Published : 01 Jan 2019 09:23 AM
Last Updated : 01 Jan 2019 09:23 AM

முகங்கள் 2018

2018-ன் முகங்கள் இவை. இந்தப் பட்டியல், சாதனையாளர்கள் அல்லது வெற்றியாளர்கள் என்பன போன்ற பட்டியல் அல்ல; கடந்த ஆண்டில் தாக்கங்களை உருவாக்கியவர்களின், அதிகம் பேசப்பட்டவர்களின் பட்டியல். தமிழர் கண்களினூடே நாம் இந்தியாவைப் பார்க்கிறோம்.

தேசிய அளவில் தாக்கங்களை உண்டாக்கிய தமிழக முகங்களையும், தமிழக அளவில் தாக்கங்களை உண்டாக்கிய தேசிய முகங்களையுமே நாம் பட்டியலிட்டிருக்கிறோம்.

மு.கருணாநிதி

தனிப்பெரும் தலைவர்

இவர்: இந்தியாவில் நீண்ட காலம் ஒரு மாநிலத்தின் முதல்வர் அல்லது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர்; எழுபதாண்டு இந்தியக் குடியரசு வரலாற்றில் அறுபதாண்டு காலம் மக்களால் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்; இந்தியாவில் இரு கட்சி ஆட்சி முறைக்கு மாற்றாகக் கூட்டணி யுகத்தை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவர்; 2018 ஆகஸ்ட் 7 அன்று காலமானார்.

இவர்: ‘இந்தியா மாநிலங்களால் ஆனது; மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இந்நாட்டின் அரசமைப்பு மாற்றப்பட வேண்டும்’ என்ற குரலை முன்னெடுத்த அண்ணா கண்ட இயக்கமான திமுகவை ஐம்பதாண்டுகள் அதன் தலைவராகக் கட்டியாண்டார்.

இவர்: மாநில சுயாட்சிக்காக ஓங்கிக் குரல்கொடுத்தவர். மாநில முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத்தந்தவர். மாநில உரிமைகளுக்கான போராட்டத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் விளங்கியவர்.

இவர்: எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைப்பட வசனகர்த்தா, மேடைப் பேச்சாளர், அரசியல் தலைவர், திறமையான ஆட்சி நிர்வாகி என்று தொட்ட துறைகளில் எல்லாம் தனது தனி முத்திரையைப் பதித்த பன்முக ஆளுமை.

இவர்: அரசியல் கொள்கை மாறுபாடுகளைத் தாண்டி, தமிழ் மக்களின் உணர்வோடும் வாழ்வோடும் கலந்திருந்தவர். நவீன தமிழகம் ‘கருணாநிதி’ எனும் பெயரை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்!

தீபிகா படுகோன்

பாலிவுட் ராணி

இவர்: இன்றைய இந்தியத் திரையுலகின் முடிசூடா ராணி. இவர் நடித்த ‘பத்மாவத்’ திரைப்படம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. எனினும், வசூலில் பெரும் வெற்றிபெற்றது.

இவர்: நடித்த படங்களுக்கு நடிகர்களுக்கு இணையாக ஓப்பனிங் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இவர்: நடிகர் ரண்வீர் சிங்கை இந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ‘பத்மாவத்’ சர்ச்சைக்கு இணையாக இந்தக் கல்யாணம் சர்வதேச கவனம் ஈர்க்கும் செய்தியானது.

நரேந்திர மோடி

ஒரு நபர் ராணுவம்

இவர்: கிட்டத்தட்ட நாட்டின் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் சாத்தியங்கள் நெருங்க பாஜக தரப்பில் ஒற்றை ஆளாக எல்லோரையும் எதிர்கொள்கிறார்.

இவர்: சென்ற ஆண்டு நெடுகிலும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தேர்ந்தெடுத்த ஒவ்வொரு அஸ்திரத்தையும் வெவ்வேறு அஸ்திரங்களால் முறியடித்தார். ரஃபேல் விமான பேரத்தைப் பற்றி காங்கிரஸ் பேசியபோது, வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் பேரத்தைக் கையில் எடுத்து வாயடைத்தார்.

இவர்: பாஜக வரலாற்றில் முதல் முறையாகக் கட்சியையும் ஆட்சியையும் தன் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தவர். 2014 தேர்தலைத் தன் வாக்குறுதிகளால் வென்றெடுத்தவர், அவற்றில் பெரும்பாலானவை வெற்றுக் கோஷங்களாக ஆவியாகிவிட்ட நிலையில், அடுத்து என்ன வியூகத்தைக் கைக்கொள்ளப்போகிறார் என்பதை எல்லோரும் கவனிக்கின்றனர்.

