Published : 27 Dec 2018 11:09 AM
Last Updated : 27 Dec 2018 11:09 AM

360: பசுமை நடையில் காதல் திருமணம்!

காலியாகிவரும் பிடிபி கூடாரம்: அதிர்ச்சியில் மெஹ்பூபா!

காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) முக்கியத் தலைகள் தேசிய மாநாட்டுக் கட்சியிலும் மக்கள் மாநாட்டுக் கட்சியிலும் சேர்ந்துவருவதால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார் மெஹ்பூபா முஃப்தி. முன்னாள் நிதியமைச்சர் ஹஸீப் த்ரபு கட்சியிலிருந்து விலகியதுதான் மெஹ்பூபாவைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. முன்னாள் அமைச்சர் இம்ரான் ரெஸா அன்சாரி, சமீபத்தில் மக்கள் மாநாட்டுக் கட்சியில் இணைந்திருக்கும் நிலையில், அவரது மாமாவும் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான அபித் அன்சாரியும் மக்கள் மாநாட்டுக் கட்சியில் சேர்ந்திருக்கிறார். இன்னும் பலர் வெளியேறத் தருணம் பார்த்துக் காத்திருக்கிறார்கள். பிடிபி - பாஜக கூட்டணி அரசு முறிந்த பின்னர், ஆறு மாத ஆளுநர் ஆட்சி முடிந்து குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் வந்திருக்கிறது காஷ்மீர். பிடிபியிலிருந்து தலைவர்கள் வெளியேற, தனிப்பட்ட விருப்பங்கள், அரசியல் கணக்குகள் ஆகியவை காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. அடுத்த தேர்தலில் பிடிபிக்கு வெற்றிவாய்ப்பு குறைவு என்பதும் ஒரு காரணம். எல்லாவற்றுக்கும் மேல், 2016-ல் காஷ்மீரில் நிலவிய பதற்ற நிலைக்குப் பின்னர், தெற்கு காஷ்மீர் பகுதியில் பிடிபி கட்சிக்கான செல்வாக்குக் கடுமையாகச் சரிந்திருக்கிறது. கட்சித் தலைவர் முஃப்தி முகமது சயீத் மறைவுக்குப் பின்னர் கட்சி பலமிழந்துவந்த நிலையில், இந்தச் சூழல் அக்கட்சிக்கு மேலும் பின்னடைவைத் தந்திருக்கிறது.

ஜெர்மனி விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்புகள்… டெல்லி பின்பற்றுமா?

ஜெர்மனிக்குச் சமீபத்தில் சென்றிருந்த எழுத்தாளர் பெருமாள் முருகன், பிராங்பர்ட் நகர விமான நிலையத்தில், ஜெர்மனி, ஆங்கிலத்துக்குப் பிறகு தமிழில் விமான நிலைய அறிவிப்பு வந்ததைக் கேட்டபோது பயணக் களைப்பு அகன்று உற்சாகம் வந்ததாகத் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் எல்லா விமான நிலையங்களிலும் தேசிய மொழிகள் அனைத்திலும் அறிவிப்புகள் வெளியிடுவது சாத்தியமாகும் வரை குறைந்தது ஒரு மாற்று ஏற்பாட்டை இந்திய அரசு யோசிக்கலாம் என்று தோன்றுகிறது. விமானம் எந்த வழித்தடத்தில் செல்கிறதோ அந்த மொழிகளில் அறிவிப்பை வெளியிடுவது. உதாரணமாக, ஒரு விமானம் டெல்லியிலிருந்து சென்னை வழியே திருவனந்தபுரம் செல்வதாக இருந்தால், ஆங்கிலத்துடன், இந்தி, தமிழ், மலையாளம் மூன்று மொழிகளிலும் அறிவிப்பை வெளியிடுவது என்ற ஏற்பாட்டை உண்டாக்கலாம்.

பசுமை நடையில் காதல் திருமணம்!

காடு, மேடு, கிராமங்கள், குகைகள், படுகைகள், ஆறுகள் என்று மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகளில் மாதம் ஒரு நாளில் குழுவாக நடப்பதும் உரையாடுவதுமாக வளர்ந்தது ‘பசுமை நடை’ இயக்கம். தொல்லியல், கல்வெட்டியல், வரலாறு, சூழலியல் எனப் பல தளங்களில் அதுகுறித்த கலந்துரையாடல்களைத் துறைசார் வல்லுநர்கள் இந்த நடையில் பங்கேற்போருடன் பேசுவார்கள். நூறாவது பயணத்தை இந்த அமைப்பு எட்டியிருக்கும் நிலையில், இந்தப் பயணத்தினூடாக நடந்த ஒரு கல்யாணம் எல்லோர் கவனத்தையும் ஈர்த்தது. மதுரையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் அருண் - மருத்துவர் ராஜலட்சுமி இருவர் இடையேயான காதல் திருமணம்தான் இது. இரு தரப்பிலும் பெற்றோர்கள் சம்மதம் இல்லாத நிலையில், பசுமை நடை இயக்கத்தவர்களே முன்னின்று இந்தத் திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள். பெற்றோர்களுடன் சமரசமும் செய்துவைத்திருக்கிறார்கள். “கடந்த ஏழாண்டுகளாகப் பசுமை நடையோடு தன்னைப் பிணைத்துக்கொண்டு அற்புதமாக ஒளிப்படங்களை எடுத்துவரும் அருணுக்கு இதைக்கூடச் செய்ய மாட்டோமா?” என்று கேட்கிறார் பசுமை நடை ஒருங்கிணைப்பாளரும் எழுத்தாளருமான முத்துகிருஷ்ணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x