Published : 30 Dec 2018 09:53 AM
Last Updated : 30 Dec 2018 09:53 AM

தருணங்கள் 2018

கடந்துசெல்லும் 2018-ன் முக்கியத் தருணங்கள் இவை. உலக நாடுகளின் அரசியல் மாற்றங்கள், புதிய நட்புகள், பாலியல் அத்துமீறல் தொடர்பான சர்ச்சைகள் தொடங்கி உலகம் எதிர்கொண்ட பல்வேறு விஷயங்களை உங்கள் பார்வைக்குத் தந்திருக்கிறோம். கடும் பகையாளிகளாக இருந்த டிரம்பும் கிம்மும் நண்பர்களானது, கூட்டணியிலிருந்த சிறிசேனாவும் ரணிலும் பகைவர்களானது, ஒற்றை அதிகாரத் தலைமைகள் உறுதிபடுவது என்று கடந்துசென்ற ஆண்டு இது. கடோவிஸ் பருவநிலை மாநாடு போன்ற நம்பிக்கை தரும் விஷயங்களும் நடந்தன. 2019-ல்

இன்னும் சவால்கள் காத்திருக்கலாம். நன்மைகளும் விளையலாம். காத்திருப்போம்!

டைம்ஸ்: மீண்டுவருமா அந்தக் காலம்?

 உலகப் புகழ்பெற்ற அமெரிக்க வார இதழான ‘டைம்’ இதழ், செப்டம்பரில், 190 மில்லியன் டாலருக்கு அமெரிக்கத் தொழிலதிபர் மார்க் ரஸ்ஸல் பெனியாஃப் – லைன் பெனியாஃப் தம்பதி வாங்கியது ஊடக உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டது. வியாபாரம் நல்ல அறிகுறியாக இருந்தால் எல்லோருக்கும் சந்தோஷம்தான். அப்படியாக இல்லாமல்போனதுதான் துயரம். பொருளாதாரச் சிக்கல்களின் விளைவாகவே, ‘சேல்ஸ்ஃபோர்ஸ்’ நிறுவனத்தின் தலைவரான மார்க்கிடம் பத்திரிகை செல்கிறது.

இம்ரான் கான்: பாகிஸ்தானின் புதிய முகம்

 பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் வென்று பிரதமரானார் தேரிக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கான், பாகிஸ்தான் ராணுவத்தின் பரிபூரண ஆசியுடன்!  பதவியேற்ற சூட்டோடு ஆடம்பரத்தைத் தவிர்க்கும் நடவடிக்கைகளைப் பிரதமர்  அலுவலகத்திலிருந்து தொடங்கியவர்  பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த சீர்திருத்த நடவடிக்கைகளை யோசிக்கிறார். மதவாதிகளின் பழமைவாதம் குறுக்கே நிற்கிறது.

டிரம்ப் – கிம்: திடீர் நண்பர்களின் கதை

 இன்னொரு உலகப் போருக்கு வித்திட்டு விடுவார்களோ என்று அச்சமூட்டிய இருவர் கை குலுக்கி உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். எதிரும் புதிருமாக இருந்த தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரிய அதிபர்  கிம் ஜாங் உன் இருவரும் ஏப்ரலில் பியாங் சியாங் உச்சிமாநாட்டில் பங்கேற்றபோதே உலகம் விக்கித்துப்போனது. ஜூனில் சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டிரம்பும் வடகொரிய அதிபர் கிம்மும் சந்தித்தபோது பலருக்கு மயக்கம் வராத குறைதான். கொரிய தீபகற்பத்தில் எத்தகைய மாற்றங்கள் உண்டாகும் என்பது முழுத் தெளிவை அடையவில்லை என்றாலும், தெற்காசியப் பிராந்தியத்தில் பதற்றம் ஓரளவு தணிந்திருக்கிறது!

