Published : 08 Feb 2019 09:06 AM
Last Updated : 08 Feb 2019 09:06 AM

360: விலையில்லா அரிசி: தமிழகத்தின் வழியில் அஸ்ஸாம்

விலையில்லா அரிசி: தமிழகத்தின் வழியில் அஸ்ஸாம்

பொருளாதாரத்தில் நலிவடைந்த அனைத்து வகுப்பு மணப்பெண்களுக்கும் ஒன்றரை பவுன் தங்கம், ப்ளஸ் டூ தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்த அனைத்து மாணவிகளுக்கும் இலவச இ-பைக் என்று அஸ்ஸாம் நிதியமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட் திட்டங்கள், தேசிய அளவில் பேசுபொருளாயிருக்கின்றன. தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சமூக நலத் திட்டங்கள் பலவற்றை இந்தியாவின் மற்ற மாநிலங்களும் இப்போது பின்பற்ற ஆரம்பித்திருக்கின்றன. அந்த வரிசையில், பாஜக ஆளும் அஸ்ஸாமில் முதல்வர் சர்வானந்த சோனோவால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் விலையில்லா அரிசித் திட்டமும் ஒன்று. அம்மாநிலத்தில் உள்ள 800 தேயிலைத் தோட்டங்களில் ஏறக்குறைய 4 லட்சம் குடும்பங்கள் வசிக்கின்றன. இதுவரையில் ஒரு கிலோ அரிசியை ரூ.3-க்கு வாங்கிவந்த நிலையில், இப்போது அவர்கள் விலையில்லா அரிசித் திட்டத்தால் பயனடைய இருக்கிறார்கள்.

கனிமச் சுரங்கங்கள் மீது உள்ளூர் சமூகங்களுக்கே உரிமை

தென்னாப்பிரிக்க நாட்டின் போன்டோலேண்ட் பகுதியில் டைட்டானிய சுரங்கத்தில் கனிம அகழ்வுகள் மேற்கொள்ள ஆஸ்திரேலியாவின் ‘டிரான்ஸ்வேர்ல்ட் எனர்ஜி-மினரல் ரிசோர்சஸ்’ என்ற நிறுவனத்துக்கு அரசு அளித்த உரிமம், உயர் நீதிமன்றத்தால் ரத்துசெய்யப்பட்டுள்ளது.  ஆண்டுக்கு 14 கோடி பவுண்ட் என்று 25 ஆண்டுகளுக்கு தென்னாப்பிரிக்காவுக்குப் பணம் கொடுத்துவிட்டு ஜிர்கான், ருடைல், டைட்டானியம் ஆகிய கனிமங்களை அகழ்ந்துகொள்ள ஆஸ்திரேலிய நிறுவனத்துக்கு அனுமதி தரப்பட்டிருந்தது. இந்த அனுமதியால் தங்களுடைய வைல்ட் கோஸ்ட் பகுதியில் உள்ள வீடுகள், கலாச்சாரம், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று உள்ளூர் மக்கள் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களை  தென்னாப்பிரிக்க அரசும் குண்டர்களும் ஒடுக்கினர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி அன்னாலி பாசன், அந்தந்தப் பகுதி கனிமங்களை எடுக்க அந்தந்தப் பகுதியில் வாழும் மக்களிடம் அரசு அனுமதி பெற வேண்டும் என்று முன்னோடி தீர்ப்பு வழங்கியிருக்கிறார். இது தென்னாப்பிரிக்கா மட்டுமல்ல அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்படியான தீர்ப்பு என்று வரவேற்றிருக்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

ஆசிட் வீச்சுக்கு எதிராக ஒரு சினிமா

ஆசிட் வீச்சுத் தாக்குதலுக்கு ஆளான தொலைக்காட்சித் தொகுப்பாளர் லெட்சுமி அகர்வாலைப் பற்றி ‘சப்பாக்’ என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் மேக்னா குல்ஸார். இப்படத்தில் லெக்ஷ்மி அகர்வாலின் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் தீபிகா படுகோன். பிரபல கவிஞரின் மகள் என்ற அடையாளத்தைத் தாண்டி, தானும் ஒரு கவிஞராக, எழுத்தாளராக, திரைப்பட இயக்குநராகக் கலை இலக்கிய உலகில் தடம்பதித்து நிற்கிறார் மேக்னா. நொய்டா இரட்டைக் கொலை சம்பவத்தை அடிப்படையாகக்  கொண்டு அவர் இயக்கிய ‘தல்வார்’ படத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. பெண்கள் மீதான வன்முறைகளைத் தனது திரைப்படங்களின் வழியாகத் தொடர்ந்து பேசிவரும் மேக்னா, ஆசிட் வீச்சு தாக்குதலைக் கையிலெடுத்திருக்கிறார். மார்ச் மாதத்தில் திரைக்கு வருகிறது ‘சப்பாக்’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x