Last Updated : 30 Jan, 2019 10:21 AM

 

Published : 30 Jan 2019 10:21 AM
Last Updated : 30 Jan 2019 10:21 AM

காந்தி 150: கஸ்தூர்பாவுக்கு ஒரு கடிதம்!

‘நீ மட்டும் தைரியத்தைக் கைவிடாமல் இருந்து, தேவையான சத்தான ஆகாரங்களையும் எடுத்துக்கொண்டால் உடம்பு சரியாகிவிடும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நீ காலமாகிவிட்டால், நான் உயிரோடு இருக்கையில் என்னிடமிருந்து நீ பிரிந்திருக்கும்போது நீ அப்படிச் செய்வதில் குற்றம் எதுவும் இல்லை என்று மட்டும் சொல்வேன். நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்றால், நீ இறந்துவிட்டாலும்கூட என்னைப் பொறுத்தவரை வாழ்ந்துகொண்டுதான் இருப்பாய். உன் ஆன்மாவுக்கு மரணமில்லை. நான் அடிக்கடி சொல்லியிருப்பதை மீண்டும் சொல்கிறேன். உன் வியாதி உன்னை எடுத்துச் சென்றுவிடுமானால் நான் இன்னொரு திருமணம் செய்துகொள்ள மாட்டேன்’ (ராமச்சந்திர குஹாவின் ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, கிழக்கு பதிப்பகம்) என்று தென்னாப்பிரிக்கச் சிறையிலிருந்து காந்தி தன் மனைவி கஸ்தூர்பாவுக்குக் கடிதம் எழுதினார்.

ஆசியர்களை அடிமையாக்கும் ‘ஆசியப் பதிவுச் சட்டம்’ ரத்துசெய்யப்படும் என்று சொல்லிவிட்டு அப்படிச் செய்யாமல் ஜெனரல் ஸ்மட்ஸ் ஏமாற்றியதால் கொதித்தெழுந்த இந்தியர்கள், தங்கள் பதிவுச் சான்றிதழ்களை எரிப்பதாக முடிவெடுத்தனர். ஆகஸ்ட் 16, 1908 மாலை நான்கு மணியளவில் ஜோஹன்னஸ்பர்கில் உள்ள ஹமீதியா மசூதியின் முன்னே இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஒன்றுகூடினார்கள். இந்தியர்கள் வஞ்சிக்கப்பட்டதை எண்ணி அந்தக் கூட்டத்தில் பலரும் குமுறினார்கள். உரைகள் முடிந்ததும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் சேகரிக்கப்பட்டு, அங்கே வைத்திருந்த ஒரு பெரிய கொப்பரையில் வீசினார்கள். கொப்பரைக்குள் இருந்த நெருப்பில் சான்றிதழ்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. லண்டன் ‘டெய்லி மெய்ல்’ என்ற பத்திரிகையின் செய்தியாளர் இந்த நிகழ்வை 1773-ல் அமெரிக்காவில் நிகழ்ந்த ‘பாஸ்டன் தேநீர் விருந்து’ என்ற சம்பவத்துடன் ஒப்பிட்டார். அமெரிக்காவில் ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த ‘தேநீர் சட்ட’த்துக்கு எதிராக நடந்த ‘பாஸ்டன் தேநீர் விருந்து’ அமெரிக்கப் புரட்சிக்கு வித்திட்ட பெருநிகழ்வுகளுள் ஒன்று. அதனுடன் இந்த தென்னாப்பிரிக்கச் சம்பவத்தை அந்தச் செய்தியாளர் ஒப்பிட்டது இந்திய வரலாற்றைப் பொறுத்தவரை ஒரு தீர்க்கதரிசனம் போலவே தோன்றுகிறது.

அதன் பிறகு போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் நோக்கத்தில் காந்தி ஒரு காரியத்தைச் செய்தார். நேட்டால் மாகாணத்தில் வசிக்கும் பார்ஸி இனத்தைச் சேர்ந்த இந்தியரான சொரப்ஜி ஷபுர்ஜி என்பவரைப் போய் காந்தி சந்தித்தார். திட்டம் என்னவென்றால், ட்ரான்ஸ்வால் பிரதேசத்தில் சொரப்ஜி நுழைய வேண்டும். ட்ரான்ஸ்வாலைச் சாராத இந்தியர்கள், அதுவும் படித்த இந்தியர்கள் யாரும் உள்ளே நுழைவதற்குத் தடை இருப்பதால், சொரப்ஜி தான் நுழைந்ததையும் அதன் பின்னுள்ள நோக்கத்தையும் அரசுக்குத் தெரியப்படுத்திவிட்டுத் தானே முன்வந்து கைதாக வேண்டும்.