விளாடிமிர் புதின்: ரவுசு கட்டும் ரஷ்ய அதிபர்

நான்காவது முறையாக ரஷ்ய அதிபராகி, உள்நாட்டிலும் உலக அரங்கிலும் உறுதியான தலைவராகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டார் விளாடிமிர் புதின். ரஷ்யாவின் பழைய செல்வாக்கை மீட்டெடுக்க விரும்புகிறார். ஜனநாயகமோ குப்பையில் கிடக்கிறது என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

தாய்லாந்து: குகையில் சிக்கி மீண்ட சிறுவர்கள்

தாய்லாந்தின் தாம் லுவாங் நாங் நோன் குகையில், 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும் பயிற்சியாளரும் சிக்கிக்கொண்ட சம்பவம் உலகையே பதற்றத்துக்குள்ளாக்கியது. 10 கி.மீ. நீளமுள்ள, சிக்கலான குகை அது. மழை காரணமாகக் குகையில் வெள்ளம் புகுந்தது. உலகமே கண்ணீருடன் பிரார்த்தித்தது. 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விரைவிலேயே அனைவரும் மீட்கப்பட்டனர். சிறுவர்களை மீட்கச் சென்ற நீச்சல் வீரர் பலியானதுதான் சோகம்!

இலங்கை: சுழற்றியடித்த குழப்பப் புயல்

இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட விரிசல், இலங்கை அரசியல் களத்தில்  பூகம்பமாக வெடித்தது. ரணிலைப் பிரதமர் பதவியிலிருந்து சாய்த்துவிட்டு, அக்டோபரில் ராஜபக்‌ஷவைப் பிரதமராக்கினார் சிறிசேனா. பெரும்பான்மை ராஜபக்‌ஷவுக்குச் சாதகமாக இல்லாத சூழலில் நாடாளுமன்றத்தையே இரு வாரங்களுக்கு முடக்கினார். பெரும் அரசியல் குழப்பம் உண்டான நிலையில், உச்ச நீதிமன்றமும் சபாநாயகர் ஜெயசூர்யாவும் மேற்கொண்ட நடவடிக்கைகள் ரணிலை மீண்டும் பதவிக்குக் கொண்டுவந்து, ஜனநாயகத்துக்கு உயிர் கொடுத்தன.

மஞ்சள் கிளர்ச்சி: பிரான்ஸை உலுக்கிய போராட்டம்

எரிபொருள் விலை அதிகரிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம்,  விலைவாசி உயர்வு என்று பல்வேறு காரணங்களை முன்வைத்து  நவம்பர் 17-ல் வெடித்த மக்கள் போராட்டம், இம்மானுவேல் மெக்ரான் அரசுக்குப் பெரும் நெருக்கடி தந்தது. ஒவ்வொரு சனிக்கிழமையும் கூடி போக்குவரத்தைத் தடுத்துவருகிறார்கள் பிரெஞ்சு மக்கள். ஓய்வூதியர்களுக்கும் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கும் பலன் அளிக்க 1,000 கோடி யூரோ மானியத்தை மெக்ரான் அறிவித்தார். அதுவும் முழுச் சமாதானத்தைக் கொண்டுவரவில்லை. மஞ்சள் நெருப்பாகியிருக்கிறது!

அனலிட்டிகா: பாதுகாப்பற்ற இணையம்

பிரிட்டனைச் சேர்ந்த அரசியல் ஆலோசனை நிறுவனமான ‘கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா’  ஐந்து கோடி ஃபேஸ்புக் கணக்குகளில் உள்ள தரவுகளைப் பெற்று, தவறாகப் பயன்படுத்தியிருக்கிறது என்று வெளியான செய்திகள் அதிரவைத்தன. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் வருத்தம் தெரிவித்தபோதும் அதன் மீதிருந்த நம்பிக்கை தகர்ந்தது. தொடர்ந்து இந்த ஆண்டு நெடுகிலும் இணையம் எப்படி அந்தரங்கத் தகவல்களைத் திருடும் களமாக இருக்கிறது என்பதற்கான பல்வேறு நிரூபணங்கள் வெளியான வண்ணம் இருந்தன.

நோபல்: யூடூ?

பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக வெடித்த ‘நானும்- மீடூ’ இயக்கத்தின் அலைவீச்சு நோபல் பரிசையும் விட்டுவைக்கவில்லை. நோபல் கமிட்டி உறுப்பினரும் எழுத்தாளருமான காத்தரீனா ப்ரோஸ்டென்சனின் கணவர் ழின் - கிளாட் அர்னால்ட் மீதான பாலியல் புகார்கள் காரணமாக, இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. புகைப்படக் கலைஞரான அர்னால்டு மீது 18 பெண்கள், பாலியல் புகார்கள் தெரிவித்தனர்.

ஹைட்ரஜன் ரயில்: கரியமில வாயுவே போ!

உலகின் முதல் ஹைட்ரஜன் ரயிலை  அறிமுகப்படுத்தியது ஜெர்மனி. சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த ரயிலை பிரான்ஸின் ‘ஆல்ஸ்டாம்’ நிறுவனம் தயாரித்துள்ளது. ஹைட்ரஜன் ரயிலின் தயாரிப்புச் செலவு, டீசல் ரயிலைவிட அதிகம் என்றாலும், அன்றாட எரிபொருள் செலவும் மாசும்  குறைவு. பிரிட்டன், நெதர்லாந்து, டென்மார்க், நார்வே, இத்தாலி, கனடா என்று பல நாடுகளும் ஹைட்ரஜன் ரயிலை வாங்குவதில் ஆர்வம் காட்டிவருகின்றன. 2022 முதல் இவை பயன்பாட்டுக்கு வரும்.

சுனாமி: கொலைப் பேரலை

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள அனாக் கிரகடாவ் எரிமலை வெடித்துச் சிதறியது. அதைத் தொடர்ந்து சுந்தா ஜலசந்தி பகுதியில் உண்டான சுனாமியால் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. நானூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.  வெள்ளம், நிலநடுக்கம், எரிமலை, சுனாமி என்று இந்த ஆண்டு முழுவதும் சிறிதும், பெரிதுமான 2,000 இயற்கை இடர்களைச் சந்தித்திருக்கிறது இந்தோனேசிய தீவுக்கூட்டம். 4,000 பேர் பலியாகினர்; 30 லட்சம் பேர் இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.

ஜாக் மா: கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு ராஜா

 உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரும், ‘அலிபாபா’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான ஜாக் மா,  நிறுவனப் பதவியிலிருந்து விலகி, நவம்பரில் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்; அறப் பணிகளைச் செய்யப்போவதாகவும் அறிவித்தார். ஒருகாலத்தில் 30 வேலைகளுக்கு விண்ணப்பித்து எல்லாவற்றிலும் நிராகரிக்கப்பட்டவர், பிற்காலத்தில் தொழிலதிபராகி 400 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனத்தின் தலைவராக  அடைந்த விஸ்வரூப வளர்ச்சி பிரம்மிக்கத்தக்கது. ஒரு பெருமுதலாளியும் கம்யூனிஸ்ட் கட்சியையும் இணைத்த புள்ளி எது? சீன விழுமியங்களுடன் சோஷலிஸத்தைக் கட்டமைக்கும் தொழிலதிபர் என்று பதில் அளித்தது சீன அரசு!

கடோவிஸ்: பருவநிலை மாற்றமும் சிறு நம்பிக்கையும்

 பருவநிலை மாறுதலின் விளைவுகளைக் குறைக்க போலந்து நாட்டின் கடோவிஸ் நகரில்  நடந்த உச்சி மாநாட்டில் கருத்தொற்றுமை ஏற்பட்டது, இந்த ஆண்டின் நம்பிக்கைத் துளிர்களில் ஒன்று. எனினும், மாநாட்டை அமெரிக்கா புறக்கணித்ததும்,  இந்தியா எதைப் பற்றியும் கவலைப்படாமல் மின்உற்பத்தியை அதிகரிக்க மேலும் 600 அனல் மின்நிலையங்களைத் திறப்பது என்ற முடிவை எடுத்ததும் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்பதை உணர்த்தும் புள்ளிகள்!

தொகுப்பு: சாரி, சிவசு, வெ.சந்திரமோகன், புவியரசன், த.ராஜன்

வடிவமைப்பு: சோ.சண்முகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x