Last Updated : 25 Dec, 2018 11:11 AM

 

Published : 25 Dec 2018 11:11 AM
Last Updated : 25 Dec 2018 11:11 AM

பிரபஞ்சனுக்கு மரியாதை: புதுவையிலிருந்து பாடம் கற்குமா தமிழ்நாடு?

மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தியிருப்பதன் மூலம், எழுத்தாளர்களுக்கு உரிய மரியாதை செலுத்தப்படுவதில்லை எனும் பெரும் குறையைப் போக்கியிருக்கிறது புதுவை அரசு.

தமிழ் எழுத்தாளர் ஒருவரின் மறைவுக்கு ஒரு மாநில அரசு செலுத்தியிருக்கும் அதிகபட்ச மரியாதை இது. தமிழ் எழுத்தாளர்களின் மறைவுக்குச் சம்பிரதாயமாக இரங்கல் தெரிவித்து ஒதுங்கிக்கொள்ளும் அரசுகளுக்கு, இதன் மூலம் ஒரு அரிய பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறார் புதுவை முதல்வர் நாராயணசாமி!

படைப்பாளிகளின் இறுதி நிகழ்வில் அதிகமானோர் பங்கேற்பதில்லை என்ற இலக்கணத்தைத் தமிழ் வாசகர்களும் எழுத்தாளர்களும் பிரபஞ்சனின் இறுதி நிகழ்ச்சியின் மூலம் உடைத்தெறிந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். காலமெல்லாம் தமிழ்நாடு முழுக்கக் குழு, கட்சி, சித்தாந்தம் என எந்த வேறுபாடும் பார்க்காமல் வாசகர்களைத் தேடித் தேடிச் சென்று பேசி, கலந்துரையாடி இலக்கியம் வளர்த்த தங்கள் எழுத்தாளருக்கு இறுதி மரியாதை செலுத்த நூற்றுக்கணக்கில் புதுச்சேரி நோக்கி வந்துகொண்டே இருந்தார்கள் வாசகர்கள்.

மூத்த பத்திரிகையாளர்கள், மூத்த எழுத்தாளர்கள் தொடங்கி இளம் கவிஞர்கள், ஃபேஸ்புக் பதிவர்கள் வரை பல்வேறு ஊர்களிலிருந்து பலர் வந்திருந்தார்கள்.

புதுச்சேரி ரயில் நிலையம் அருகில் பாரதி வீதி – வஉசி வீதி சந்திப்பிலுள்ள பிரபஞ்சனின் பூர்வீக இல்லத்தில், ஞாயிறு அன்று அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்டிருந்த வாசகர்கள், படைப்பாளிகள், அரசியல் ஆளுமைகள் பிரபஞ்சன் குறித்த தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். ஒரு பதிப்பாளராக, பிரபஞ்சனின் பதிப்பாளர் மு.வேடியப்பன் முன்னுதாரணமாக நடந்துகொண்டார்.

பிரபஞ்சனின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பியவர்களை, பிரத்யேகமாகப் பேருந்து அமர்த்தி சென்னையிலிருந்து புதுவைக்கு அழைத்துச்சென்றார். சன்னியாசித்தோப்பு மயானத்தில் பிரபஞ்சனின் உடலுக்குத் தேசியக் கொடி போர்த்தப்பட்டதும், 21 குண்டுகள் முழங்க அவருக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டதும் பிரபஞ்சனின் இழப்பு தந்த சோகத்துக்கு நடுவே எழுத்தாள சமூகத்துக்குப் பெருமிதமான தருணமாக அமைந்தன.

பிரபஞ்சனின் மரணத்தில் மட்டுமல்ல, அவர் வாழ்ந்தபோதே பெரிய கவுரவம் வழங்கிச் சிறப்பித்திருக்கிறது புதுவை அரசு. சென்னையில் கடந்த ஆண்டு, ‘பிரபஞ்சனைக் கொண்டாடுவோம்’ என எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், பவா செல்லதுரை, பதிப்பாளர் மு.வேடியப்பன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் ஒரு விழா நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் ரூ.10 லட்சம் நிதி திரட்டி பிரபஞ்சனுக்கு வழங்கினார்கள். அந்த விழாவில் கலந்துகொண்ட புதுவை முதல்வர் நாராயணசாமி, “எங்கள் ஊர் எழுத்தாளரை நீங்கள் இப்படிக் கொண்டாடும்போது நாங்கள் அதைவிடச் சிறப்பாகக் கொண்டாடுவோம்” என உரிமையுடன் பேசினார். சொன்னபடி, கடந்த மே மாதம் புதுவை அரசு சார்பில் ஒரு விழா எடுத்து ரூ.10 லட்சம் நிதியும் வழங்கினார்.

அது மட்டுமல்ல, அந்த விழாவுக்கு அழைப்பிதழ் கொடுக்க பிரபஞ்சனின் வீட்டுக்கு நேரில் சென்றார். ஒரு படைப்பாளிக்கு உரிய மரியாதை தர வேண்டும் என்ற தார்மிக நெறியின் வெளிப்பாடு அது. பொதுவாகவே, தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநில ஆட்சியாளர்களிடம் காணக்கிடைக்காத பண்பும்கூட.

இதோ, தன் மறைவுக்குப் பின்னரும்கூட ஒட்டுமொத்த இலக்கிய உலகத்துக்கும் பெருமிதம் சேர்த்திருக்கிறார் பிரபஞ்சன். தனது அரிய செயலின் மூலம் அரசுகளுக்கு மரியாதை தேடித் தந்திருக்கிறது புதுவை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x