Published : 30 Nov 2018 10:06 AM
Last Updated : 30 Nov 2018 10:06 AM

சினிமாவுக்கு பெரிய அச்சுறுத்தல் தொலைக்காட்சி: சிவாஜி பேட்டி 

உலகத்தையே சந்தையாக வைத்திருக்கும் அமெரிக்கத் திரைப்படவுலகமான ஹாலிவுட், தொலைக்காட்சிகளின் வருகையால் திண்டாடுகிறது என்று தெரிவித்தார் சிவாஜி கணேசன். அமெரிக்காவில் மேற்கொண்ட இரண்டு மாத சுற்றுப் பயண அனுபவம் தொடர்பில் அவர் அளித்த பேட்டி.

ஹாலிவுட் மகிழ்ச்சியாக இல்லை

“ஹாலிவுட் திரைப்படத் துறை மகிழ்ச்சியாக இல்லை. தொலைக்காட்சியின் வரவு அவர்களை மிகவும் பாதித்துவருகிறது. இதுவரை கதைப் படங்களை எடுத்த பல தயாரிப்பாளர்கள் தொலைக்காட்சிக்காகப் படம் எடுக்கத் தொடங்கிவிட்டனர். ஒரு ஸ்டுடியோவில் 5 ஃபுளோர்கள் இருந்தால், அதில் 3 தொலைக்காட்சித் தொடர் படப்பிடிப்புக்காக ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சி இருப்பதால் திரைப்படம் என்பது வரவேற்பறைக்கே வந்துவிட்டது. எனவே, மக்கள் ஒரு மாறுதலுக்காகத் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

தொலைக்காட்சித் தொடராக எதை வேண்டுமானாலும் காட்டுவது என்று தயாரிப்பாளர்கள் முடிவுசெய்துவிட்டதால் ரசிகர்களே அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். தொலைக்காட்சி பார்த்துக் குழந்தைகள் கெட்டுப்போகிறார்கள் என்று கல்வியாளர்களும் பொறுப்புள்ள பெற்றோர்களும் கவலைப்பட ஆரம்பித்துள்ளனர். மாணவர்கள் படிப்புக்குக் குறைந்த நேரத்தை ஒதுக்கிவிட்டு, எப்போதும் தொலைக்காட்சி முன்னாலேயே உட்கார்ந்துவிடுகின்றனர்.”

தொலைக்காட்சியால் பாதிக்கப்படும் கலைஞர்கள்

“தொலைக்காட்சியில் காட்டும் படங்களுக்கு வரவேற்பு அதிகமாவதால், வழக்கமான திரைப்படங்களின் நீளத்தைத் தயாரிப்பாளர்கள் குறைத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால், திரைத் துறையில் ஏராளமான கலைஞர்களுக்கு, தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுவிட்டது. சம்பளத்துக்காக அவர்களில் பலர் இப்போது நாடகங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்களை நான் நேரிலேயே சந்தித்தேன்.”

ஹாலிவுட்டைப் பார்த்தேன்

“அமெரிக்காவின் பல நகரங்களையும் பார்க்க வேண்டிய இடங்களையும் பல்கலைக்கழகங்களையும் பார்த்துவிட்டு ஹாலிவுட்டுக்குச் சென்றேன். டுவென்டியத் செஞ்சுரி பாக்ஸ், வார்னர் பிரதர்ஸ், கொலம்பியா நிறுவனங்களின் ஸ்டுடியோக்களில் திரைப்படப் படப்பிடிப்பை நேரில் பார்த்தேன். ‘தி டயமண்ட் ஹெட்’, ‘தி அக்ளி அமெரிக்கன்’ என்ற இரு சிறப்பான திரைப்படங்கள் அப்போது படமாக்கப்பட்டன.

படம்பிடிக்கும் விதத்தில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள படப்பிடிப்பு உத்திகள்தான் நிறைய உள்ளன. ஒரு படத்தைத் தயாரிக்கத் தொடங்குவதற்கு முன்னால், அதன் அனைத்து அம்சங்கள் குறித்தும் விவாதித்துத் திட்டமிடுகிறார்கள். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் படப்பிடிப்பை முடித்துவிடுகிறார்கள்.’’

என்னவெல்லாம் தமிழர்கள் கற்றுக்கொள்ளலாம்?