இவர்: எல்லாவற்றையும் தாண்டி, இந்திய அரசியலை இன்று தன்னைச் சுற்றிச் சுழல வைத்துக்கொண்டிருப்பவர்.

ராகுல் காந்தி

தேசத்தின் அடுத்த நம்பிக்கை

இவர்: தொடர் தோல்விகளால் துவண்டிருந்த காங்கிரஸுக்குப் புத்துயிர் கொடுத்திருக்கும் தலைவர். ஐந்து மாநிலத் தேர்தல்களில், பாஜகவின் கோட்டைகளாகத் திகழ்ந்த மூன்று மாநிலங்களைக் கைப்பற்றியதன் மூலம், அக்கட்சிக்குப் பெரும் சவாலாக மாறியிருக்கிறார். ‘பப்பு’ என்று தன்னைக் கேலிசெய்த பாஜகவுக்குத் தான் யார் என்பதை மெல்ல உணரவைக்கிறார்.

இவர்: காங்கிரஸை அதன் சிதைவுகளிலிருந்து மீட்க முற்படுகிறார். கோஷ்டிப் பூசலுக்குப் பேர்போன காங்கிரஸில், கட்சியின் மூத்த தலைவர்களையும் இளம் தலைமுறைத் தலைவர்களையும் ஒருசேரக் கைகோத்து நடத்திச்செல்லும் இவரது அணுகுமுறை நன்கு எடுபடுகிறது.

இவர்: நாடாளுமன்றத்தில் காரசாரமான உரையை நிகழ்த்திவிட்டு, பிரதமர் மோடியைக் கட்டித்தழுவியபோது நாடே ஆச்சரியமாகப் பார்த்தது. நேரு குடும்பம் இனியும் நாடாள வரலாமா என்று கேட்டவர்களைக்கூட, ‘அடுத்து ராகுல் வர வேண்டும்’ என்று சொல்ல வைத்திருக்கிறார். அரசியல் தளத்தில் இந்துத்துவத்துக்கு எதிராக இந்து மதத்தை நிறுத்துகிறார்; அது எடுபடுகிறது.

இவர்: மோடிக்கு எதிரே யார் என்ற கேள்விக்குப் பதில் ஆகியிருக்கிறார்.

சபரிமலையில் பெண்கள்

பக்தியில் சமூக அரசியல்

இவர்கள்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள், எல்லா வயதைச் சேர்ந்த பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று 2018 செப்டம்பர் 28-ல் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, கோயிலுக்குள் நுழையப் பல முறை முயன்றனர். ஒவ்வொரு முறையும் தோல்விதான். எனினும், முயற்சியைத் தொடர்கிறார்கள்.

இவர்கள்: சபரிமலைக் கோயிலுக்குச் செல்லும் முயற்சியில் இறங்கும்போதெல்லாம், ஐயப்ப பக்தர்கள், வலதுசாரி அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கும் தாக்குதலுக்கும் ஆளாகினர். சபரிமலைக்குப் பெண்கள் செல்வதற்கு எதிராகப் பல்லாயிரக்கணக்கான பெண்களை இந்துத்துவ அமைப்புகளால் திரட்ட முடிந்தது, பெண்கள் மத்தியிலேயே இந்த விஷயத்தில் ஒருமித்த எண்ணம் இல்லை என்பதை வெளிப்படுத்தியது. காங்கிரஸும் பாஜகபோலவே நிலைப்பாட்டை இந்த விவகாரத்தில் எடுத்தது. இது கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்குப் பெரும் இக்கட்டாக உருவெடுத்தது.

ஐராவதம் மகாதேவன்

பன்முக ஆளுமை

இவர்: நேர்மையான அதிகாரி, முன்னோடிப் பத்திரிகையாளர், தமிழ் எழுத்து வடிவத்தின் வரலாற்றையும் சிந்து சமவெளி எழுத்துகளையும் ஆராய்வதற்காகத் தன் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட ஒரு பன்முக ஆளுமை.

