Published : 25 Dec 2018 10:38 AM
Last Updated : 25 Dec 2018 10:38 AM

வெண்மணியிலிருந்து என்ன கற்க வேண்டும்?

உழைப்புச் சுரண்டலுக்கும் சமூக ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக அணிதிரண்ட விவசாயத் தொழிலாளர்களின் எழுச்சிக் களம் கீழவெண்மணி. பண்ணையாளர்களுக்கு எதிராக வீறுகொண்டு எழுந்த விவசாயத் தொழிலாளர்களின் அந்தப் போராட்டம் 44 இன்னுயிர்களைப் பறிகொடுக்க நேர்ந்தது என்றாலும், இந்த ஐம்பதாண்டுகளில் அது உண்டாக்கியிருக்கும் மாற்றங்கள் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் செய்தியைச் சொல்கின்றன.

அன்று போராடிய விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தின் முழுமையான இலக்கை அடைய முடியாமல் போயிருக்கலாம். ஆனால், ஒப்பீட்டளவில் இன்று தமிழகத்தின் ஏனைய எந்தப் பகுதியைக் காட்டிலும் தஞ்சையின் விவசாயத் தொழிலாளர்கள் உழைப்புச் சுரண்டல்களிலிருந்தும் சமூக ஒடுக்குமுறைகளிலிருந்தும் நிறைய விடுபட்டிருக்கிறார்கள்.

எங்கே கீழவெண்மணி இருக்கிறதோ, அந்த நாகை மாவட்டத்தின் நிலவுடைமை அமைப்பையே மறைமுகமாக மாற்றியிருக்கிறார்கள். இன்றைய நாகை மாவட்டத்தில் ஏறக்குறைய 5 லட்சம் ஏக்கர் நிலங்கள் நிலமற்ற விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றன. 1.8 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவர்களில் பெரும்பான்மையினர் தலித்துகள். தமிழகத்தின் மற்ற மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க மாற்றம்.

பொதுவுடைமை இயக்கம், காந்திய இயக்கம், திராவிடக் கட்சிகளின் அரசுகள் மூன்றும் இந்த மாற்றங்களில் ஒன்றுக்கொன்று பங்களித் திருக்கின்றன. நிலமற்ற விவசாயத் தொழிலாளர் போராட்டங்களை முன் னெடுத்தது பொதுவுடைமை இயக்கம். தொழிலாளர்களின் குறைந்தபட்சக் கூலியைச் சட்டமாக்கி உத்தரவாதம் செய்தது ஆட்சியிலிருந்த திராவிட இயக்கம்.

காந்தியரான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலவுரிமை பெற்றுத்தருவதையும் அவர்களுக்குச் சிறிய அளவிலேனும் வீடு கிடைப்பதையும் ஒரு இயக்கமாகவே முன்னெடுத்தார். ஏனைய இடங்களுக்கு விதிவிலக்காக இரு சமூகங்களுக்கிடையில் இணக்கமான சூழல் வளர்ந்திருக்கிறது. செய்யப்பட வேண்டிய காரியங்கள் ஏராளம் என்றாலும், கடந்து வந்திருக்கும் காலத்தில் எதுவுமே நடக்கவில்லை என்ற நிலை இல்லை என்பதும் ஒரு முக்கியமான மாற்றம்.

மிக முக்கியமாகப் பொதுவுடைமை இயக்கத்தின் தொடர் செயல்பாட்டுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி இது. வெறும் கூலி உயர்வுப் போராட்டமல்ல, சமத்துவத்துக்கான போராட்டமாகவே அது நடந்து முடிந்திருக்கிறது.

வர்க்கப் பிரச்சினையா, சமூக ஏற்றத்தாழ்வுகளா எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்று நீண்ட காலமாகத் தொடர்ந்துவரும் அரசியல் விவாதங்களை ஒதுக்கித்தள்ளிவிட்டு, இரண்டுமே சம முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியது என்பதை உணர்த்தும் வரலாற்றுப் படிப்பினையைக் கீழவெண்மணி தருகிறது. கூடவே, கிராமங்களின் எதிர்காலம் எந்த அளவுக்குத் தலித் மக்களின் நிம்மதியான வாழ்க்கையோடு பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் உணர்த்துகிறது.

கிராமங்களும் விவசாயமும் தழைத்தோங்க வேண்டும் என்றால், பிற்படுத்தப்பட்டோர் – தாழ்த்தப்பட்டோர் இடையேயான இணக்கமான உறவு அவசியம். அதற்கு, இணையான அதிகாரமும் உரிமையையும் தாழ்த்தப்பட்ட மக்கள்  பெறுதல் அவசியம். நிலப்பகிர்வு, உத்தரவாதமான நல்ல கூலி இரண்டிலும் அரசுகள் தொடர்ந்து அக்கறை காட்டுவது அதற்கு முக்கியம். கீழேயுள்ள மக்கள் மேல் நோக்கிச் செல்ல இயக்கங்கள் இணைந்து செயலாற்றுவது அதற்கு முக்கியம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x