Published : 07 Jan 2019 08:47 AM
Last Updated : 07 Jan 2019 08:47 AM

ஹசீனாவின் பிரம்மாண்ட வெற்றி: ஜனநாயகம் தழைக்கும் தருணமா?

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி. பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்தியதாலும் சமூக முன்னேற்றத்துக்கான திட்டங்களை அமல்படுத்தியதாலும் அது மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால், போட்டியிட்ட 299-ல் 288-ல் அவாமி லீக் கட்சி வென்றிருப்பது அக்கட்சியின் ஆதரவாளர்களையே மலைக்க வைத்திருக்கிறது. தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் பேசத் தொடங்கியிருக்கின்றன.

2014-ல் பிரதான எதிர்க்கட்சியான ‘வங்கதேச தேசியக் கட்சி’ (பிஎன்பி) தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தபோதுகூட 234 இடங்களில்தான் ‘அவாமி லீக்’ கட்சியால் வெல்ல முடிந்தது. பிஎன்பி தலைமையில் எதிர்க்கட்சிகள் ‘தேசிய ஐக்கிய முன்னணி’ என்ற பெயரில் கூட்டணியாகப் போட்டியிட்டன. அந்த முன்னணிக்கு ஏழு இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதேசமயம், அவாமி லீக் கட்சியின் இத்தகைய பிரம்மாண்ட வெற்றி குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் சந்தேகங்கள் பொருட்படுத்தத்தக்கவை. ‘இது கேலிக்கூத்தான தேர்தல், தேர்தல் ஆணையம் உடனடியாக மறு தேர்தல் நடத்த வேண்டும்’ என்று எதிர்க்கட்சிகளின் கூட்டணித் தலைவர் கமால் உசைன் அழைப்பு விடுத்துள்ளார். மோசடிகள் நடப்பதாகக் கூறி நாற்பதுக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகினர். எதிர்க்கட்சிகள் ஒடுக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான இணையதளங்கள் செயலிழந்தன.ஆனால், இந்தத் தேர்தல் 2014-ல் நடந்ததைவிட நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடந்திருப்பதாக, ‘சார்க்’ அமைப்பின் மனித உரிமைகள் அறக்கட்டளை அமைப்பும், தேர்தலைக் கண்காணிப்பதற்கான அமைப்பும் கூறுகின்றன. எனவே, ஹசீனாவின் வெற்றியை முழுக்கப் புறந்தள்ளவும் முடியாது.

ஹசீனாவுக்கு முன்புள்ள சவால்கள் மிகப் பெரியவை. அரசியல் பிளவுகளாலும் வன்முறைகளாலும் பிளவுபட்டிருக்கும் காயங்களுக்கு மருந்திடும் வகையில் அவர் செயல்பட வேண்டும். முறைகேடுகள் மூலம் வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்திருக்கும் நிலையில், எதிர் அரசியலுக்கான சுதந்திரச் சூழலைக் கொண்டுவர வேண்டியது அவர் செய்ய வேண்டிய முதல் வேலை.

தேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார்கள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் தேர்தல் ஆணையத்தின் நடுநிலை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். எதிர்க்கட்சித் தலைவர்களிடம் நேசக்கரத்தை நீட்ட வேண்டும் ஹசீனா. அவருடைய ஆட்சியின் சிறப்புகள் அரசின் சர்வாதிகாரப் போக்கால் சிதைந்துவிடுகின்றன. சட்டத்தின்படியான ஆட்சியை உறுதிசெய்ய வேண்டும், மக்களுடைய அடிப்படை உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும், நிறுவனங்களின் சுதந்திரத்தை மதிக்க வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஹசீனா வெற்றி பெற்றிருப்பது நிச்சயம் நல்ல செய்திதான். அவருடைய தலைமையின் கீழ், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, எல்லைப்புற ஒற்றுமை, ராணுவத் தொடர்புகள் வலுவடைந்திருக்கின்றன. எனவே, வங்கதேசத்துடனான உறவை மேம்படுத்துவதில் இந்தியாவின் அக்கறை தொடர வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x