Last Updated : 14 Dec, 2018 08:05 AM

 

Published : 14 Dec 2018 08:05 AM
Last Updated : 14 Dec 2018 08:05 AM

புதிய வெற்றிகளிலிருந்தேனும் பாடம் கற்குமா தமிழக காங்கிரஸ்?

தமிழக காங்கிரஸுக்குள் சில மாதங்களுக்கு முன் சின்ன புரட்சி ஒன்று நடந்தது. இளைஞர் காங்கிரஸ் பிரிவுக்கு நடத்தப்பட்ட உள்கட்சித் தேர்தலில், வரலாற்றிலேயே முதன்முறையாக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் ஹசன் மாநிலத் தலைவர் ஆனார். அது மட்டுமல்ல, மொத்தமுள்ள மூன்று மாநிலத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில், இரண்டை தலித்துகள் வென்றார்கள். அதேபோல, 10 பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டு வென்றவர்களில் 5 பேர் சிறுபான்மையினர், 4 பேர் தாழ்த்தப்பட்டோர்.

ஒதுக்கீடு என்று பார்த்தால், துணைத் தலைவர் பதவியில் ஓரிடம், பொதுச்செயலாளர் பதவியில் 5 இடம் மட்டுமே. ஆனால், 9 இடங்களில் அவர்கள் வென்றிருக்கிறார்கள். அதிலும் ஆச்சரியம், மாநிலப் பொதுச்செயலர் பதவிக்குப் போட்டியிட்டு வென்றவர்களில் ஒருவர் ஒடுக்கப்பட்டோரிலும் ஒடுக்கப்பட்டோராக இருக்கிற அருந்ததியர். இன்னொருவர், பொதுப்பிரிவில் வென்ற தாழ்த்தப்பட்ட பெண். இது அப்படியே மாவட்ட, வட்டார, சட்ட மன்றத் தொகுதி அளவிலான இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளிலும் அப்படியே எதிரொலித்தது.

என் ஆச்சரியத்துக்குக் காரணம் இருக்கிறது. 2016 ஏப்ரலில் ‘இந்து தமிழ்’ நாளிதழில் ‘யார் கையில் இருக்கிறது தமிழ்நாட்டு அரசியல்?’ என்ற தலைப்பில், சமஸ் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ஆளுங்கட்சியான அதிமுக, பிரதான எதிர்க்கட்சியான திமுக இரண்டிலும் மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி, வேட்பாளர்கள் வரையில் முக்குலத்தோர், வன்னியர், கவுண்டர், நாயுடு, நாடார் ஆகிய ஐந்து சாதியினரே ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பது அந்தக் கட்டுரையின் சாரம். தனித்தொகுதிகள் மட்டும் இல்லையென்றால், அங்கேயும் இடைநிலைச் சாதிகளே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருப்பார்கள் என்றது அந்தக் கட்டுரை.

ராகுல் வித்திட்ட மாற்றம்

தலித்துகள், சிறுபான்மையினர், பழங்குடியினருக்கான இடம் திராவிடக் கட்சிகள் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் எல்லாவற்றிலுமே சிக்கலில்தான் இருக்கிறது. நாடு முழுக்கவுமே இடைநிலைச் சாதிகளின் ஆதிக்கத்தின் கீழ் எல்லா கட்சிகளும் வந்துகொண்டிருக்கும் நிலையில்தான், ராகுல் காந்தி  கீழ்நிலைச் சமூகங்களை மேல்நோக்கிக் கொண்டுவருவதில் தொடர் அக்கறை செலுத்திவருகிறார்.

ஜனநாயகபூர்வமாகக் கட்சி நிர்வாகிகளைக் கீழிருந்து தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும் மேலிருந்து நியமிக்கும் ‘நியமன அரசிய’லுக்குப் பேர்போன நேரு குடும்பப் பாரம்பரியத்தை மாற்றுவதற்கான வேலையை இளைஞர் காங்கிரஸிலிருந்து அவர் தொடங்கினார். இதன்படி, இளைஞர் காங்கிரஸ் தேர்தல் கறாரானதாக மாற்றப்பட்டது. நிர்வாகிகளுக்கான பதவிகளில் இடஒதுக்கீடு முறையும் கறாராக அமல்படுத்தப்பட்டது. ராகுலின் இந்தச் செயல்பாடு நல்ல விளைவை ஏற்படுத்தியது. ஏனைய பிரதான கட்சிகளில் தங்களுக்கு இடம் இல்லாத சூழலில், இளைய தலைமுறை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள், பழங்குடிகள் காங்கிரஸை நோக்கி நகரத் தொடங்கினர்.

