Last Updated : 28 Nov, 2018 09:53 AM

 

Published : 28 Nov 2018 09:53 AM
Last Updated : 28 Nov 2018 09:53 AM

2 மினிட்ஸ் ஒன்லி 19: இரு காதுகள்

கஜா புயல் தாக்கி இரண்டு வாரங்களுக்குப் பிறகு எழுதும் அத்தியாயம் இது. கடந்த வாரமும் உரையாடினோம். இன்னமும் பாதிப்பு நடந்த பல இடங்கள் முழுமையாக, பழைய சூழலுக்கு வரவில்லை. 2-வது வாரத்தில் தேவை ஒரு மாதிரி இருக்கும். அதுவே இரண்டு மாதங்களில் வேறொரு தேவை ஏற்படலாம். இரண்டு வருஷங்களுக்குப் பிறகும் இயல்புநிலை திரும்புமா என்பது யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால், அந்த அளவுக்கு பாதிப்புகள் என்று போன வாரத்திலேயே மனம் கசிந்தோம்.

இடது கைக்கு தெரிய வேண்டும்

இந்த மாதிரி இயற்கை பேரழிவு நடக்கும்போது முதலமைச்சர், பிரதமர் நிவாரணத் திட்டத்தில் இருந்து நிதி ஒதுக்கப்படும். அந்த மாதிரி நிதி உதவி களைக் கொண்டு அந்தந்தப் பகுதி நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள், சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இறங்கி சீரமைப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். அதோடு வேலை முடிந்துவிடும். ஆனால், கடந்த சில வருஷங்களாக… குறிப்பாக, சென்னை புயல் வந்த பிறகு திரைத் துறையைச் சேர்ந்தவர்கள், இன்னும் பல்வேறு துறையைச் சேர்ந்த பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் பாதிப்பு நடந்த சாலைகளில் இறங்கி வேலை பார்க்கிறார்கள். நமக்கு தெரிந்த வரையில் 25 ஆண்டுகளாக நேரில் பார்க்கவே முடியாத சில நடிகர்கள், பிரபலங்கள் எல்லோரும் இப்போது டெல்டா பகுதிகளில் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவுவதைப் பார்க்க முடிகிறது.

இதில் அரசியல்வாதிகள் இறங்கி வேலை பார்க்கும்போது மட்டும், ‘இவங்க பப்ளிசிட்டிக்காக இப்படி செய்றாங்க’ன்னு சொல்வதும் இருக்கத்தான் செய்யுது. பப்ளிசிட்டி ஆக இருந்தால் என்ன? நல்ல விஷயத்துக்காகத்தானே செய்கிறார்கள். இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே நான் சொல்லியிருக்கிறேன். ‘வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக் கூடாது’ என்கிற விஷயம் போன தலைமுறையோடு முடிந்ததாக இருக்கட்டும். வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரிய வேண்டும். அப்போதுதான் அதைப் பார்த்து இன்னும் நிறைய கைகள் சேரும்.

உதவி ஒன்றும் பனியன் சைஸ் இல்லை

அதேபோல, ‘இந்த நடிகர் 25 லட்சம் ரூபாய் கொடுத்தார். அவர் 50 லட்சம் ரூபாய் கொடுத்தார். ஆனால், இவர் ரூ.5 லட்சம்தான் கொடுத்தார்’ என்பது மாதிரியான செய்திகளைச் சமூக வலை தளங்களில் பார்க்க முடிகிறது. உதவி செய்வதில் 50 லட்சமா, 25 லட்சமா, 5 லட்சமா, அல்லது 500 ருபாயா, 50 ரூபாயா இருக்கட்டும். அது எவ்வளவு என்பதை பார்க்க வேண்டாமே. மனசுதான் இங்கே முக்கியம். 50 ரூபாயில் ஒரு வீட்டுக்கு ஒரு தென்னங்கன்று வாங்கலாமே? 100 நபர்கள் சேர்ந்து ஒவ்வொருவரும் 50 ரூபா போட்டால் ஒரு ஏக்கர் நிலத்துக்கான தென்னங்கன்று கிடைக்குமே. உதவியில் சின்ன உதவி, பெரிய உதவி என்பதெல்லாம் இல்லவே இல்லை.

இதற்கு என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமே உதாரணம்.

நான் என் கல்லூரியில் சேர்வதற்கு முன்பாக வேறொரு கல்லூரிக்கு போய் வந்தேன். என் நண்பன் அந்தக் கல்லூரியில் சேர்ந்தான் என்பதற்காக நானும் அந்தக் கல்லூரிக்குப் போயிருந்தேன். கட்டணம் எதுவும் கட்டவில்லை. அந்தக் கல்லூரிக்கு நாங்கள் மின் ரயிலில்தான் செல்வோம். நாங்கள் ஏறும் நிறுத்தத்தில் 100-க்கும் மேலான மாணவர்கள் ஏறுவார்கள். முதல் ஆண்டு பையன் என்பதால் ராகிங் விஷயத்தில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக, ரயிலில் ஏறியதும் ஒரு ஓரத்தில் இடம்பிடித்து அமர்ந்து கொள்வேன். ரயில் எந்த நிறுத்தத்தில் கடைசியாக நிற்குமோ அந்த நிறுத்தத்தில்தான் நாங்கள் இறங்க வேண்டியவர்கள். அப்படிச் சென்று கொண்டிருந்தபோது கல்லூரி மாணவி ஒருத்தர் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

கண்ணீருக்கே அவர் தத்துப்பிள்ளை

அந்தப் பெண்ணின் கண்களில் கண்ணீர் தடம். முகத்தில் சொல்ல முடியாத சோகம் அப்பிக் கிடந்தது. அவருக்கு பக்கத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு அம்மா அமர்ந்திருந்தார். அந்தப் பெண் அழுவதைப் பார்த்துக்கொண்டே வந்த அந்த அம்மா, ஒரு கட்டத்தில், ‘‘ஏம்மா… அழறே?’’ன்னு கேட்டாங்க. அந்த அம்மாவிடம் அந்தப் பெண் பேசத் தொடங்கினார். அந்த அம்மாவிடம் மனம்விட்டு பேசப் பேச அந்தப் பெண்ணின் அழுகை சற்று குறைய ஆரம்பித்திருந்தது.

