Published : 28 Nov 2018 10:43 AM
Last Updated : 28 Nov 2018 10:43 AM

தமிழின் தொன்மையை உலகுக்கு உணர்த்திய பேரறிஞர்

நேர்மையான அதிகாரி, இலக்கியத்துக்கும் அறிவியலுக்கும் மைய நீரோட்ட பத்திரிகைகளில் முக்கியத்துவம் கொடுத்த முன்னோடி இதழாளர், தமிழ் எழுத்து வடிவத்தின் வரலாற்றையும் சிந்துச் சமவெளி எழுத்துகளையும் பற்றிய ஆராய்ச்சிக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக்கொண்ட ஆய்வாளர் என்று பன்முக ஆளுமையாக விளங்கியவர் ஐராவதம் மகாதேவன்.

தான் பங்கெடுத்துக்கொண்ட ஒவ்வொரு துறையிலும் தனது முன்னோடித் தடங்களைப் பதித்த அவரின் மறைவு தமிழியலுக்கு மட்டுமல்ல, இந்தியவியலுக்கும் பேரிழப்பு!

27 ஆண்டு காலம் ஆட்சிப்பணித் துறையில் மத்திய - மாநில அரசுகளின் முக்கியப் பொறுப்புகளை வகித்த ஐராவதம் மகாதேவன் நேர்மைக்கும் கண்ணியத்துக்கும் முன்னுதாரணமாக விளங்கியவர். ஆட்சிப்பணித் துறையிலிருந்து விருப்ப ஓய்வுபெற்ற அவர், கல்வெட்டியல் ஆய்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். அவர் ‘தினமணி’ ஆசிரியர் பொறுப்பிலிருந்த நான்காண்டு காலம் தமிழ் இதழியலின் திருப்புமுனைக் காலகட்டம். பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியதோடு தமிழ்மணி, அறிவியல்மணி பகுதிகளைத் தொடங்கி, தமிழ் வாசகர்களுக்கு தமிழ் இலக்கியங்கள், அறிவியல் சார்ந்த கட்டுரைகளைக் கொண்டுசேர்த்தார். நாளிதழின் மொழிப் பயன்பாட்டைச் செழுமைப்படுத்தினார்.

பண்டைக் கால வரலாற்றுக்கான முதன்மையான வரலாற்றுச் சான்று கல்வெட்டுகள்தான். அசோகரின் கல்வெட்டுகளுக்கு ஜேம்ஸ் பிரின்செப் பொருள்விளக்கம் அளித்தபோதுதான் வட இந்தியாவின் பண்டைக் கால வரலாறு உலகறியும் வாய்ப்பு கிடைத்தது. தென்னகமோ, வரலாற்றுக்கும் முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த எழுத்து வடிவங்களைக் கொண்டிருந்தபோதும் அவை குகைகளிலும் மலைப்பாறைகளிலும் கண்டுகொள்ளப்படாமலேயே கிடந்தன. கல்வெட்டுகளின் துணைகொண்டு தமிழ் எழுத்து வடிவங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்த ஐராவதம் மகாதேவன், தமிழ் எழுத்து வடிவத்தின் வளர்ச்சியையும் சிந்துவெளி எழுத்துகளுக்கும் இடையிலான தொடர்பையும் விளக்கினார்.

சங்க கால மக்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்தார்கள் என்பதற்கு ஐராவதம் மகாதேவனின் ஆய்வுகளே அடிப்படையாக இருக்கின்றன. கல்வெட்டில் தொடங்கிய அவரது ஆய்வுப் பயணம் தொடர்ந்து நாணயங்கள், குகைகள், பாறைகள், பானை ஓடுகள், சொல் ஆராய்ச்சி என்று விரிந்து பரந்தது.

பழந்தமிழர் வரலாற்றைக் கவ்வியிருந்த புகைமூட்டங்கள் ஐராவதம் மகாதேவனின் ஆய்வு வெளிச்சத்தால் நீங்கின. தமிழியல் மற்றும் தொன்மை வரலாறு குறித்த ஆராய்ச்சியை அறிவியல்பூர்வமாக அணுகியவர் ஐராவதம் மகாதேவன். அதுவே அவரது ஆய்வு முடிவுகளின் அழுத்தமான அடிப்படை. கல்விப்புலத்தை நேரடியாகச் சாராமல் இதைச் செய்துமுடித்திருக்கிறார் என்பது இன்னொரு வியப்பு. சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம், பழந்தமிழ்க் கல்வெட்டுகள் குறித்த அவரது இரண்டு ஆய்வு நூல்களும் தமிழியல் மற்றும் தொன்மை வரலாற்றுத் துறைக்கு மிக முக்கியமான பங்களிப்பு. இனி அத்துறையில் அடியெடுத்துவைக்கும் ஒவ்வொரு ஆய்வாளருக்கும் அது வழிகாட்டியாக, கையேடாக, பாடநூலாகத் திகழும்.

ஏறக்குறைய நூறு ஆண்டுகளாக நடந்துவரும் சிந்துச் சமவெளி நாகரிக ஆய்வை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, அடுத்தகட்டத்துக்கு முன்னெடுத்துச் சென்றவர் ஐராவதம் மகாதேவன். இந்திய வரலாற்று ஆய்வை வழிநடத்திய அறிஞர்களின் பெயர்களில் தமிழாளுமை ஐராவதம் மகாதேவனின் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x