தேர்தல் நடைமுறைகள்

இளைஞர் காங்கிரஸ் தேர்தல் இணையதளம் வழியாக அறிவிக்கப்படுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே உறுப்பினர் சேர்க்கை தொடங்கிவிடும். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலைப் பொறுத்தவரையில் தீவிர உறுப்பினர்களுக்குத்தான் ஓட்டுரிமை. அதாவது, செல்போன் எண், வாக்காளர் அடையாள அட்டை விவரத்துடன் குறைந்தது 4 உறுப்பினர்களையேனும் சேர்த்தவர்கள்தான் தீவிர உறுப்பினர் ஆக முடியும். இப்படி தமிழகத்தில் 55 ஆயிரம் பேர் தீவிர உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர்.

மின்னணு முறையில் - ஐபேட் உதவியுடன் - தேர்தலை நடத்துகிறார்கள். ஒவ்வொரு தீவிர உறுப்பினரும் சட்ட மன்ற, மாவட்ட, மாநில அளவிலான நிர்வாகிகளைத் தேர்வுசெய்யும் வகையில் 5 ஓட்டு போட வேண்டும். வாக்குப்பதிவு நடைபெறும்போதே அந்தத் தகவல் இணையம் வாயிலாக டெல்லிக்குச் சென்றுவிடும் என்பதால், இதில் முறைகேட்டுக்கும் வழி கிடையாது.

மசால் வடைக்காரர்களிடமிருந்து விடுதலை

கட்சிக்குள்ளுமே புதியவர்கள் இதை நல்வரவாகப் பார்க்கிறார்கள். “பழைய பெருமையில் வெறுமனே கட்சி அலுவலகத்துக்கு வந்து, திண்ணைப் பேச்சு பேசி, மசால் வடை சாப்பிட்டுச்செல்லும் கலாச்சாரத்துக்கு ராகுல் முற்றுப்புள்ளி வைக்க முற்படுகிறார். யார் வேலை செய்கிறார்களோ அவர்கள் மேலே வர வேண்டும் என்று நினைக்கிறார். இந்தப் புதிய முறையில் உறுப்பினர் சேர்க்கை, தொடர்ந்து உறுப்பினர்களிடத்தில் பணியாற்றுவதில் யார் அக்கறையோடு இருக்கிறார்களோ அவர்களே வெற்றிபெறுகிறார்கள். ஆனால், இளைஞர் காங்கிரஸ் என்பது கட்சியின் இளைஞரணி. அவ்வளவுதான். கட்சியின் பிரதான அமைப்பிலும் இத்தகைய சூழல் மாற்றம் உருவாக வேண்டும்” என்கிறார்கள்.

பிரதான கட்சி என்னவோ மசால் வடைக்காரர்களிடம் சிக்கியிருக்கிறது. ஏனைய மாநிலங்களில் இந்தச் சூழலில் கொஞ்சம் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதையே காங்கிரஸின் சமீபத்திய வெற்றிகள் எதிரொலிக்கின்றன. இந்தி மாநிலங்களில் காங்கிரஸின் வெற்றிக்கான காரணங்களில் முக்கியமான ஒன்றாக எல்லோராலும் சுட்டிக்காட்டப்படுவது, கட்சி அமைப்புக்குள் அதன் தலைவர் ராகுல் கொண்டுவந்திருக்கும் மாற்றங்கள். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் அப்படியான மாற்றங்கள் ஏதும் தென்படவில்லை.

கடலூர் உதாரணம்

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், திராவிடக் கட்சிகள் எப்படி ஒவ்வொரு பிராந்தியங்களிலும் அந்தந்தப் பிராந்தியங்களில் செல்வாக்குள்ள சாதியினரின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்றனவோ அதுபோலவே காங்கிரஸும் இருக்கிறது.

