Last Updated : 21 Jan, 2019 09:04 AM

 

Published : 21 Jan 2019 09:04 AM
Last Updated : 21 Jan 2019 09:04 AM

ஒவ்வொரு ரஃபேல் விமானத்தின் விலையையும் 41% உயர்த்தியது ஒரு முடிவு

இந்திய விமானப் படைக்காக முன்னதாகத் திட்டமிடப்பட்டிருந்த 126 விமானங்களுக்குப் பதிலாக 36 ரஃபேல் விமானங்களை பிரான்ஸிடமிருந்து வாங்கப்போவதாக பிரதமர் மோடி ஏப்ரல் 15, 2015 அன்று பாரிஸில் அதிரடியாக வெளியிட்ட அறிவிப்பு, முழுமையாகப் பாகங்கள் பொருத்தப்பட்ட, போருக்குத் தயார் நிலையிலிருக்கும் ஒவ்வொரு ரஃபேல் விமானத்தின் விலையையும் 41.42% உயர்த்திவிட்டது.

இந்தியாவின் போர்த் தேவைகளுக்கு ஏற்ப 13 தர மேம்பாட்டு அம்சங்களை ‘வடிவமைத்து உருவாக்குவதற்கு’ 1.3 பில்லியன் யூரோக்கள் கூடுதல் கட்டணமாகக் கொடுக்க வேண்டும் என்று ‘தஸ்ஸோ நிறுவனம்’ நிர்ணயித்த தொகையை மோடி அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. தொடர் செலவினத்தைச் சேராத இந்தக் கட்டணத்தை 126 ரஃபேல் விமானங்களின் விலையோடு சேர்ப்பதற்குப் பதிலாக 36 விமானங்களின் விலையோடு சேர்த்ததுதான் விமானங்களின் விலை உயர்ந்ததற்கு மிக முக்கியமான காரணம்.

ரகசியக் காப்பு சொல்வது என்ன?

பிரான்ஸுடன் செய்துகொண்ட ‘பரஸ்பர தகவல் பரிமாற்றம்மற்றும் தகவல் பாதுகாப்பு ஒப்பந்தம்’ ரஃபேல் விமானங்களின் விலை குறித்த முழுமையான தகவல்களைத் தரக் கூடாது என்று தடுப்பதால், சிறப்புரிமை பெற்ற நாடாளுமன்றக் குழுவுக்குக்கூட அந்த விவரங்களைத் தர மறுத்துவிட்டது மோடி அரசாங்கம். ஆனால், வாங்கப்படும் ‘பாதுகாப்பு சாதனங்களின் பாதுகாப்பையும் செயல்திறனையும் குறிப்பாக, பாதிக்கக் கூடிய தகவல்களைக் குறித்து மட்டுமே’ இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் கூறுவதாகத் தெளிவுபடுத்துகிறது பிரான்ஸ் அரசாங்கம். விலை குறித்த விவரங்களுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது என்பது தெளிவு.

நமக்குக் கிடைத்திருக்கும் தரவுகள் ஒரு கேள்வியைத் தீர்க்கமானதாக்குகிறது: ஒரே வடிவமைப்பும் திறன்களும் கொண்ட ரஃபேல் போர் விமானம் ஒவ்வொன்றின் விலையும் மூன்று காலகட்டங்களில், அதாவது 2007, 2011 மற்றும் 2016 ஆண்டுகளில், ஏன், எப்படி சரசரவென மாறியது என்பதே அது!

