Published : 07 Jan 2019 08:50 AM
Last Updated : 07 Jan 2019 08:50 AM

இந்திய நிலப்பரப்புடன் இணைகிறதா இலங்கை?

இன்னும் 700-750 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் செல்ல கப்பல் தேவைப்படாது. நிலமார்க்கமாகவே சென்றுவிடலாம். ஆம், இரு நாடுகளும் இயற்கையான நிலப் பாலத்தால் இணைக்கப்படும் என்கின்றன உலகு சார் நடத்தப்பட்ட ஆய்வுகள். இன்றைய கடல் மட்டத்தோடு கடந்தகால கடல் மட்டத்தை ஒப்பிடும்போது கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் ஆய்வாளர்கள் இந்தக் கருத்தை முன்வைக்கிறார்கள்.

தெற்காசிய நாடுகளில், இந்தியாவும் இலங்கையும் மிக அருகில் உள்ள இரண்டு நிலப்பகுதிகள் / நாடுகள். இந்த நிலப்பகுதிகள் இரண்டும் கடந்தகாலத்தில் ஒரே நிலப்பகுதியாக இருந்தன என்றும், பின்னர் கடல் கோளினால் பிரிக்கப்பட்டன என்றும் சங்ககாலத் தமிழ் இலக்கியங்கள் விவரிக்கின்றன. இன்றைய கடல் மட்டத்தோடு கடந்தகாலக் கடல் மட்டத்தை ஒப்பிடும்போது, கடந்த 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடல் மட்டம் உயர்ந்தும் தாழ்ந்தும் வந்திருக்கிறது என்கின்றன உலகு சார் நடத்தப்பட்ட ஆய்வுகள்.

இணைந்திருந்த இலங்கை

கடந்த 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம், இன்றைய கடல் மட்டத்தைவிட சுமார் 7 மீட்டர் ஆழத்தில் இருந்ததாகவும், 1.4 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் 130 மீட்டர் ஆழத்துக்குத் தாழ்ந்ததாகவும், 1.25 லட்சம் ஆண்டுகள் காலகட்டத்தில் கடல் மட்டம் உயர்ந்து தற்கால மட்டத்துக்கு 5 மீட்டர் கீழான உயரத்தை அடைந்தது என்றும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பின்னர், கடல் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாகத் தாழ்ந்து சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில், இன்றைய கடல் மட்டத்தைவிட 130 மீட்டர் ஆழத்தில் இருந்ததாகவும், கடந்த 20,000 ஆண்டுகள் முதல் கொஞ்சம் கொஞ்சமாக கடல் மட்டம் உயர்ந்து தற்கால நிலையை அடைந்திருக்கிறது என்றும் இந்த ஆய்வுகள் கூறுகின்றன.

கடல் மட்டத்தில் நிகழ்ந்த இந்த மாறுதல்களை, நானும் எனது ஆராய்ச்சி மாணவர்களும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வுத் துறையில் கணினி மூலம் காட்சிப்படுத்திப் பார்த்தோம். கடந்த 2 லட்சம் ஆண்டுகள் முதல் தற்காலம் வரை, கடல் மட்டம் தாழ்ந்தபோது இந்தியாவும் இலங்கையும் இணைந்திருந்ததையும், கடல் மட்டம் உயர்ந்த காலங்களில் பிரிந்து இரு நிலப்பகுதிகளாக இருந்ததையும் உணர முடிந்தது. சமீபத்தில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே வடமேற்கே வேதாரண்யத்தில் இருந்து தென்கிழக்கே இலங்கை யாழ்ப்பாணத்தை நோக்கி நீளமான நிலப்பகுதி உருவாகிவருவது கண்டறியப்பட்டிருக்கிறது.

பிறைவடிவ மணல்மேடுகள்

செயற்கைக்கோள் படம் மற்றும் கணினி தகவலியல் (ஜிஐஎஸ்) சார் ஆய்வுகள் மேலும் பல அரிய தகவல்களை வெளிக்கொணர்ந்திருக்கின்றன. வேதாரண்யத்துக்கு மேற்கே உள்ள பட்டுக்கோட்டை - மன்னார்குடி பகுதியில் இரண்டு பூமி வெடிப்புகள் உள்ளதாகவும், இதன் மூலம் பட்டுக்கோட்டை -மன்னார்குடி பகுதி கொஞ்சம் கொஞ்சமாக மேலே எழும்பிக்கொண்டு இருப்பதாகவும் தெரிகிறது. இதனால் கிழக்கே உள்ள திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் கடலோரப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக மேலே உயர்ந்தும் தென் கிழக்காக வளர்ந்தும்வருகிறது. இதன் காரணமாக, வடமேற்கே திருத்துறைப்பூண்டியில் இருந்து தென்கிழக்கே வேதாரண்யம்/கோடியக்கரை வரை சுமார் கடந்த 6,000 ஆண்டுகளில் கடல் 60 கி.மீ. பின்வாங்குவதோடு, நிலப்பகுதி மண்மேடுகளாகப் பிறை வடிவில் உருவாகியிருக்கிறது.

