Published : 30 Jan 2019 09:43 AM
Last Updated : 30 Jan 2019 09:43 AM

கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவாரா..?

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கிறது. யார் எக்கேடு கெட்டால் என்ன.. தான் சொன்னது நடக்க வேண்டும் என்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் அதிபர் ட்ரம்புக்கு எதிராகத்தான் இந்தத் தேர்தல் முடிவுகள் இருக்கும் எனத் தெரிகிறது. மோசமான சூழலில் சிக்கியிருக்கும் வெள்ளை மாளிகையில் நுழைய ஜனநாயகக் கட்சி சார்பில் பல பெண் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். கட்சியின் மூத்த தலைவர்களே தயங்கி நிற்கும் வேளையில், கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸ் களத்தில் குதித்திருக்கிறார். 54 வயதாகும் கமலா ஹாரிஸ், ஜமைக்கா நாட்டு தந்தைக்கும் தமிழ் நாட்டைச் சேர்ந்த தாய்க்கும் (சியாமளா கோபாலன்) பிறந்தவர். அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்த அடுத்த 24 மணி நேரத்தில் 15 லட்சம் டாலர் திரட்டியுள்ளார். அமெரிக்க அரசியலிலும் பத்திரிகை வட்டாரத்திலும் இது பரபரப்பாக பேசப்படுகிறது.

ஜனநாயகக் கட்சி சார்பாக கமலா மட்டுமல்ல மேலும் பல பெண் வேட்பாளர்களும் போட்டியில் குதித்துள்ளனர். செனட்டர் எலிஸபெத் வாரன், கிறிட்டின் கில்லிபிராண்ட், ஆமி க்ளோபுச்சார் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர, இந்திய அமெரிக்கர் நிக்கி ஹாலே, ஹிலாரி கிளிண்டன், துளசி கப்பார்ட் மற்றும் மிச்சேல் ஒபாமாவும் களத்தில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனநாயகக் கட்சி சார்பில் இந்த பெண்கள் தவிர, ஏற்கனவே அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பெர்னி சாண்டர்ஸ், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் ஆகியோரும் தயாராக உள்ளனர். இத்தனை பேர் களத்தில் இறங்கினால், அதனால் ஏற்படும் போட்டியால், இவர்களே வெற்றிக் கனியை வெள்ளித் தட்டில் வைத்து ட்ரம்பிடம் கொடுத்து விடுவார்கள் போலத் தெரிகிறது.

கமலா ஹாரிஸ் களத்தில் இறங்கியதுமே, அதிபர் ட்ரம்பின் ஆதரவாளர்கள், எதிர் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டனர். கமலாவின் பெற்றோர் இருவருமே, கமலா பிறந்து 5 ஆண்டுகள் வரை சட்ட விரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்ததாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அமெரிக்க அரசியல் சட்டப்படி, அமெரிக்காவில் பிறந்த யார் வேண்டுமானாலும் அதிபர் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த பராக் ஒபாமா, 2011-ம் ஆண்டில் அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, அவர் கென்யாகாரர் என எதிர் பிரச்சாரம் செய்தவர் அதிபர் ட்ரம்ப். ஒபாமா ஹவாயில் பிறக்கவில்லை என்றும் அவரது பிறப்பு சான்றிதழை தானே பார்த்துள்ளதாகவும் கூறினார். அதோடு, அவரது ஆதரவாளர்கள் ஒபாமா ஒரு முஸ்லிம் என்றும் பிரச்சாரம் செய்தார்கள்.

கமலாவின் வெளிநாட்டு பெற்றோர் தொடர்பாக அரசியல் எதிரிகள் பொய்யான பிரச்சாரத்தில் ஈடுபடத்தான் செய்வார்கள். மிகவும் திறமையான செனட்டர் எனப் பெயரெடுத்த கமலா ஹாரிஸ், குற்றங் களைக் குறைத்து கலிபோர்னியாவின் கண்டிப்பான அட்டர்னி ஜெனரலாகவும் நல்ல பெயர் சம்பாதித்துள்ளார். அவர் ட்ரம்புக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பார் என்பதால், இப்போது இருந்தே பொய் பிரச்சாரம் தொடங்கிவிட்டது. ஒபாமா அதிபராக இருந்த காலத்திலேயே, அரசு கொள்கைகளில் உறுதியாக இருந்தவர் என்பதால், பெண் ஒபாமா என அழைக்கப் பட்டவர் கமலா ஹாரிஸ். வாக்கு வங்கியை சிதற விடாமல், காலநேரத்தை வீணடிக்காமல் ஜனநாயகக் கட்சியினர் இப்போதிருந்தே ஒரு வேட்பாளரை முடிவு செய்து அவர் பின்னால் அனைவரும் அணிவகுக்க வேண்டும். தனக்கு பெண்கள், சிறுபான்மையினர் ஆதரவு மட்டுமல்லாது, ட்ரம்ப் அதிருப்தியாளர்களின் ஆதரவும் இருப்பதை கமலா ஏற்கனவே நிரூபித்துள்ளார். அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் இரண்டு கட்சிகளிலுமே இருக்கிறார்கள். அமெரிக்க அரசியலில் முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள். அதேபோல், இரு கட்சிகளுக்குமே தேர்தல் நிதி அளித்து ஆதரித்து வந்துள்ளனர்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸை நிறுத்தினாலும் சரி இல்லாவிட்டாலும் சரி.. இரண்டு விஷயங்களை அக் கட்சித் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன், கடைசிவரை வெற்றி முனைப்பு இல்லாமல்தான் இருந்தார். அந்த நிலைமை இப்போது இருக்கக்கூடாது. கட்சிக்குள் நடக்கும் கசப்பான போட்டியை தாமதம் இல்லாமல் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இந்த இரண்டையும் செய்யாவிட்டால், மீண்டும் ட்ரம்ப் தான் அமெரிக்க அதிபராக வருவார். அதைத் தடுக்க முடியாது.

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி,

எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் பேராசிரியர்,

வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்.

தமிழில்: எஸ்.ரவீந்திரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x