126 ரஃபேல் விமானங்களுக்காக மன்மோகன் சிங் அரசாங்கம் விடுத்த டெண்டருக்கு இணங்க, மிகக் குறைந்த விலையைச் சொன்னது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘தஸ்ஸோ ஏவியேஷன்’. அந்த நிறுவனம் டெண்டர் எடுப்பதில் வென்றதாக அறிவிக்கப்படுவதற்கு ஐந்தாண்டுகளுக்கு முன்னர், அதாவது 2007-ல். அடிப்படை வடிவமைப்பு மட்டும் உடைய ரஃபேல் விமானம் ஒன்றின் விலை அப்போது 79.3 மில்லியன் யூரோக்கள். 2011-ல் காலத்துக்கேற்ற விலையேற்றத்தினால் அதன் விலை 100.85 மில்லியன் யூரோக்களாக உயர்ந்தது.

விலை ஏற்றமா, இறக்கமா?

2016-ல் இரு நாட்டு அரசாங்கங்கள் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா வாங்க நினைத்த 36 ரஃபேல் விமானங்கள் ஒவ்வொன்றுக்கும் இந்த விலையில் 9% தள்ளுபடியை பிரான்ஸிடமிருந்து இந்தியா பெற்றது. இதனால், விமானத்தின் விலை 91.75 மில்லியன் யூரோக்களாகக் குறைந்தது.

ஆனால், இது முழுக் கதையும் அல்ல. இந்திய விமானப் படையின் தேவைக்கு ஏற்றபடி கூடுதலாக 13 வன்பொருள், மென்பொருள் திறன்களை விமானத்தில் சேர்ப்பதற்குக் கட்டணமாக 1.4 பில்லியன் யூரோக்கள் ஏற்றப்பட்டன. பேரத்துக்குப் பிறகு இந்தக் கட்டணம் 1.3 பில்லியன் யூரோக்களாகக் குறைக்கப்பட்டது.

ஆனால், இந்த 13 கூடுதல் திறன்களை வடிவமைத்து உருவாக்குவதற்கு 2007-ல் 11.11 மில்லியன் யூரோவாக இருந்த கட்டணம், ஒப்பந்தம் ஏற்பட்ட 2016-ல் 36.11 மில்லியன் யூரோவாக உயர்ந்தது. இந்தக் கட்டணம் 36 ரஃபேல் விமானங்களின் விலையுடன் சேர்க்கப்பட்டது. இதனால், 2007-ல் ‘தஸ்ஸோ’ நிறுவனம் விற்பனை முயற்சியில் இருந்தபோது 90.41 மில்லியன் யூரோவாக இருந்த ஒரு ரஃபேல் விமானத்தின் மொத்த விலை, 2016-ல்

இரு நாட்டு ஒப்பந்தத்தின் கீழ் 127.86 மில்லியன் யூரோவாக உயர்ந்தது. அதாவது, 41.42% உயர்வு! காலத்துக்கேற்ற விலையேற்றத்தைக் கணக்கிலெடுத்து 2011-ல் இருந்த விலையுடன் ஒப்பிட்டால், 2016-ல் மோடி அரசு கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட விலை 14.20% அதிகம்.

அதீத விலையைச் சுட்டிய அதிகாரிகள்

இது தொடர்பான ஆவணங்களை ‘தி இந்து’ பரிசீலனை செய்தபோது ‘தஸ்ஸோ’ நிறுவனத்துடன் ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை நடத்திய ஏழு பேர் குழுவிலிருந்த மூன்று மூத்த பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள், இந்தியாவின் தேவைக்கேற்ற 13 திறன் மேம்பாட்டு அம்சங்களுக்காக ‘தஸ்ஸோ’ கேட்ட 1.3 பில்லியன் யூரோக்கள் மிக அதிகம் என்று ஆட்சேபனை தெரிவித்தனர்.