வீட்டுல இருக்குற ஒரு பெரியவங்கக்கிட்ட சொல்ற மாதிரி தன்னோட கஷ்டத்தை எல்லாம் அந்த அம்மாவிடம் ஈடுபாட்டோடு அந்த மாணவி பகிர்ந்துகொண்டார். அந்த அம்மாவும் முழுமையான ஈடுபாட் டோடு அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டே வந்தார். எப்படியும் 45 நிமிடமாவது தொடர்ந்து பேசியிருப் பாங்க. என்ன பேசினாங்கன்னு எனக்குத் தெரியலை. ஆனா அந்த உரையாடலுக்குப் பிறகு அந்த மாணவி கொஞ்சம் நல்ல தனமானாங்க.

திடீரென ஒரு ரயில்வே ஸ்டேஷன் வந்ததும் அந்த மாணவி, ‘‘அக்கா நான் இதோ இந்த ஸ்டாப்ல இறங்கப் போறேன். நீங்க எங்கப் போறீங்க?’’ன்னு கேட்டாங்க. அதுக்கு அந்த அம்மா, ‘‘நான் இறங்க வேண்டிய நிறுத்தம் போய் ரொம்ப நேரமாச்சு. உன்னோட கஷ்டத்தை எல்லாம் நீ சொல்லிட்டே வந்தே. அதான் இறங்க மனசு இல்லை. அப்படி போனால் உனக்கும் கஷ்டமா இருந்திருக்கும். நான் திரும்பி அடுத்த ஒரு ரயில் பிடித்து போய்டுறேன் கண்ணு!’’ என்று சொன்னாங்க.

அன்பின் நிறுத்தம்

நான் திரும்பவும் சொல்ற விஷயம் அதுதான். ஒரு உதவிக்கு வடிவ, அளவு என்பதெல்லாம் இல்லை. அது எவ்வளவு சின்னதாக வேணும்னாலும் இருக்கலாம். ஆனால், அதுக்கு மதிப்புன்னு ஒண்ணு இருக்கு. அந்த ரயிலில் அந்தப் பெண்ணுக்கு 3 லட்சம் ரூபா கொடுத்திருந்தால்கூட அவரது அழுகையை நிறுத்தியிருக்க முடியாது. அன்றைக்கு அவருக்கு தேவைப்பட்டது இரண்டு காதுகள். அந்தக் காதுகளை அந்த அம்மா கொடுத்தாங்க. அதுவும் தன் பொண்ணு மாதிரி நினைத்து, ஒரு மாணவியோட கஷ்டத்தை கேட்டுட்டே தான் இறங்க வேண்டிய நிறுத்தத்தைக் கடந்து போய் இறங்கியிருக்காங்க. ‘இது என்ன பெரிய உதவியா?’ என்றுகூட நீங்களெல்லாம் நினைக்கலாம்.

இப்படி ஒருவர் கூட இருந்து தன் னோட கஷ்டத்தை கேட்காமல் போயிருந் தால், துக்கத்தில் அந்தப் பெண் வேறு ஏதாவது விபரீத ஒரு முடிவை எடுத்திருக் கலாம் அல்லவா? இப்போது அது தவிர்க்கப்பட்டுள்ளதுதானே. அதனால் அதை மிகப் பெரிய உதவியாகத்தான் பார்க்க வேண்டும்.

நீங்கள் ஒரு ஏழை. பரவாயில்லை. உங்கள் மூளை நன்றாக கணிதம் தெரிந்த மூளையாக இருக்கும்பட்சத்தில், அந்த பாடத்தில் திணறும் மாணவர்களுக்கு கணித வகுப்பு எடுக்கலாம். நன்றாக படித்து மருத்துவராக விரும்பியிருப் பீர்கள். ஆகவில்லையா? இப்போது ‘நீட்’ தேர்வு எழுத ஆர்வமாக இருக்கும் மாணவ - மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு எடுக்கலாம்.

ரூ.50 லட்சம், ரூ.5 லட்சம் உதவின்னும், ஒரு வீடு கட்டுத் தரவும் முடியல. ஏன், தென்னங்கன்றுக் கூட வாங்கித் தர முடியலன்னாலும் பரவாயில்லை. உங்களால் முடிந்தால் உதவி தேவைப் படுபவர்களுக்கு கொஞ்சம் நேரத்தை செலவிடுங்கள். உதவியில் பெரியது, சிறியது என்றெல்லாம் இல்லை. எது செய்யணும்னு நினைத்தாலும் பெருமையோடு செய்யுங் கள். அப்படி செய்வதைச் சுற்றி இருப்பவர்களுக்கு தெரியப்படுத்துங்க. அப்போதுதான் அவர்களும் மற்றவர்களுக்கு உதவி செய்வாங்க.

-நிமிடங்கள் ஓடும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x