Published : 27 Dec 2018 09:50 AM
Last Updated : 27 Dec 2018 09:50 AM

நோயாளிக்கு மருந்து மட்டும் போதுமா?

நோயாளிகளை அணுகும் விஷயத்தில், “நோய் என்ன என்பதை மட்டும் மதிப்பிடாதே, நோய் யாருக்கு இருக்கிறது என்பதையும் பார்” எனும் பழமொழியைப் பின்பற்றுவது நலம். ஒரே நோய், வெவ்வேறு நபர்களிடம், வெவ்வேறு விதமான உணர்வு வெளிப்பாட்டை உருவாக்கலாம். சொல்லப்போனால், நோயின் வெளிப்பாடு என்பது மனதால் நிர்ணயிக்கப்படும் விஷயம் எனலாம்.

பல மணி நேரத்துக்கு, எந்த அசைவுமில்லாமல் இருக்கும் சாத்தியம் கொண்ட துறவிகளை நாம் அறிவோம். ரமண மகரிஷி தனது கையில் உருவாகியிருந்த புற்றுநோயை அகற்ற, புலன்களின் முழுமையான கட்டுப்பாடு, தியானம், மன உறுதி ஆகியவற்றின் அடிப்படையில், மயக்க மருந்து இல்லாமலேயே அறுவைச் சிகிச்சை நடத்த ஒப்புக்கொண்டார் என்று சொல்லப்படுவதுண்டு.

அதீத துயரத்திலும் அதிர்ச்சியிலும் இருப்பவர்கள், மாரடைப்பைப் போல் இதயத்தில் கடுமையான பாதிப்பை (‘உடைந்த இதய நோய்க்குறி’) உணர்ந்த சம்பவங்கள் உண்டு. இதை ஜப்பானிய மொழியில் டகாஸ்டுமோ என்பார்கள்.

தலைவலி என்பது பொதுவான ஒரு பிரச்சினை. பல சமயங்களில் அது ஒற்றைத் தலைவலி (மைக்ரேன்) எனும் நரம்பியல் நோய்க்குறியின் முத்திரை அதில் பொருத்திப் பார்க்கப்படுகிறது. கவனமாக விசாரித்து, உடல் உறுப்பு சார்ந்த நோய் அல்ல என்பதை உறுதிப்படுத்திக்கொண்டால், வந்திருப்பது ‘பதற்றத் தலைவலி’தான் என்பது தெரியவரும். அமைதி குலைந்து காணப்படும் வாழ்க்கைத்துணை, அடிக்கடி தலைவலிப்பதாகச் சொல்வதையும், தலைவலியைக் காரணம் காட்டி வாக்குவாதங்களிலிருந்து வெளியேறுவதையும் பார்த்திருப்பீர்கள்.

பலவீனமான குடல் கொண்ட ஒருவர், ஒரு கடினமான சூழலை எதிர்கொள்ளும்போதெல்லாம் கழிப்பறைக்குச் செல்வதைச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். தேர்வெழுதச் செல்லும் ஒரு மாணவர், குறுக்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டியிருக்கும் சாட்சி என்று இதற்குப் பலரை உதாரணமாகக் காட்டலாம்.

ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா இன்னொரு உதாரணம். ஆஸ்துமா பாதிப்புக்கு ஒருவரது மனநிலை முக்கியப் பங்கு வகிக்கிறது. ரோஜாப்பூவால் ஒவ்வாமையை அடையும் ஒருவரிடம், தாளால் செய்யப்பட்ட செயற்கை ரோஜாவைக் காட்டினாலே அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதை உதாரணமாகச் சொல்லலாம்.

பிரெஞ்சு மருத்துவரான ட்ரூஸோவுக்குக் குதிரை உடலில் இருக்கும் செதில்கள் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். குதிரை வண்டியில் சாலையில் செல்லும்போது வண்டி ஓட்டுநருடன் குதிரை லாயத்தில் அமைதியாக இருக்கும்போதும் ஆஸ்துமா பிரச்சினை இருக்காது. ஆனால், குதிரை லாயத்தில் இருக்கும்போது வண்டி ஓட்டுநர் மீது கோபம் கொண்டால், அவருக்கு ஆஸ்துமா பாதிப்பு உருவாகிவிடும். இரண்டாம் உலகப் போரின்போது, ஐரோப்பாவில் ‘ஏர் ரெய்டு ப்ளீடிங்’ எனும் பாதிப்பு கணிசமாக அதிகரித்தது. வான்வழித் தாக்குதல்கள், ஷெல் தாக்குதல்கள் உள்ளிட்டவற்றின் காரணமாக, பொதுமக்களிடையே இயல்பாகவே பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. டாம் எனும் போர் வீரரின் உடல்நிலையை, குறிப்பாக வயிற்றின் உட்புறச் சுவரை இரண்டு ஐரோப்பிய மருத்துவர்கள் ஆராய்ந்தனர்.