விமானப் படைக்கான தளவாடங்கள் வாங்கும் பொறுப்பிலிருந்த இணைச் செயலாளர் ராஜீவ் வர்மா, விமானப் படையின் நிதி மேலாளர் அஜித் சூலே, விலைகள் குறித்த ஆலோசகர் எம்.பி.சிங் ஆகிய மூவருமே ‘இந்தியாவின் தனித் தேவைகளுக்கான திறன் மேம்பாட்டு அம்சங்களுக்கான கட்டணம் மிக அதிகம்’ என்று குறிப்பிட்டிருக்கின்றனர். ஆனால், இந்தியப் பேச்சுவார்த்தைக் குழுவில் இருந்த ஏனைய நான்கு உறுப்பினர்கள் - அதற்குத் தலைமை வகித்த இந்திய விமானப் படையின் உதவித் தலைவர்; பாதுகாப்புத் துறையின் துணை ஒப்பந்த (ஆஃப்செட்) நிர்வாகப் பிரிவிலிருந்த இணைச் செயலாளர்; கூடுதல் நிதி ஆலோசகர் பொறுப்பிலிருந்த இணைச் செயலாளர்; திட்டப் பிரிவின் பொறுப்பிலிருந்த விமானப் படையின் துணைத் தலைவர் மற்ற மூவரின் ஆட்சேபனையை ஒதுக்கித் தள்ளியிருக்கின்றனர்.

இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு கூறுகிறது: “போரில் பல்வேறு செயல்களைப் புரியும் நடுத்தர ரக (எம்.எம்.ஆர்.சி.ஏ. - Medium Multi-Role Combat Aircraft) விமானங்களில் இந்தியாவின் பிரத்யேகத் தேவைக்கேற்ற வகையிலான 13 திறன் மேம்பாட்டு அம்சங்களை இணைப்பதற்காக மே 2015-ல் நடந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையான 1.3 பில்லியன் யூரோ, 2009-ல் நடந்த கூட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 1.4 பில்லியன் யூரோவை விடச் சிறந்தது என்ற முடிவு இந்தியப் பேச்சுவார்த்தைக் குழுவில் 4-3 என்ற பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியது. மேலும், இந்தியாவின் பிரத்யேகத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் 13 திறன் மேம்பாட்டு அம்சங்களை விமானத்தில் இணைப்பதற்கான கட்டணம் ‘தொடர் செலவின’ வகையைச் சேராதது, வாங்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறாதது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த விவரங்கள் பாதுகாப்பு தொடர்பான சாதனங்களை வாங்கும் கவுன்சிலின் முன் வைக்கப்பட்டது. அந்தக் கவுன்சில் இந்தியப் பேச்சுவார்த்தைக் குழுவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டது. அந்த முடிவினை பாதுகாப்புத் துறைக்கான மத்திய அமைச்சரவைக் குழுவும் அங்கீகரித்தது.”

இப்படி முடிவெடுத்த முறை குறித்து உச்ச நீதிமன்றத்திடம் அரசாங்கம் குறிப்புகளைச் சமர்ப்பித்தது. நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க இந்தக் குறிப்புகள் ஒப்பந்தத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்த மனுதாரர்களுடனும் பகிர்ந்துகொள்ளப்பட்டது. இந்தக் குறிப்பு

களின்படி, “தேசிய பேச்சுவார்த்தைக் குழுவின் அறிக்கையும், பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலை வாங்குவதற்கான ஆலோசனையும் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில்தான் தயார் செய்யப்பட்டன. நிதி அமைச்சகத்துடனும், சட்டம் மற்றும் சட்ட அமைச்சகத்துடனும் ஆலோசனைகள் நடத்தப்பட்டன.”

இந்த ஆலோசனை ஆகஸ்ட் 24, 2016 அன்று பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவைக் குழுவின் முன் வைக்கப்பட்டது. விலை மற்றும் ஒப்பந்தம் குறித்த பிரச்சினைக்குரிய விஷயங்களும் அக்குழுவின் முன் வைக்கப்பட்டன.