இவர்: சங்க காலத்தைச் சேர்ந்த புகளூர் கல்வெட்டுகளைக் கண்டறிந்ததன் மூலம் தமிழ் ஆய்வுலகில் புதிய வெளிச்சம் பாய்ச்சியவர். தமிழின் தொன்மையை உலக அரங்குக்கு எடுத்துச்சென்றவர். 38 ஆண்டு காலம் உழைத்து அவர் உருவாக்கிய பழந்தமிழ்க் கல்வெட்டுகள் குறித்த ஆய்வு நூல், இந்திய வரலாறு என்றாலே அது வட இந்திய வரலாறுதான் என்றிருந்த நிலையை மாற்றியது.

இவர்: சிந்துவெளி நாகரிகத்தை ஆரியக் கலப்பில்லாத, அதற்கு முற்பட்ட நாகரிகம் என நிறுவினார். சிந்துவெளிக் குறியீடுகளைப் படிப்பதற்கு இவர் கையாண்ட முறையே நம்பகமானதாக உள்ளது.

இவர்: பத்திரிகையுலகில் பணிபுரிந்த ஐந்தாண்டு காலம் தமிழ் இதழியலின் திருப்புமுனைக் காலகட்டம். பெயர்களை எழுதும் முறை, உச்சரிப்பு, பிழையின்றி எழுதுதல், வெகுஜன தளத்தில் இலக்கியத்தை இணைத்தது என இவர் கொண்டுவந்த மாற்றங்கள் அளப்பரியது. இவருடைய மறைவு இந்தியப் பேரிழப்பு.

பி.வி.சிந்து

பெண்சக்தி

இவர்: இந்திய பேட்மின்டனைப் புதிய உயரத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறார். சென்ற ஆண்டு சீனாவில் நடந்த உலக டூர் பைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை அவர்தான்.

இவர்: 2011-ல் இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கினார். படிப்படியாக முன்னேறினார். உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டிகளில் இதுவரை இரண்டு பதக்கங்கள் வென்றிருக்கிறார். வேறு எந்த இந்தியரும் இரண்டு பதக்கங்கள் வென்றதில்லை.

இவர்: எண்ணற்ற இந்தியப் பெண்களுக்கு விளையாட்டில் ஈடுபடுவதற்கான ஒரு புதிய உந்துசக்தியைத் தருகிறார். நகரங்களில் அவர் படத்தைத் தாங்கி நிற்கும் விளையாட்டு உபகரணக் கடைகளைப் பார்க்கும் சிறுமிகள், தங்கள் அப்பாவிடம் பாட்மின்டன் ராக்கெட்டுகளைக் கேட்கின்றனர். “எங்களாலும் முடியும்” என்கின்றனர்.

சந்திரசேகர் ராவ்

டெல்லிக் கனவு நெசவாளி

இவர்: தெலங்கானா ஒரு தனி மாநிலமாகப் பிரிந்துவரப் போராடியவர், அதன் முதல் முதல்வர். புதிய மாநிலத்தை முன்னேற்றம் நோக்கிய பாய்ச்சலில் செலுத்தியவர். பல்வேறு முன்னுதாரணத் திட்டங்களைக் கொண்டுவந்தவர். ஒரு பெரும் எதிர்க்கூட்டணியை மக்களின் பேராதரவுடன் பின்னுக்குத் தள்ளி ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்.

இவர்: இந்தியாவில், தொழில் துறையிலும் சிறப்புக் கவனம் எடுத்துக்கொள்ளும் முதல்வர்களில் பிரதானமானவர். ரூ.1,35,000 கோடி முதலீட்டை ஈர்த்து 8.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறார். அதேசமயம், ரூ.17,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி, 46,000 ஏரி, குளங்களைப் புனரமைக்கும் ‘மிஷன் காகதீயா’ பாசனத் திட்டம், விவசாயத்துக்காக 24 மணி நேரமும் மின்சார வசதி, ஏக்கருக்கு ரூ.8,000 உதவித்தொகை என்று விவசாயிகளுக்கான முன்னுதாரணத் தலைவராகவும் மிளிர்கிறார்.

இவர்: தெலங்கானா அடையாளத்தைத் தூக்கிப் பிடிப்பதன் மூலம், மாற்று தேசியத்தின் வல்லமையைப் பறைசாற்றுகிறார். மாநிலக் கட்சிகள் வலுவாக இருந்தால், டெல்லியில் மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்பு ஒன்றை ஆட்சியதிகாரத்தில் அமர்த்தலாம் என்ற கனவுக்குப் புத்துயிர் கொடுக்கிறார்.

