Last Updated : 28 Sep, 2014 12:38 PM

 

Published : 28 Sep 2014 12:38 PM
Last Updated : 28 Sep 2014 12:38 PM

சுற்றுச்சூழலைப் பலிகொடுக்கும் வளர்ச்சி

சுற்றுச்சூழலைப் பற்றிப் பேசினாலே தொழில் வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தடைகளை ஏற்படுத்தத்தான் இதைப் பேசுகிறோம் என்கிற எண்ணம் பலரிடமும் காணப்படுகிறது. இதைப் பற்றி பாஹர் தத் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலரான பத்திரிகையாளர் தன்னுடைய 'கிரீன் வார்ஸ்' என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்: 'பெரிய ஊடக நிறுவனத்தில் ஆசிரியராக இருக்கிறார் என் நண்பர். அவரிடம் சுற்றுச்சூழல் தொடர்பாக என்னிடம் ஒரு செய்தி இருக்கிறது என்று கூறுவேன்; “இந்த சுற்றுச்சூழல் சமாச்சாரமே வேண்டாம்; பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரிய முட்டுக்கட்டை” என்பார்' என்று கூறுகிறார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பும் பொருளாதார வளர்ச்சியும் எதிரெதிரான இரு துருவங்கள் என்ற எண்ணம் இந்தியாவின் படித்த வர்க்கத் தினரிடையே ஊறியிருக்கிறது; அதையே பத்திரிகை களின் ஆசிரியர்கள், பொருளாதார அறிஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என்று அனைவருமே கொண்டிருக்கின்றனர்.

“இந்தியா போன்ற வளரும் நாட்டுக்கு, வளர்ந்த நாடுகளில் கூறப்படும் சுற்றுச்சூழல் வரை முறைகளை ஆதாரமாகக் கொள்ள முடியாது” என்று கடந்த ஆட்சியில் சிவில் விமானப் போக்கு வரத்து அமைச்சராக இருந்த பிரஃபுல் படேல் கூறியிருக்கிறார். மும்பையில் அரசு கட்ட உத்தேசித் துள்ள புதிய விமான நிலையத்தால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகுறித்துக் கேட்டபோது, மேற்கூறிய கருத்தை அவர் தெரிவித்தார்.

ஆனால், இந்தக் கருத்துகள் சரியல்ல என்று சுற்றுச்சூழல் விவகாரங்களில் நேரடி அனுபவம் உள்ள அறிஞர்களும் தன்னார்வத் தொண்டர் களும் நிரூபிக்க விரும்புகின்றனர். அவர்களுடைய வாதங்களில் இரண்டு மையக் கருத்துகள் இழையோடுகின்றன. முதலாவது, ஐரோப்பிய நாடுகளிலும் வட அமெரிக்காவிலும் தொழில் மயமாதலும் பொருளாதார வளர்ச்சியும் பெருகக் காரணம், அவற்றுக்குக் காலனிகளாக இருந்த நாடுகளின் நிலங்கள், பொருளாதார வளங்கள் மீது அவற்றுக்கு இருந்த ஆதிபத்திய உரிமைகள்தான். இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அப்படி வளங்களைத் தர காலனிகள் ஏதும் கிடையாது. மாறாக, அவற்றிடம் மக்கள் நெருக்கம் மிகுந்த நிலப் பகுதிகள்தான் இருக்கின்றன.

அடுத்த வாதம், கட்டுப்பாடற்ற பொருளாதார வளர்ச்சியால் சமூகத்தில் ஏற்படும் விளைவுகள் குறித்தது. இந்தியா போன்ற நாடுகளில் சுற்றுச் சூழல் கெடும்போதெல்லாம் நேரடியாகப் பாதிக் கப்படுவது ஏழைகள்தான். இவ்விரு வாதங்களை 1970-களில் சிப்கோ அந்தோலன் போன்ற சுற்றுச்சூழல் இயக்கத்தவர்களும், மாதவ காட்கில் போன்ற அறிவியல் அறிஞர்களும், காலஞ்சென்ற அனில் அகர்வால் போன்ற பத்திரிகையாளர்களும் முன்வைத்தனர். இவர்கள் அமைத்த கூட்டமைப்பின் தொடர் வலியுறுத்தல் காரணமாக 1980-ல் மத்திய அரசில் சுற்றுச்சூழல், வனத்துறை என்ற புதிய இலாகா ஏற்படுத்தப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அது தனித் துறையாகவே மாறியது. சுற்றுச் சூழலுக்கு ஏற்படக்கூடிய சேதங்களைத் தடுக்கச் சட்டங்களை இயற்றுவது உள்ளிட்ட முக்கியப் பணிகளைச் செய்ய வேண்டிய அமைச்சகம் அது. ஆனால், தொடங்கிய நாளிலிருந்து இதுவரை இந்த லட்சியங்களை நிறைவேற்றவில்லை என்பதுதான் உண்மை.