தலைகீழாக்கப்பட்ட நடைமுறைகள்

பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாதுகாப்புக் கருவிகள் வாங்கும் குழுவுக்கு இருக்கும் பங்கினைக் குறித்து அரசாங்கக் குறிப்புகளில் எவ்விதச் சுட்டிக்காட்டலும் இல்லை என்பதும் குறிப்பிடத் தகுந்தது. பாதுகாப்புச் சாதனங்கள் வாங்கும் நடைமுறைக்கான வழிகாட்டு ஆவணத்தின்படி, அவற்றை வாங்கும் முடிவினை எடுக்கும் அதிகாரம் மனோகர் பாரிக்கரின் தலைமையிலான குழுவிடம்தான் இருக்கிறது. ஆனால், மனோகர் பாரிக்கர், இந்திய பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் பரிந்துரைத்தபடி - பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவிடம் அப்பொறுப்பைத் தள்ளிவிட்டார். ஆனால், இதற்கு ஒரு வருடம் முன்பே, முந்தைய பத்தாண்டுகளில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளையெல்லாம் தலைகீழாக மாற்றி இந்தியா-பிரான்ஸ் நாடுகளின் கூட்டு அறிக்கை மூலம் ஒரு முடிவை மோடி அறிவித்தார் என்பதைப் பார்க்கும்போது மேற்கூறிய விவரங்கள் ஆச்சரியம் தரவில்லை.

தயார் நிலையிலிருக்கும் 36 ரஃபேல் விமானங்களை “தஸ்ஸோ கூறியதைவிடச் சிறந்த விதிமுறைகளின் கீழ் வேறு ஒரு நடைமுறையின்படி” விமானங்களை வாங்கப்போவதாகச் சொன்னதுதான் அந்த அறிவிப்பு. பிரதமரின் தலைமையிலான பாதுகாப்புத் துறை விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, இந்தியப் பேச்சுவார்த்தைக் குழுவின் பெரும்பான்மை முடிவுகளை அவசரமாக அங்கீகரித்தது.

இன்னொரு முக்கியமான கேள்வி

இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான கேள்வியையும் நாம் எழுப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தியா விரும்பியபடியான 36 ரஃபேல் விமானங்களை வாங்குகையில், விலையை மேலும் குறைத்துப் பேசுவதற்கான சிறப்புச் சாதகச் சூழல் ஏதேனும் இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட 2015-16-ல் இருந்ததா என்பதே அது. இப்படியொரு கேள்வியை நாம் எழுப்பிக்கொண்டால் அதற்கான பதில்: ஆம்!

பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் விமானம் மற்றும் பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்திசெய்யும் முன்னணி நிறுவனங்களின் கூட்டமைப்பான ‘யூரோஃபைட்டர் டைஃபூன் கன்சார்டியம்’ மிகவும் குறைந்த விலைக்கு விற்கும் ஆலோசனையை இந்தக் காலகட்டத்தில் முன்வைத்திருக்கிறது. பிரான்ஸிடம் இந்தியா பேரம் பேசுவதற்காக அதைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று அதை நிச்சயம் சொல்லலாம்.

உண்மையில், இந்தியப் பேச்சுவார்த்தைக் குழுவில் மாற்றுக் கருத்து வைத்திருந்த மூன்று உறுப்பினர்கள் இதைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றனர்: “ஈ.ஏ.டி.எஸ். எனப்படும் ஐரோப்பிய வான்வழிப் பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனம், 126 எம்.எம்.ஆர்.சி.ஏ. ரக விமானங்களை 20% கழிவுடன் தருவதாக விடுத்த டெண்டர் புறந்தள்ளப்பட்டது. இந்தியப் பேச்சுவார்த்தைக் குழு, ஈ.ஏ.டி.எஸ். நிறுவனத்தின் ஆலோசனையை, 36 ரஃபேல் விமானங்கள் வாங்குவதற்கான ஆலோசனையுடன் ஒப்பிட்டு, அவற்றின் விலைகளையும் ஒப்பிட்டு நோக்கியிருக்க வேண்டும்.”

