு பராமரித்துவந்தால் போதும். அரசுக்கு மின்மானியச் சுமையும் கணிசமாகக் குறையும். புதிய மின்தடப் பாதைகளை நீண்ட தொலைவுக்கு இழுக்க வேண்டிய தேவை கிடையாது. இப்போதுள்ள மின்சாரக் கட்டமைப்பிலேயே சூரியஒளி மின்திட்டத்தை அமல்படுத்திவிடலாம். மாற்று எரிசக்தியைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற அரசின் நிபந்தனையையும் இதன் மூலம் மின்வாரியங்கள் நிறைவேற்றிவிட முடியும். உற்பத்தியாவது, விநியோகிக்கப்படுவது என்ற இரு நிலைகளிலும் மின்சாரம் அளக்கப்படுவதால் மின்திருட்டு, மின்இழப்பு ஆகியவை கணிசமாகக் குறையும்.

செலவு குறைவு

மகாராஷ்டிரத்தில் 2,000 முதல் 3,000 மெகாவாட் வரையில் இப்படி மின்சாரம் தயாரிக்கத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இது 7.5 லட்சம் பம்புசெட்டுகளுக்கு மின்சாரம் வழங்கப் போதுமானது. மகாராஷ்டிரத்தில் உள்ள 20% பம்புசெட்டுகளின் மின்தேவையை இது பூர்த்திசெய்யும். 2018 டிசம்பர் நிலவரப்படி 10,000 விவசாயிகள் பகல் நேரத்திலேயே போதிய மின்சாரத்தை இதிலிருந்து பெறத் தொடங்கிவிட்டனர். இதனால் உற்சாகம் அடைந்துள்ள மின்விநியோக நிறுவனங்கள், அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் 7.5 லட்சம் பம்புசெட்டுகளுக்கு சூரியஒளி மின்சாரத்தை வழங்கத் தீர்மானித்துள்ளன.

மாநில அரசின் மின்விநியோக நிறுவனம், ஒரு யூனிட் ரூ.5 என்ற விலையில் மின்சாரம் விற்கிறது. சூரியஒளி மின்சாரத்துக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு யூனிட்டுக்கு ரூ.3 என்று விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஒரு யூனிட்டுக்கு ரூ.2 குறைவதன் மூலமே ஐந்து குதிரைச் சக்தி உள்ள பம்புசெட்டுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 சேமிக்க முடியும். 20 ஆண்டுகளில் மொத்த சேமிப்பு மதிப்பு ரூ.4.5 கோடியாக இருக்கும்.

மகாராஷ்டிரத்தில் அமலாகும் இதே போன்ற திட்டத்தைத் தேசிய அளவில் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்திருக்கிறது. அதற்கான இலக்காக 10,000 மெகாவாட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு ‘குசும்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

எல்லா கிராமத்திலும் மின்கட்டமைப்பு இருப்பதும், தேசிய மின்னூட்டியுடன் அது இணைக்கப்பட்டிருப்பதும் இதைச் சிக்கனமானதாக்கிவிடுகிறது. இதை நாட்டின் எல்லாப் பகுதியிலும் அமல்படுத்துவதும் எளிது. விவசாயத்துக்கு நம்பத்தக்க வகையில், பகலில், மிகக் குறைந்த செலவில் மின்சாரத்தை வழங்க முடிவதால், இதை முன்னுரிமை தந்து நிறைவேற்ற வேண்டும்.

- அஸ்வின் கம்பீர், சாந்தனு தீட்சித் - ‘பிரயாஸ்’ மின்னாற்றல் குழுமத்தைச் சேர்ந்தவர்கள்

© பிசினஸ்லைன். சுருக்கமாகத் தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x