பட்டுக்கோட்டை - மன்னார்குடி நிலப்பகுதி உயரும்போது, அதைச் சுற்றிக்கொண்டு கடற்கரை ஓரமாக, மார்ச் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை வடக்கு நோக்கி ஓடும் கடலோர நீரோட்டமும், நவம்பர் முதல் பிப்ரவரி வரை தெற்கு நோக்கி ஓடும் நீரோட்டமும் இதற்குக் காரணம் எனலாம். அதாவது, பட்டுக்கோட்டை மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி பகுதியைக் கடக்கும்போது நீரோட்டம் தடுக்கப்படுவதால், அந்தப் பகுதியைச் சுற்றிப் பிறை வடிவில் மணலைக் கொட்டுகிறது நீரோட்டம். இந்த நிலப்பகுதி சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உயர, உயர, ஒன்றன்பின் ஒன்றாக முந்தைய பிறைவடிவ மண்மேடுகளை அடுத்தடுத்த மணல் மேடுகள் சுற்றிக்கொண்டு இப்படி வடிவம் பெற்றிருக்கின்றன.

இதேபோல், திருத்துறைப்பூண்டி முதல் கோடியக்கரை வரை காணப்படும் மணல் மேடுகளை கார்பன் வயது கணிப்புக்கு உட்படுத்தியபோது அவை கி.மு. 4100 ஆண்டுகளில் கடற்கரை திருத்துறைப்பூண்டி அருகே இருந்ததாகவும், நிலம் உயரும்போது கடல் பின்வாங்கி கி.மு. 3600 ஆண்டுகளில் மரங்காநல்லூரை அவை அடைந்ததாகவும் தெரியவருகிறது. கி.மு. 1600-ம் ஆண்டுவாக்கில் கடல் மேலும் பின்வாங்கி திட்டக்குடியையும், கி.பி. 700-ம் ஆண்டுவாக்கில் வேதாரண்யத்தையும், பின்னர் கி.பி. 1000-ல் கோடியக்கரையையும் அடைந்திருக்கிறது. கி.பி. 2000 ஆண்டுகளில் எடுத்த செயற்கைக்கோள் படங்கள் கடலில் கோடியக்கரையில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி 20 கி.மீ. வரை மண் குவியல்கள் இருப்பதைக் குறிப்பதால் ஆண்டுக்கு 20 மீட்டர் வீதம் நிலப்பகுதி கடலில் கோடியக்கரையிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி உருவாகி உள்ளது என்று கணிக்க முடிகிறது.

இதுபோன்று கடந்த 6,000 ஆண்டுகளில், இருந்து இன்றுவரை ஒவ்வொரு ஆண்டுக்கும் இடையே மாறுபட்ட அளவீடுகளில் திருத்துறைப்பூண்டியில் இருந்து கோடியக்கரை வரை உருவாகி உள்ள நிலப்பகுதிகள், பட்டுக்கோட்டை மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி பகுதிகளில் பூமி மேல் எழும்புவதில் உள்ள மாறுபட்ட தன்மைகளையும், இக்காலங்களில் கடல் நீரோட்டத்தின் மாறுபட்ட வேகத்தையும் காட்டுகின்றன.

கோடியக்கரை யாழ்ப்பாணம்

மேலும் கடந்த 6,000 ஆண்டுகளில் சுமார் 60 கி.மீ. தூரம் திருத்துறைப்பூண்டியில் இருந்து கோடியக்கரைக்கு அப்பால் கடலில் 20 கி.மீ. வரை யாழ்ப்பாணத்தை நோக்கி வளர்ந்துள்ள நிலப்பகுதி எதிர்காலத்தில் எவ்வாறு பரிணாம வளர்ச்சி பெறும் என்று கணினியில் காட்சிப்படுத்தியபோது மிக முக்கியமான விஷயங்களைக் கணிக்க முடிகிறது.

தற்போது கோடியக்கரை - யாழ்ப்பாணத்துக்கு நடுவே பாதி தூரம் (20 கி.மீ.) வரை கடலில் தென்படும் மணல் படுகைகள் இன்னும் 500 ஆண்டுகளில், மேலும் 10 கி.மீ. யாழ்ப்பாணத்தை நோக்கி வளைந்து நெளிந்த நிலப்பகுதியாக வளர்ந்திருக்கும். 2600-ம் ஆண்டுவாக்கில் 40 கி.மீ. தொலைவுக்கும், 2750-ம் ஆண்டுவாக்கில் 50 கி.மீ. தொலைவுக்கும் வளர்ந்திருக்கும். இதன் மூலம், வளைந்து நெளிந்த நிலப்பகுதியாக யாழ்ப்பாணத்தோடு இணையும்.

பட்டுக்கோட்டை - மன்னார்குடி நிலப்பகுதியின் உயர்வு, கடல் நீரோட்டத்தின் வேகம் - சுழற்சி ஆகியவை கடந்த 6000 ஆண்டுகளில் இருந்துவரும் இதேநிலையில் தொடர்ந்தால், இந்திய இலங்கை நிலப்பகுதிகள் இணைவது சாத்தியம்தான்.

அதாவது, இந்தியாவும் இலங்கையும் ஒரு இயற்கையான நிலப்பாலத்தால் இன்னும் 2750-ம் ஆண்டுவாக்கில் இணைந்திருக்கும். இந்தப் புதிய நிலப்பாலத்தின் மூலம் உருவாகும் நிலவியல் மாற்றங்கள், கடல் நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள், இவை வளைகுடாவில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை விரிவாக ஆராயப்பட வேண்டும். அப்படி ஒரு நிலப்பகுதி உருவாகியிருந்தால், எதிர்காலத்தில் ஏற்படப்போகும் புவியியல் மாற்றம் புதிய திறப்புகளையும் ஏற்படுத்தலாம்!

- சோம.இராமசாமி, மாண்புமிகு பேராசிரியர்

தொலையுணர்வுத் துறை

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

திருச்சிராப்பள்ளி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x