ஒருகாலகட்டத்தில், தொழில்நுட்பம் மற்றும் பறக்கும் திறன்களின் அடிப்படையில் ரஃபேல் விமானம் போன்றே யூரோஃபைட்டரும் மதிப்பிடப்பட்டது. இந்திய விமானப் படையின் எம்.எம்.ஆர்.சி.ஏ. ரக விமானத் தேவைகளை யூரோஃபைட்டரும் முழுமையாகப் பூர்த்திசெய்தது. விலை ஒப்பீட்டில் மட்டுமே அது ரஃபேலிடம் தோற்றது. 126 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் பல சிக்கலான காரணங்களால் தடைபட்டபோது, யூரோஃபைட்டர் கூட்டமைப்பின் சார்பாக வந்த ஏர்பஸ் தனக்கு ஒரு வாய்ப்பு வருவதை உணர்ந்துகொண்டது.

அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லிக்கு ஜூலை 4, 2014-ல் எழுதிய கடிதத்தில், ‘ஏர்பஸ்’ நிறுவனத்தின் ராணுவ விமானங்கள் பிரிவின் தலைவரான ‘யுரேனா-ராஸோ’ ஒரு புதிய விற்பனை ஆலோசனையை முன்வைத்தார்: “முன்பு சமர்ப்பிக்கப்பட்ட விலைகளைவிட 20% குறைவான விலையில் 126 ‘டைஃபூன் யூரோஃபைட்டர்’ விமானங்கள்; மேம்படுத்தப்பட்ட விமானத் திறன்கள்; பணம் செலுத்துவதற்குச் சாதகமான விதிமுறைகள், ‘யூரோஃபைட்டர் டைஃபூன்’ உற்பத்திசெய்யும் தொழில் பூங்கா ஒன்றை இந்தியாவில் அமைத்து, அதன் மூலமாக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத் திறனை இந்தியாவுக்கு அளித்தல், இந்தியத் தொழில்நுட்பவியலாளர்களுக்கு ஒரு முழுமையான பயிற்சி மற்றும் உதவி அளிக்கும் திட்டம்; எல்லாவற்றுக்கும் மேலாக ‘படுவேகமாக விமானங்களை டெலிவரி செய்யும் திட்டம் வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி மற்றும் ஸ்பெயினுக்கு அனுப்ப வேண்டிய விமானங்களைத் திசைமாற்றி இந்தியாவுக்கு அனுப்புவோம்!”

இந்தியா இழந்த வாய்ப்பு

இந்தியாவிடமிருந்து எந்தக் கோரிக்கையும் இல்லாமல் தானாக யூரோஃபைட்டர் இந்த ஆலோசனைகளை முன்வைக்கவில்லை. இந்த உண்மை, அருண் ஜேட்லிக்கு யுரேனா-ராஸோ எழுதிய கடிதத்தின் புதிர் நிறைந்த முதல் வாசகத்திலிருந்து தெரியவருகிறது. அந்த வாசகம்: “இந்தியாவிடம் இப்போது இருக்கும் போர் விமானங்களை மாற்றுவதில் இந்திய அரசுக்கு இருக்கும் ஆர்வம் எங்களுடைய முழு கவனத்தையும் தொடர்ந்து ஈர்த்து வந்தது; அதனால்தான் இந்தியாவில் இருக்கும் எங்கள் நாட்டுத் தூதரின் மூலமாக நீங்கள் அனுப்பிய வேண்டுகோளுக்கு நாங்கள் உற்சாகமாகச் செவி சாய்க்கிறோம்.”

யூரோஃபைட்டர் கூட்டமைப்பு அளித்த இந்தப் புதிய ஆலோசனையை முழுமையாகப் பயன்படுத்தும் வாய்ப்பு இழக்கப்பட்டது. “யூரோஃபைட்டரின் ஆலோசனையை அத்தருணத்தில் கணக்கிலெடுத்துக்கொள்வது, பாதுகாப்புத் தளவாடங்கள் வாங்குவதற்கான வழிமுறை ஆவணத்தின்படி அனுமதிக்க முடியாதது மட்டுமின்றி, மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் வழிகாட்டு நெறிகளை மீறுவதும் ஆகும்” என்று பேச்சுவார்த்தைக் குழு எடுத்த பெருவாரி நிலைப்பாடு உண்மையில் விவாதத்துக்குரியது.