அவர் அடிவயிற்றுச் சுவரிலும் வயிற்றிலும் துப்பாக்கி ரவை ஏற்படுத்திய துளை இருந்தது. டாம் கோபமாக இருக்கும் சமயங்களில், அவரது வயிற்றின் உட்புறச் சுவரின் இயக்கத்தில் மாறுபாடும், நெருக்கடித்தன்மையும் ஏற்படுவதை மருத்துவர்கள் இருவரும் கண்டறிந்தனர். அவர் மன அழுத்தத்தில் இருந்த தருணங்களில் வயிற்றின் சுவர், வெளிரிய நிறத்தை அடைந்ததும், அமைதியாக இருந்தபோது அது சாதாரண நிலையில் இருந்ததும் தெரியவந்தது.

சுருக்கமாகச் சொன்னால், ஒரு நோயாளியை அணுகும் விஷயத்தில், அவருக்கான மருந்துகளைத் தீர்மானிக்கும்போது அவரது பின்னணியைக் கருத்தில்கொள்ள வேண்டும். தனது நோய் தொடர்பாக அவர் சொல்லும் அனுபவங்களை வைத்து அவரது குணாதியசம் தொடர்பாக ஒரு சித்திரத்தை மருத்துவர் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

நோயாளியின் ஆளுமை வெளிப்படையாகத் தெரியவில்லை என்றால் அவரது குணாதியசம், வாழ்க்கைச் சூழல் போன்றவற்றை அவர் தனியாக இருக்கும்போது கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒருவர் தனது வாழ்க்கைத் துணையின் நடத்தை காரணமாக மன வேதனை அடையும்போதோ அல்லது தனது மாமியார் மீது கட்டுக்கடங்காத கோபம் அடையும்போதோ மடைதிறந்த வெள்ளமாக உணர்வுகள் எப்படி வெளிப்படுகின்றன என்பது ஆச்சரியமானது. எனினும், அன்றாட வாழ்வில் இவர்கள் தங்கள் உணர்வுகள் மீது திரையிட்டு வைத்திருப்பதுடன், மனவோட்டம் கடுமையாக எதிர்வினை செய்யும்போது வாந்தி, தலைவலி ஆகிய உடல் அறிகுறிகள் மூலம் நோய் உருவாகுமாறு செய்துவிடுகிறார்கள்.

முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி பற்றிய சம்பவம் ஒன்றை விவரிக்கிறார் அமெரிக்க எழுத்தாளரான நார்மன் கஸின்ஸ். ஒவ்வொரு நாளும் மருத்துவப் படைசூழ வந்து, நோயாளி தொடர்பான அன்றாடக் குறிப்புகளை வாசித்து ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டுச் சென்றுவிடும் மருத்துவரால் கடுமையாக விரக்தியடைந்திருந்தார் அந்த நோயாளி. ஒரு கட்டத்தில் கடும் விரக்தியடைந்தார். ஒரு நாள் அறைக்குள் மருத்துவர் நுழைந்தபோது, “டாக்டர், தயவுசெய்து நில்லுங்கள். நாள் முழுவதும் இந்த அறையில் தனியாகக் கிடக்கிறேன். நான் எதிர்பார்த்துக் காத்திருப்பது உங்கள் வருகைக்காகத்தான். நீங்களோ வந்து பார்த்துவிட்டு உடனே சென்றுவிடுகிறீர்கள். ஆறுதல் வார்த்தைகளைச் சொல்வதேயில்லை” என்று சொல்லிவிட்டார். பின்னர், மருத்துவமனையிலிருந்து தானே டிஸ்சார்ஜ் செய்துகொண்டு, ஒரு சொகுசு விடுதியில் அறையெடுத்துத் தங்கினார். ஏகப்பட்ட நண்பர்கள் புடைசூழ, இசை கேட்டுக்கொண்டு இன்பமாக இருந்தார். அவரது நோய் குறையத் தொடங்கியது. மகிழ்ச்சியான மனது அந்தத் தந்திரத்தைச் செய்தது!

அதேசமயம், எல்லா நோய்களும் மகிழ்ச்சியான, அமைதியான மனநிலையால் குணமாகிவிடுவதில்லை. ஒரு நல்ல மருத்துவர் நோய்க்குச் சிகிச்சையளிக்கிறார், ஒரு சிறந்த மருத்துவரோ நோயாளிக்குச் சிகிச்சையளிக்கிறார்!

- கே.வி.திருவேங்கடம், சென்னை மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்.

'தி இந்து' ஆங்கிலம், தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x