ஏமாற்றம் தரும் அரசு

மோடி தலைமையிலான புதிய அரசு ஆட்சிக்கு வந்த முதல் சில வாரங்களில், சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காகச் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளைக் களைந்து மாற்றுவதிலேயேதான் அவசரம் காட்டியது. முதல் கட்டமாக, புதிய சுரங்கங்களுக்கு ஒப்புதல் பெறும் நடைமுறை மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுவிட்டது. சுரங்கத் தொழில், அதிலும் திறந்தவெளி சுரங்கங்கள் பெரும் தீமைகளையே சூழலுக்கு விளைவிப்பவை. திறந்தவெளிச் சுரங்கங்களால் வேலைவாய்ப்பு மிகச் சிலருக்கே கிட்டும். ஊழல் காரணமாகவும், உரிமைத் தொகை மிகவும் குறைவு என்பதாலும் அரசுக்கும் சொற்ப வருவாயே கிடைக்கும். ஆனால், சுரங்கத் தொழில் அதிபர்களுக்கு மட்டும் கோடிக் கணக்கில் லாபம் கிடைக்கும்.

ஆய்வுகள் கூறும் பாடம்

ஃபெலிக்ஸ் படேல், சித்ராங்கதா சவுத்ரி, பாஹர் தத் போன்றோர் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து தெரியவருவது என்னவென்றால், அரசின் கட்டுப்பாடற்ற சுரங்கத் தொழில் அனுமதிகளால்தான் சுற்றுச்சூழல் மோசமாகக் கெடத் தொடங்கியது. அத்துடன் கிராமப்புற மக்களிடமும் ஏழைகளிடமும் அரசு மீது வெறுப்பு வளரத் தொடங்கியது. இந்த நிலையில், புதிய திட்டங்களைத் தீவிரமாக ஆராய்ந்து அனுமதி தருவதற்குப் பதிலாக, மேலோட்டமாகப் பார்த்து விரைந்து ஒப்புதல் தரும் நடைமுறையைப் புகுத்திவிட்டது அரசு.

‘இந்தியாவின் தொடர் பொருளாதார வளர்ச்சிக்கு எண்ணெய் அல்ல; தண்ணீர்தான் முக்கியம்’ என்கிறார் சூழலியலாளர் ஜெயந்த பண்டோபாத்யாய. உலக மக்கள்தொகையில் 18% இந்தியாவில் இருக்கிறது. ஆனால், தண்ணீர் வளமோ 4%தான். விவசாயம், தொழிற்சாலை இரண்டுக்குமே தொடர்ந்து நல்ல நீரை வழங்கியாக வேண்டும். சில மாநிலங்களில் 70% நிலத்தடி நீர் வற்றிவிட்டது. இந்த நிலையிலும், சில சுரங்க நிறுவனங்களுக்காக, காடுகளை அழிக்கவும் அவை சேர்த்துவைக்கும் நிலத்தடி நீரை இழக்கவும் புதிய அரசு மகிழ்ச்சியுடன் அனுமதி அளிக்கிறது.

பொருளாதாரம் புறக்கணித்த சூழலியல்

நவபழமைவாதிகள், கீன்ஸ் ஆதரவாளர்கள், மார்க்சிஸ்ட்கள் என்று எல்லா பொருளாதார அறிஞர்களுமே பொருளாதார நடவடிக்கைகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடுகள் குறித்துச் சிந்திக்காமல் அலட்சியம் செய்துவிட்டனர். இப்போது சுற்றுச்சூழல் பொருளாதாரம் என்ற துறை வளர்ந்துவருகிறது. ‘கிரீனிங் இண்டியா’ஸ் குரோத்’என்ற புதிய புத்தகத்தில் முத்துக்குமார மணி இதற்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார். புதிய தொழில் திட்டங்களால் அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு ஏற்படும் உடல் நலக்குறைவு, வருவாய் இழப்பு என்று எல்லாவற்றையும் மதிப் பிட்டுப் புதிய திட்டங்களால் ஏற்படும் லாப, நஷ்டத்தைக் கணக்கிடுகிறது அந்தப் புத்தகம்.

இந்தப் புதிய ஆய்வு மூலம், 2009-ல் சுற்றுச் சூழல் சீர்கேட்டின் மதிப்பு ரூ.3.75 டிரில்லியன் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இது நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 5.7% ஆகும். இன்னொரு வகையில் கூறினால், சுற்றுச்சூழல் பாதிக்கப் படாமல் காப்பாற்றப்பட்டிருந்தால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதத்தில் மேலும் 5% கூடியிருக்கும்.

தொழில்திட்டங்கள் தொடர்பாக முடிவெடுக்கும் மேல்தட்டு மக்கள் அனைவரும் பெருநகரங்களில் வாழ்பவர்கள். சூழல் கேட்டால் பாதிக்கப்படும் ஏழைகளின் துயரங்கள் தங்களை அணுகாமல் பாதுகாப்பாக இருப்பவர்கள். அவர்களுடைய அறியாமை அல்லது அகந்தைதான் இந்தியாவின் நீண்ட கால வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது. நம் அரசியல் தலைமைக்கும் அறிவாளிகளுக்கும் உள்ள சுற்றுச்சூழல் கல்வியறிவின்மை காரணமாக, பெரும் விலைகொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள் நம் நாட்டின் ஏழை மக்கள்.

- ராமச்சந்திர குஹா, ‘இண்டியா ஆஃப்டர் காந்தி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x