தயார் நிலையிலிருக்கும் விமானங்களை வாங்குவதற்குப் பதிலாக, 18 தயார் நிலை விமானங்களை வாங்கி மீதமுள்ள 108 விமானங்களை ஹெச்.ஏ.எல். நிறுவனம் லைசென்ஸ் அடிப்படையில் தயாரிப்பது என்ற நிலையெடுத்து, ‘தஸ்ஸோ’ நிறுவனத்துடன் நேரடியாக வணிக ஒப்பந்தம் செய்வதற்கு மாறாக, இரு நாட்டு ஒப்பந்தம் என்ற பாதையைத் தேர்ந்தெடுத்ததன் மூலம், இந்தியா மற்றும் பிரான்ஸ் அரசுகளும் அந்நிறுவனமும் ஒரு புதிய ஒப்பந்தத்தை உருவாக்கினார்கள் என்பதுதான் இதற்குப் பொருள்.

கடைசியாக முன்வைக்கப்பட்ட விலை சரிவரவில்லை என்றால், அதுகுறித்த பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேவருவது என்று ஒரு நிச்சயமான வழியிருந்தது. இதை வைத்துக்கொண்டு, இந்தியாவின் சார்பாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள் பிரான்ஸிடம் உறுதியாகப் பேரம் செய்திருக்கலாம். யூரோஃபைட்டரின் விற்பனை ஆலோசனையில் கூறப்பட்ட விலைக்கு ஈடான விலை கேட்டு பிரான்ஸை இன்னும் நெருக்கியிருக்கலாம்.

ஏறிய விலைச் சுமை

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் புதிய விவரங்களைச் சுருக்கமாகக் காணலாம்: 2007-ல் தஸ்ஸோ நிறுவனம் ஒப்பந்த முயற்சியில் இருந்தபோது இந்தியாவின் தனித் தேவைக்கேற்ற திறன் மேம்பாட்டு அம்சங்களை வடிவமைத்து, விமானத்தில் பொருத்துவதற்கான கட்டணமாக அந்நிறுவனம் கேட்ட 1.4 பில்லியன் யூரோக்களை 126 விமானங்களின் விலையுடன் சமமாக இணைத்திருக்க வேண்டும். இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி இந்த நிரந்தரக் கட்டணம் 1.3 பில்லியன் யூரோக்களாகக் குறைக்கப்பட்டபோதிலும், அது 36 ரஃபேல் விமானங்களின் விலையுடன் சேர்க்கப்பட்டது. மன்மோகன் சிங் அரசின் காலத்தில் கூறப்பட்ட விலையுடன் ஒப்பிடும்போது, ஒவ்வொரு விமானத்தின் விலையும் தற்போது 25 மில்லியன் யூரோ அதிகம்.

இந்த 25 மில்லியன் யூரோ என்பது 2016-ல் பிரான்ஸ் அடிப்படைக் கட்டுமானம் மட்டுமுள்ள விமானத்துக்கு அளித்த 9% கழிவைவிட அதிகம் என்பது இங்கே கவனிக்க வேண்டியது. “இந்த 9% கழிவு அடிப்படைக் கட்டுமானம் கொண்ட விமானத்துக்கு மட்டும்தான். முழுமையான பாகங்கள் பொருத்தப்பட்ட போருக்குத் தயார் நிலையில் இருக்கும் ரஃபேல் விமானத்துக்கு இல்லை என்கிற விவரத்தை நவம்பர் 2018-ல் கொடுத்த பேட்டியில் ‘தஸ்ஸோ’ நிறுவனத்தின் தலைமை அதிகாரி எரிக் ட்ராப்பியர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