வாஜ்பாய்

மாற்றாரும் நேசித்த தாமரை

இவர்: இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் பன்முக ஆளுமை. கவிஞர், பத்திரிகையாளர், பேச்சாளர், பெரிய மக்கள் தலைவர், எல்லோரையும் அரவணைத்த ஆட்சியாளர்.

இவர்: இந்தி பேசும் மாநிலங்களின் கட்சியாக மட்டுமே இருந்த பாஜகவை முழு இந்தியாவுக்கும் கொண்டுசென்றவர். பாஜக தலைமையிலான கூட்டணிக்குச் சித்தாந்தரீதியாக அதற்கு நேர் எதிரான திமுக, திரிணமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகளையும்கூட ஒரு பொதுச் செயல்திட்டத்தின் கீழ் கொண்டுவந்தவர். ‘தவறான கட்சியில் உள்ள சரியான நபர்’ என்ற வரையறை பாஜகவைப் பிடிக்காதவர்களிடமும்கூட இவருக்கிருந்த மதிப்பைப் பறைசாற்றுவது.

இவர்: தன் ஆட்சியில் சாலை மேம்பாட்டுக்குக் கொடுத்த முக்கியத்துவம் இன்றும் பேசப்படுகிறது.

இவர்: இந்தியாவில் வலதுசாரிகளாலும் தாராளச் சூழல் ஆட்சியைத் தர முடியும் என்ற முன்மாதிரியை உருவாக்க முயன்றார். ஒட்டுமொத்தக் கட்சியின் முகமாக இருந்த சூழலிலும், மாநிலங்களில் கட்சியும் ஆட்சியும் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார். இந்த ஆண்டில் மறைந்த இவர், வலதுசாரிகளைத் தாண்டியும் எல்லோராலும் நேசிக்கப்படுபவராக என்றும் இருப்பார்.

தனுஸ்ரீ தத்தா

வில்லன்களை வீதிக்கு இழுத்தவர்

இவர்: இந்தியாவில் ‘நானும் - மீடு’ இயக்கம் பரவ முக்கியமான பங்காற்றினார். ஓராண்டுக்கு முன்னரே கல்வித் துறையில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் பேசப்பட்டிருந்தாலும், பாலிவுட்டில் நடக்கும் அத்துமீறல்களை இவர் பேசிய பின்னரே அது தீயாகப் பரவியது.

இவர்: துணிச்சலாகத் தொடர்ந்து பேசியதன் விளைவு பல பெண்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்தது. ஊடகத் துறைக்கு ‘நானும் இயக்கம்’ பரவியபோது, ஊடக உலக முன்னாள் ஜாம்பவானும் மத்திய அமைச்சருமான எம்.ஜே.அக்பர் பதவியை அது பறித்தது.

இவர்: பெண்களிடம் அத்துமீற இன்று உருவாகியிருக்கும் பயத்துக்காக என்றும் நினைவில் நிற்பார்.

சந்தா கோச்சர்

வங்கிகள் மீது விழுந்த கறை

இவர்: ஐசிஐசிஐ வங்கியின் தலைமைப் பீடத்தில் அமர்ந்திருந்தார். சர்வதேசப் பத்திரிகைகளால் உலகின் சிறந்த நிர்வாகிகளில் ஒருவர் என்று பாராட்டப்பட்டவர். முறைகேடு புகார் பேசப்பட்ட நிலையில், பதவியிலிருந்து விலகினார்.

இவர்: கணவர் தீபக் கோச்சருக்கு ‘வீடியோகான்’ நிறுவன அதிபருடன் நெருக்கமான உறவு இருந்திருக்கிறது. ஒருபுறம், ஐசிஐசிஐ வங்கியில் ரூ.3,250 கோடி கடனை வாங்கிய ‘வீடியோகான்’ நிறுவனம், இன்னொருபுறம் கோச்சார் தொடர்புடைய நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறது. வங்கியிடம் வாங்கிய கடனையும் செலுத்தவில்லை. ‘எஸ்ஸார்’ நிறுவனத்துடனும் தம்பதிக்கு இதேபோன்ற தொடர்பிருந்தது பெரும் செய்தியானது. பொதுத் துறை வங்கிகளைப் போலவே தனியார் வங்கிகளும் வேட்டைக் களமாகியிருப்பது அம்பலத்துக்கு வந்தது.

