Published : 09 Nov 2018 09:57 AM
Last Updated : 09 Nov 2018 09:57 AM

அரசாங்கம் கொடுத்த மடிக்கணினி உதவியால்தான் நான் ஐஆர்எஸ் ஆனேன்: விஜய் - முருகதாஸ் சார்ஸ்!

இலவசங்களை வெகுமக்கள் மயக்குத் திட்டங்கள் என வசைபாடுகிறார்கள். கல்விக்கடனில் படித்த எனக்கெல்லாம் கல்லூரிக் காலத்தில் ஒரு மடிக்கணினி எல்லாம் பெருங்கனவு. கணினி மையத்திலும், நண்பர்களிடம் கையேந்தியும்தான் அறிவுத்தேடலில் ஈடுபட முடிந்தது. மடிக்கணினி இல்லாமல் கைவலிக்க வலிக்க பொறியியல் பாடங்களைக் கையால் எழுதி மொழிபெயர்த்த வலிகளைப் போக்கியது - நீங்கள் இலவசம் என நகையாடுகிற அரசாங்க மடிக்கணினிதான். அதில் அத்தனை பாடங்கள், நூல்களைச் சேகரம் செய்து தந்திருந்தார்கள். அதன் உதவியோடுதான் என் குடிமைப்பணித் தேர்வு முயற்சிகள் சாத்தியமாகின.

“பெண்களுக்கு இலவச மருத்துவக் கல்வி, சென்னை மருத்துவக் கல்லூரிதான் தந்தது. அது இல்லாமல் போயிருந்தால் நானெல்லாம் மருத்துவமே படிக்க முடிந்திருக்காது” என மனநல மருத்துவத்தில் மகத்தான சாதனைகள் புரிந்த சாரதா மேனன் குறிப்பிட்டிருக்கிறார்.

பெண்களின் பொருளாதார விடுதலை, வேலைவாய்ப்பை இலவச மிதிவண்டிகள் எப்படியெல்லாம் அதிகரித்தன என்பது குறித்த தீர்க்கமான ஆய்வுகள் உண்டு. மட்டையடி அடிப்பவர்களுக்கு இவையெல்லாம் கண்ணில் படாது. அது இலவசம் அல்ல; சமூகக் கடமை. ஒவ்வொரு நகர்வுக்கும் ஆண்களைச் சார்ந்திருக்க வேண்டிய வேதனையிலிருந்து விடுதலை தந்த அரிய முன்னெடுப்பு மிதிவண்டிகள். உச்சிவெயில் தெரியாமல் உல்லாச மகிழுந்துகளில் வலம்வருகிறவர்களுக்கு இவை வெகுமக்கள் மயக்குத் திட்டங்களாக மட்டும் தெரிவதில் ஆச்சரியமென்ன!

சமூகத் தேர்வு எனப் பேராசிரியர் அமர்த்திய சென் குறிப்பிடும் மக்களுக்கான சரியான தேர்வுகள் தமிழ்நாட்டில் செயல்திறத்தோடு கொண்டுசேர்க்கப்படுவது ஒன்றும் விபத்தில்லை. பிரச்சினைகள் சார்ந்த தமிழக மக்களின் அணிதிரட்டல்கள் மிக முக்கியமான காரணம் என நரேந்திர சுப்ரமணியன், விவேக் சீனிவாசன் ஆகியோரின் ஆய்வுகள் நிறுவுகின்றன. இவற்றை 'ஓசி' எனக் கொச்சைப்படுத்துபவர்கள் தட்டையான பார்வை கொண்டவர்கள்.

பத்தாம் வகுப்பு முடித்தால் திருமண உதவித்தொகை என்பதால் கல்வி பெற்ற பெண்கள் பலருண்டு. வயிறு காயாமல் இருக்கப் பள்ளி நோக்கி வரவைத்தது இலவச மதிய உணவுத் திட்டம்தான். அதைச் சத்துணவு, முட்டை, வாழைப்பழம் என விரிவாக்கியது சமூக நீதி! புனிதம் கெடும் என்று அடிப்படைவாதிகள் முட்டுக்கட்டை போடுவதால், சத்துணவில் முட்டை கிடைக்க வழியில்லாமல் பல மாநிலங்களில் பழங்குடியின, ஏழைப் பிள்ளைகள் அல்லலுறுகிறார்கள். அந்த மாநிலங்களையும் தமிழகத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

இலவசங்கள் எல்லாம் இலவசங்கள் அல்ல. அவற்றின் அமலாக்கம், பயனாளிகள் சார்ந்த கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவற்றை ஊழல், கேடு என்கிற அளவுக்குப் பேசுபவர்கள் கடந்த காலம் அறியாதவர்கள். ஒரு சீரியல் பார்க்க நவீனத் தீண்டாமையோடு யார் வீட்டு வாசலிலோ நின்ற வலியெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. பேருந்துக் கட்டணம் கட்டக் காசில்லாமல் நடந்தே பல மைல் தூரம் கடந்து படித்தோரின் கதை தெரியாது. ‘கவுன்சிலிங்குக்குக் கட்ட ஐயாயிரமா?’ என கையறு நிலையில் தவித்த குடும்பங்களில் முதல் தலைமுறைப் பட்டதாரிகள் எழுவது ஏன் என அறிவீர்களா? ஊழல் ஒழிப்பு என்கிற ஜிகினாத்தாளில் சுற்றி ‘நீங்கள் பிச்சைக்காரர்கள்’ எனத் தரப்படும் மசாலா அரைவேக்காடானது, அருவருப்பானது.

- பூ.கொ.சரவணன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x