ஆனால், ஜூலை 23, 2018 அன்று பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த 9% கழிவு தொடர்பில் விளக்கிய மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், “இந்தியாவின் தனித் தேவைக்கேற்ற திறன் மேம்பாட்டு அம்சங்களை வடிவமைத்து உருவாக்கும் செலவையும் கணக்கிலெடுத்துக்கொண்டால், 36 ரஃபேல் விமானங்களுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி பேசியிருக்கும் விலை 2007-ல் தஸ்ஸோ குறிப்பிட்ட விலையைவிட 41.42% உயர்ந்து 127.86 மில்லியன் யூரோவாகும்” என்பதைச் சொல்லத் தவறிவிட்டார்.

காலப்போக்கில் ஏற்படும் விலை உயர்வின் அடிப்படையில் பார்த்தால், மன்மோகன் சிங் ஆட்சியில் டெண்டர் திறக்கப்பட்டபோது குறிப்பிடப்பட்டிருந்த விலையைவிட பாஜக ஆட்சியில் ஒப்புக்கொள்ளப்பட்ட விலை 14.20% அதிகம்.

அதாவது, தஸ்ஸோ தலைமை அதிகாரி ட்ராப்பியர் தன் பேட்டியில் உறுதிப்படுத்தியபடி, ரவி சங்கர் பிரசாத் 2007-லும் 2011-லும் இருந்ததாகக் குறிப்பிட்ட விலைகள் 18 தயார் நிலையில் இருந்த விமானங்களுக்கானது. மீதமிருக்கும் 108 விமானங்கள் பெங்களூரில் இருக்கும் ‘ஹெச்ஏஎல் நிறுவனத்தால் உரிமத்தின்படி உற்பத்திசெய்யப்பட வேண்டும். இந்த 108 விமானங்கள் குறித்த பேச்சுவார்த்தை முன்னேறிய நிலையிலிருந்தபோதுதான், இந்தியா 36 தயார் நிலை விமானங்களை பிரான்ஸிடமிருந்து வாங்குகிறது என்கிற ஆச்சரியகரமான அறிவிப்பு பாரிஸிலிருந்து ஏப்ரல் 2015-ல் வெளியானது. ஹெச்ஏஎல் நிறுவனத்தையும், அதோடு தொழில்நுட்பப் பரிமாற்றத்துக்கான திட்டத்தையும், பாதுகாப்புத் துறையில் சுய சார்பினை வளர்க்கும் இலக்கையும், பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ கோஷத்தையும் இந்த அறிவிப்பு ஒரு சேரத் தூக்கி எறிந்துவிட்டது என்பதுதான் இதன் ஒரு பொருள்.

இன்னொரு நடைமுறை மீறல், இழப்புமேலும், 9% விலை குறைப்புக்குக் கைமாறாக, 126 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தினை எட்டும் தருணத்தில் தஸ்ஸோவுடன் தொடர்ந்து வணிகம் செய்வதற்கான ஷரத்தும் கைவிடப்பட்டது. அதாவது, அதே நிறுவனத்திடமிருந்து அதே விதிமுறைகள், நிபந்தனைகளின்படி 50% விமானங்களை வாங்கும் வசதியை உறுதிசெய்யும் இந்த ஷரத்து நீக்கப்பட்டது. இது பாதுகாப்புத் துறை தொடர்பான ஒப்பந்தங்களில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நடைமுறையிலிருந்து விலகும் செயலாகும்.

மன்மோகன் சிங் அரசாங்கம் போர் விமானம் வாங்குவதற்காக நீண்ட காலமாக நடத்திவந்த பேச்சுவார்த்தையில், 189 விமானங்களை இந்தியாவின் பிரத்யேகத் தேவைக்கேற்ற திறன் மேம்பாட்டு அம்சங்களையும் சேர்த்து ஒரு நிலையான விலையில் வாங்கும் வாய்ப்பு இருந்தது.

