Last Updated : 29 Jan, 2019 10:00 AM

 

Published : 29 Jan 2019 10:00 AM
Last Updated : 29 Jan 2019 10:00 AM

நோட்டா: தேர்தல் முடிவைத் தீர்மானிப்பதில்லை!

சமீபத்தில் நடந்துமுடிந்த ஐந்து மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்களுக்கிடையே வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவு. மத்தியபிரதேசத்தில் இது 0.1% ஆகவும் ராஜஸ்தானில் 0.5% ஆகவும் உள்ளன. ‘நோட்டா’வால்தான் தங்களுக்குத் தோல்வி என்று பாஜக குற்றஞ்சாட்டுகிறது. பாஜக நிலையில் இருந்திருந்தால் காங்கிரஸும் இதையே கூறியிருக்கும். வாக்காளர்களும் நோட்டாவால் தேர்தல் முடிவை மாற்றிவிடலாம்போலிருக்கிறது என்று நம்பத் தொடங்கியுள்ளனர். இது உண்மையல்ல.

சமீபத்தில் நடந்த தேர்தலில் தெலங்கானா தவிர, எஞ்சிய 4 மாநிலங்களிலும் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகளே குறைந்துவிட்டன. மத்தியபிரதேசத்தில் 1.9%-லிருந்து 1.3% ஆகவும் ராஜஸ்தானில் 1.9%-லிருந்து 1.3% ஆகவும், சத்தீஸ்கரில் 3%-லிருந்து 1.9% ஆகவும் மிசோரத்தில் 0.6%-லிருந்து 0.4% ஆகவும் குறைந்துள்ளது. தெலங்கானாவில் 0.7%-லிருந்து 1.0% ஆக சிறிதளவே உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் நோட்டாவுக்கு விழும் வாக்குகள் அதிகரித்துவிடவில்லை.

மக்களவைப் பொதுத் தேர்தலில் 1.08% வாக்காளர்கள் மட்டுமே நோட்டாவை நாடினர். புதுச்சேரி 3%, மேகாலயம் 2.8% ஆகிய மாநிலங்களில் மட்டும் குறிப்பிடும்படி இருந்தது. ஏராளமான மாநிலங்களில் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் பதிவான மொத்த வாக்குகளில் வெறும் 1% முதல் 1.5% ஆகவே இருந்தன. பெரிய மக்களவைத் தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை 27 லட்சமாக இருக்கும் நிலையில், சில நூறு வாக்குகள் முடிவையே மாற்றிவிடும் என்பதை நம்பக்கூட முடியவில்லை.

உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் நோட்டா வலிமை வாய்ந்த ஆயுதமாக இருக்க முடியும். அங்கு தொகுதிகளும் சிறியது, வாக்காளர்களும் குறைவு. சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல்களில் நோட்டாவை ஆயுதமாகக் கையாள முடியாது. இந்தி பேசும் மாநிலங்களில் பேரவைத் தொகுதிகளில் சராசரி வாக்காளர் எண்ணிக்கையே 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை.

மத்தியபிரதேசத்தில் 23 பேரவைத் தொகுதிகளில் வாக்கு வித்தியாசத்தைவிட நோட்டா வாக்குகள் அதிகம். அதில் 10-ல் பாஜகவும் 12-ல் காங்கிரஸும் வென்றன. பர்ஹான்பூரில் சுயேச்சை வென்றார். ராஜஸ்தானில் 16 தொகுதிகளில் போட்டி கடுமை. இங்கே நோட்டா வாக்குகள், வாக்கு வித்தியாசத்தைவிட அதிகம். இங்கும் 8 தொகுதிகளில் பாஜக, 7 தொகுதிகளில் காங்கிரஸ், மார்வார் ஜங்ஷன் தொகுதியில் சுயேச்சை (251 வாக்கு வித்தியாசம்) வென்றனர். சத்தீஸ்கரில் 8 தொகுதிகளில் போட்டி கடுமை. அதில் 3 பாஜகவுக்கும், 2 காங்கிரஸுக்கும், 3 அஜீத் ஜோகியின் ஜனதா காங்கிரஸுக்கும் கிடைத்தன.

மாநிலத்தின் ஒட்டுமொத்தத் தேர்தல் முடிவையும் அலசி ஆராய்ந்தால், மாநிலம் முழுவதும் மக்களுக்கிருக்கும் மனநிலையின் வெளிப்பாடுதான் அந்தத் தொகுதிகளிலும் எதிரொலித்திருப்பது புரியும். அங்கே முதல் இரு இடங்களைப் பிடிக்கும் வாக்காளர்களுக்கு இடையிலான வாக்கு வித்தியாசத்தைவிட நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் அதிகமாக இருந்தாலும்கூடத் தேர்தல் முடிவைத் தீர்மானிப்பது அது அல்ல.

© ‘தி இந்து’ ஆங்கிலம். சுருக்கமாகத் தமிழில்: ஜூரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x