“அமெரிக்கத் தயாரிப்பாளர்களை நாமும் பின்பற்றுவது நல்லது. அங்கே மிகவும் பிரமிப்பாக இருந்தது படப்பிடிப்பு தொடர்பான தொழில்நுட்பங்களின் வளர்ச்சி. படப்பிடிப்பின் ஒவ்வொரு அம்சத்துக்கும் அவர்கள் பல கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் கையாள்கிறார்கள். அதனால், அவர்களுடைய படங்கள் செய்நேர்த்தியுடன் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன.

திரைப்படத்தைத் தயாரிப்பதிலும் காட்சிப்படுத்து வதிலும் ஏதாவது புதுமை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து ஆராய்ச்சி செய்கின்றனர். கேமராக்களில் பயன்படுத்தும் லென்ஸ்களை வெவ்வேறு விதங்களில் தொடர்ந்து தயாரிக்கின்றனர். திறமைசாலியான கேமராமேனால் அவற்றைக் கொண்டு சிறப்பான படங்களை எடுத்துவிட முடியும். அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் அம்மாதிரியான தொழில்நுட்ப வசதிக்கெல்லாம் நம்மால் ஆசைப்பட முடியாது. திரைப்படத்தை அவர்கள் எப்படி ஊக்குவிக்கிறார்கள், விநியோகிக்கிறார்கள் என்பதிலிருந்து நாம் சில பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். உலகம் முழுக்க அவர்கள் விநியோக அலுவலகம் திறந்திருக்கிறார்கள். குறைந்தபட்சம் அமெரிக்கச் சந்தையில் நம்முடைய படங்கள் திரையிடப்பட நாமும் அங்கு அலுவலகங்களைத் திறக்க வேண்டும். மிகத் திறமைசாலிகளை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும்.’’

நடிகர் சங்கத்தை மேம்படுத்துங்கள்

“அங்குள்ள நடிகர் சங்க விதிகளின்படி எந்த நடிகரும் தொடர்ச்சியாகப் பல மணி நேரம் நடிப்பது கிடையாது. இந்திய நடிகர்களுடன் ஒப்பிடுகையில் ஹாலிவுட் நடிகர்கள் ஒரு திரைப்படத்துக்குக் குறைவான நேரமே நடிக்கிறார்கள். கேமரா முன்னால் சிறப்பாக நடிக்க உடல்நிலை நன்றாக இருக்க வேண்டும் என்பதால், நடிகர்களைக் களைப்படைய விடுவதில்லை.அப்போதுதான் நடிப்பும் தரமாக இருக்கும் என்பதால் இதில் கவனம் செலுத்துகிறார்கள்.

ஒரு சமயத்தில் ஒரேயொரு திரைப்படத்தில் மட்டுமே நடிக்கிறார்கள். இந்தியாவில் ஒரு நடிகர், ஒரே சமயத்தில் முப்பது படங்களில் நடிப்பார் என்று சொன்னபோது நம்ப மறுத்துச் சிரித்தார்கள். மார்லன் பிராண்டோவைச் சந்தித்தேன். என்னை எல்லோரும் முரடன் என்கிறார்கள், நான் அப்படியில்லை என்றார்.குழந்தையைப் போலவே என்னிடம் உற்சாகமாகப் பேசினார். வெகு விரைவிலேயே இந்தியா வர விருப்பம் என்றார்.

திரைப்பட நடிகர்களின் சங்கம் (கில்டு) மிக சக்திவாய்ந்த தொழிற்சங்கம். அதன் விதிகளை மீற யாருக்கும் துணிச்சல் கிடையாது. திரைப்பட வாய்ப்புகள் இல்லாத போதும் நடிகர்கள் உடல் ஊனமுற்று வாழ்வாதாரத்தை இழந்தாலும் அவர்களுடைய பொருளாதாரத் தேவைகளை கில்டு கவனித்துக்கொள்கிறது. நடிகர்கள் தங்களுடைய ஊதியத்தில் 5% தொகையை கில்டுக்கு சந்தாவாகச் செலுத்துகிறார்கள். கில்டு திறமையாக நிர்வகிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள தென்னிந்தியத் திரைப்பட நடிகர்கள் சங்கமும் அதைப் போலவே செயல்பட வேண்டும். அதற்கான உதவிகளையும் ஒத்துழைப்பையும் அளிக்கத் தயாராக இருக்கிறேன்.”

இவ்வாறு தன் பேட்டியில் குறிப்பிட்டார் சிவாஜி.

மொழிபெயர்த்துத் தொகுத்தவர்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x