போஃபர்ஸும் ரஃபேலும்

2015-16-ல் உருவான ரஃபேல் விமான ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்களைப் புலனாய்வுரீதியாகவும், குற்றம்சாட்டும் வகையிலும், விமர்சனபூர்வமாகவும் அலசும் நிறைய எழுத்தாக்கங்கள் வெளிவந்துவிட்டன.

போர் விமானம் வாங்கும் விவகாரத்தில், பாதுகாப்புத் துறைக்கான சாதனங்கள் வாங்கும் பொறுப்பிலிருக்கும் நிறுவனங்களும், சட்டப்படியான, ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்டுள்ள நடைமுறைகளும் விலக்கப்பட்டிருக்கின்றன என்றும்; வழிகாட்டுநெறிகள் மீறப்பட்டுள்ளன என்றும்; நிதித் துறை நிபுணர்கள் விலை குறித்து வைத்திருக்கும் ஒரு வகையான உச்சவரம்பு 5.2 பில்லியன் யூரோவிலிருந்து 8.2 பில்லியன் யூரோவாக அரசியல் வட்டாரங்களால் தான்தோன்றித்தனமாக உயர்த்தப்பட்டிருக்கின்றன என்றும்; ஒப்பந்தத்தின் முக்கியமான துணைப் பங்குதாரரைத் தேர்வுசெய்ததற்குப் பின்னால் மோடி அரசின் வேண்டப்பட்ட முதலாளிகளுக்கு ஆதரவான போக்கு இருக்கிறதென்றும்; சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளின் அறிவுரையின்படி, பிரான்ஸ் நாட்டு அரசாங்கத்தின் இறையாண்மை சார்ந்த உத்தரவாதத்தை வலியுறுத்திப் பெறுவதற்குப் பதிலாக, அந்நாட்டின் பிரதமரிடமிருந்து ‘ஆசுவாசக் கடிதம்’ பெற்றுத் திருப்தி அடைந்ததன் மூலம் மோடி அரசாங்கம் நியாயப்படுத்த முடியாத ஒரு அபாயகரமான முடிவை எடுத்திருக்கின்றது என்றும்; இந்திய விமானப் படை ஏமாற்றப்பட்டிருக்கிறது என்றும்கூட இந்த எழுத்தாக்கங்கள் காட்டுகின்றன.

இந்தப் பிரச்சினையில் போராடும் கதாநாயகர்களும் அவர்களுக்கு எதிராகக் களமாடுபவர்களும் அவரவர் நோக்கங்களுக்கேற்ப ரஃபேல் விவகாரத்தை போஃபர்ஸ் ஊழலுடன் ஒப்பிடுகின்றனர். பாதுகாப்புத் துறைக்கான பொருட்களை வாங்கும் முக்கிய முடிவினை எடுக்க 2015-16-ல் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கும் 1985-86ல் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கும் விசித்திரமான, அச்சம் தரத்தக்க ஒற்றுமைகள் இருப்பது உண்மைதான். ஆனால், போஃபர்ஸ் விவகாரத்தில் பத்திரிகைப் புலனாய்வுகள் கமிஷன் என்ற பெயரில் ஸ்விஸ் நாட்டு வங்கிகளின் பணம் செலுத்தப்பட்ட ஊழலை வெளிக்கொண்டுவந்ததுபோல், ரஃபேல் விவகாரத்தில் பணம் விளையாடியிருப்பதற்கான ஆதாரம் எதுவும் இது வரை வெளிவரவில்லை. ஆனால், ரஃபேல் விவகாரம் தொடர்பாக இறுதி முடிவு இன்னும் எழுதப்படவில்லை என்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

©‘தி இந்து’,

சுருக்கமாகத் தமிழில்: ஆர்.விஜயசங்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x