விவசாயிகள்

சோறிடும் கைகளின் சோகம்

இவர்கள்: இந்த ஆண்டு முழுவதும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியவர்கள். அரசுகளால் புறக்கணிக்கப்பட்டவர்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையில் பாதிக்கப்பட்ட அனைவரும் இன்றைக்கு ஓரணியில் திரண்டிருக்கிறார்கள்.

இவர்கள்: தமிழ்நாட்டில் விளைநிலங்களைப் பறித்து உண்டாக்கப்படும் திட்டங்களைக் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். ‘வளர்ச்சி’க்கு வரையறையை விசாரணைக் கூண்டில் ஏற்றியிருக்கிறார்கள்.

இவர்கள்: மகாராஷ்டிரத்தில் மார்ச் மாதம் மாபெரும் பேரணி நடத்தி, இந்தியாவின் கவனத்தை ஈர்த்தனர். பயிர்க் கடன் தள்ளுபடி, மானியம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து புனேவில் தொடங்கியது இந்தப் பேரணி. 180 கி.மீ. தொலைவில் உள்ள மும்பையில், தலைமைச் செயலகத்தை நெருங்கியபோது போராட்டக்காரர்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தைத் தாண்டியிருந்தது. மும்பை நகருக்குள் பேரணியாக வந்தவர்களுக்குப் பொதுமக்களும் தொழிற்சங்கங்களும் கொடுத்த வரவேற்பு நெகிழ்வான தருணங்கள். நவம்பரில் டெல்லி பேரணியிலும் அதுவே நடந்தது.

இவர்கள்: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தல்களில் பலமிக்க பாஜகவை வீழ்த்தியதன் மூலம், எல்லாக் கட்சிகளுக்கும் பெரும் எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்கள். விவசாயிகளை இனியும் இந்நாடு புறக்கணிக்க முடியாது.

ரஃபேல் விமான ஊழல் குற்றச்சாட்டு

காங்கிரஸ் வீசிப்பார்க்கும் ஆயுதம்

இது: அப்பழுக்கற்ற அரசு என்று தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் மோடி அரசின் பிம்பத்தின் மீது உடைவை உண்டாக்கிய குற்றச்சாட்டு. ‘நம் பிரதமர் ஒரு திருடர்’ என்று குற்றம்சாட்டினார் ராகுல் காந்தி. சமூக வலைதளங்களில் அது வைரலானது.

இது: பிரான்ஸிடமிருந்து 36 ‘ரஃபேல்’ போர் விமானங்களை வாங்கும் முடிவில், ‘விமானங்களுக்கு அதீத விலை கொடுக்கப்படுகிறது; பொதுத் துறை நிறுவனமான ஹெச்ஏஎல் புறக்கணிக்கப்பட்டு, ஆளுங்கட்சிக்கு வேண்டிய ‘ரிலையன்ஸ்’ நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தில் சலுகை காட்டப்பட்டது’ என்ற குற்றச்சாட்டு செய்தியாக வந்தபோது தேசம் அதிர்ந்தது.

இது: உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டாலும் இன்னும் காங்கிரஸ் விடாப்பிடியாக இந்த ஆயுதத்தை வீசிப்பார்த்துகொண்டே  இருக்கிறது.

தீபக் மிஸ்ரா

சந்தேகக் கூண்டில்

நீதித் துறையை நிறுத்தியவர்

இவர்: இந்திய நீதித் துறை வரலாற்றில் முதன்முறையாகப் பத்திரிகையாளர்கள் முன்னிலையில், உச்ச நீதிமன்றத்தைச் சேர்ந்த நான்கு மூத்த நீதிபதிகளால் விமர்சிக்கப்பட்ட தலைமை நீதிபதி.

இவர்: தலைமை நீதிபதியாக இருந்த காலகட்டத்தில் அரசின் அழுத்தங்களுக்கு உச்ச நீதிமன்றம் பணிகிறதோ என்ற சந்தேக நிழல் படிந்ததோடு அல்லாமல் நாடு முழுவதும் அது பெரும் விவாதமாக உருவெடுத்தது.

இவர்: வரவேற்கத்தக்க, சர்ச்சைக்குரிய பல அதிரடித் தீர்ப்புகளை வழங்கியவர்.

தொகுப்பு: சாரி, சிவசு, வெ.சந்திரமோகன், புவி, த.ராஜன் வடிவமைப்பு: சோ.சண்முகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x