திட்டத்தின்படி சொரப்ஜி ட்ரான்ஸ்வாலுக்குச் சென்றார். யாரும் அவரைக் கைதுசெய்யவில்லை. அரசு தங்களுடன் போராடுவதற்குத் தயாராக இல்லை என்பது இதன்மூலம் காந்தி தரப்பினருக்குப் புலனானது. அரசின் உறுதிப்பாடு பலவீனமடைந்துவருவதன் அடையாளமாக காந்தி இதை எடுத்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து, ட்ரான்ஸ்வாலை விட்டு வெளியேறாததால் சொரப்ஜி கைதுசெய்யப்பட்டு, அவருக்கு ஒரு மாதச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இந்தியாவிலிருந்து அப்போதுதான் வந்திருந்த காந்தியின் மூத்த மகன் ஹரிலாலும் திட்டப்படி ட்ரான்ஸ்வாலுக்குள் நுழைய முயன்று கைதுசெய்யப்பட்டு, அவருக்கு மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பின், கைதாவதற்கு நீ, நான் என்று பலரும் போட்டி போட்டனர். காந்தி உட்பட பலரும் தாமாக முன்வந்து கைதானார்கள்.

தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. காந்தி 1908 டிசம்பர் 13 அன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் எனினும், 1909 பிப்ரவரி 25 அன்று போராட்டங்களுக்காக மூன்றாவது முறை கைதுசெய்யப்பட்டார். இந்த முறை கஸ்தூர்பா காந்தியின் உடல் நிலை மிகவும் மோசமாகவே இருந்தது. தன் கணவர் தன்னை விட்டுப் பிரிந்தாலே இறந்துபோய்விடுவார் என்ற நிலையில்தான் கஸ்தூர்பா இருந்தார். எப்போதும் போராட்டம், பொதுவாழ்க்கை போன்றவற்றின் காரணமாகத் தன்னுடன் அதிக நேரம் செலவிடாமல் இருக்கும் கணவர் மீது அவருக்கு ஏக்கம் கலந்த கோபம் இருந்தது.

ஆனால், கணவர் காந்தியோ தன் மனைவி, பிள்ளைகளைவிட தனது லட்சியத்தையே மேலானதாகக் கருதுபவராக இருந்தார். சிறைக்குச் செல்வதற்கு முன் தன் நண்பர் காலன்பாக்குக்கு எழுதிய கடிதத்தில் கஸ்தூர்பாவின் உடல் நிலையைப் பற்றியும் தனது இக்கட்டான நிலையைப் பற்றியும் காந்தி இப்படி எழுதுகிறார்: ‘… அவளுக்கு மன உறுதி போய்விட்டது. ஒரு நிமிடம்கூட நான் அவளது படுக்கைக்கு அருகில் இல்லாமல் இருப்பதை அவளால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. ஒரு குழந்தையைப் போல என்னிடம் ஒட்டிக்கொண்டும் தொற்றிக்கொண்டும் இருக்கிறாள். அடுத்த வாரம் நான் கிளம்பிவிட்டால் அதனால் அவள் உயிர் போய்விடுமோ என்றுகூட அஞ்சுகிறேன். ஒரே நேரத்தில் இரு திசைகளில் இழுபடுகிறேன். ஆனாலும் அடுத்த வாரம் அவளை விட்டுவிட்டு ‘மாமன்னரின் விருந்தோம்பலை’ (சிறைவாசத்தை) ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.’ (‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’). இப்படிப்பட்ட சூழலில்தான் காந்தி சிறைக்குச் செல்கிறார்.

காந்திக்கு முதலில் அளிக்கப்பட்ட தண்டனை என்பது அபராதம் மட்டுமே, அதைக் கட்டத் தவறினால் சிறைத் தண்டனை என்றுதான் தீர்ப்பளிக்கப்பட்டது. கஸ்தூர்பாவின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்த சூழலில் அபராதத்தைக் கட்டிவிட்டு காந்தி வீடு திரும்பியிருக்கலாம். ஆனால், அவரோ எப்போதும்போல சிறைத் தண்டனையையே தேர்ந்தெடுத்தார். தான் சிறைத் தண்டனையைத் தேர்ந்தெடுத்தது மட்டுமல்லாமல், தன் மூத்த மகன் ஹரிலால் தனது இளம் மனைவியையும் பிஞ்சுக் குழந்தையையும் பிரிந்திருக்கும்படி அவரையும் சிறைக்குச் செல்லச் செய்தார் காந்தி.

(காந்தியைப் பேசலாம்)

- ஆசை,

தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x