முரண்பாடு என்னவென்றால், திராவிடக் கட்சிகளில் கீழே இருப்பவர்களில் பெரும்பான்மையினர் இந்தச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். அதனால், மாவட்ட நிர்வாகிகளாகவும் அவர்களே வருகின்றனர். ஆனால், காங்கிரஸில் கீழே இருப்பவர்களில் பெரும்பான்மையினர் விளிம்புநிலையினர். அங்கும் அவர்களுக்குப் பதவிகளில் முக்கியத்துவம் இல்லை என்றால், கட்சி எப்படி வளரும் என்று கேட்கின்றனர். நாட்டிலேயே முதன்முறையாக கடலூர் மாவட்ட காங்கிரஸ் அமைப்புக்கான நிர்வாகிகள் தேர்வு தேர்தல் வழியே நடத்தப்பட்டது. முன்னதாக, நியமனம் வழியே நிர்வாகிகள் நியமிக்கப்பட்டபோதெல்லாம் இங்கே மாவட்டத் தலைவராக அதிகம் இருந்தவர்கள் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், இம்முறை தேர்தல் வழியே நிர்வாகிகள் தேர்வு நடந்தபோது, தேர்தலில் வென்றவர் மணிரத்னம். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கட்சி கீழே எந்தச் சமூகங்களால் நிறைந்திருக்கிறது, ஆனால் மேலே யாருடைய ஆதிக்கத்தில் இருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்கிறார்கள்.

இதைக் காட்டிலும் மோசம், சில குடும்பங்களின் கட்சியாகவே தமிழகத்தில் காங்கிரஸ் நீடிப்பது. இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளியுங்கள் என்று ராகுல் சொன்னாலும்கூட, இங்கே இளைஞர்கள் என்ற பெயரில் அதிகாரத்துக்கு வருபவர்கள் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன், சுதர்சன நாச்சியப்பனின் மகன் ஜெயசிம்மன், அவரது அண்ணன் மகன் மாணிக்தாகூர், முன்னாள் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத், மோகன் குமாரமங்கலத்தின் பேரன் குமாரமங்கலம், முன்னாள் பொருளாளர் நா.செ.ராமச்சந்திரனின் மகன் நா.செ.ராஜேஷ், ஜே.எம்.ஆரூணின் மகன் ஹசன், ராஜாஜியின் கொள்ளுப்பேரன் கேசவன் என்று பழைய தலைவர்களின் வாரிசுகளே வருகிறார்கள். பெண்களை எடுத்துக்கொண்டாலும்கூட கக்கன் பேத்தி, பொன்னம்மாள் பேத்தி, மறைமலையடிகளார் பேத்தி, ரெட்டை மலை சீனிவாசன் பேத்தி என்று வாரிசுகளுக்கே பொறுப்புகள் கிடைக்கின்றன.

பாஜகவுக்கு மாற்று எப்படி?

உயர்சாதியினர், இடைநிலைச் சாதியினர் ஆதிக்கம் செய்யும் கட்சி என்ற பெயர் ஏற்கெனவே பாஜகவுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் அது வளராமல் இருப்பதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, இடைநிலைச் சாதியினருக்கு அது எவ்வளவு முக்கியத்துவம் அளிக்க முற்பட்டாலும், அதைக்காட்டிலும் பெரிய முக்கியத்துவத்தை ஏற்கெனவே திராவிடக் கட்சிகளில் அவர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதால்தான். காங்கிரஸும் இங்கே பாஜக வழியிலேயே சென்றால், அது எப்படி மாற்றாகச் செயல்பட முடியும்?

புதிதாக இளைஞர் காங்கிரஸிலிருந்து நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தவர்களுக்குக் கட்சியின் பிரதான அமைப்பில் எந்த முக்கியத்துவமும் தரப்படுவதில்லை என்கிறார்கள். கட்சி பழைய ஆட்களின் ‘பங்கு பரிவர்த்தனை’க்குள்ளேயே இருக்கிறது என்கிறார்கள். இப்படி இருந்தால் கட்சி எங்கிருந்து வளரும்? வெறுமனே டெல்லி செல்வாக்கை வைத்துக்கொண்டு, கூட்டணிக் கட்சியின் முதுகிலேயே சவாரி செய்துகொண்டு, தங்களுக்குள் கிடைக்கும் தொகுதிகளைப் பங்கிட்டுக்கொள்வதிலும் தங்கள் அணியின் செல்வாக்கை உயர்த்துவதிலுமே அக்கறையோடு இருந்தால், தேசிய அளவில் தமிழக காங்கிரஸ் எப்போது தலைப்புச் செய்தியாகும்?

- கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x