Published : 14 Nov 2018 09:11 AM
Last Updated : 14 Nov 2018 09:11 AM

ஒவ்வொரு ஆட்சியாளரும் நேருவிடமிருந்து கற்க வேண்டிய அறிவியல் அணுகுமுறை!

நேரு ஒரு மகத்தான தலைவர், சிந்தனையாளர் மட்டும் அல்ல; ஒரு நாட்டை வளர்த்தெடுப்பதில் ஆட்சியாளருக்கு எப்பேர்ப்பட்ட அறிவியல் அணுகுமுறை தேவைப்படுகிறது என்பதற்கும் ஓர் உதாரணம் அவர். அறிவியல் என்பது ஏதோ தொழில்துறை, நாட்டின் வளர்ச்சியோடு மட்டும் தொடர்புடையதல்ல, அனைவருடைய வாழ்க்கையிலும் தொடர்புள்ளது, அனைவராலும் உணரப்பட வேண்டியது என்று கருதியவர் நேரு.

பிரிட்டிஷ் ஆட்சியிலேயே இங்கு நவீன அறிவியல் கட்டுமானம் ஒன்று நிறுவப்பட்டுவிட்டது என்றாலும், பிரிட்டிஷாரால் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆய்வுகளும் தொழில்நுட்ப முன்னேற்றங்களும் பிரிட்டிஷ் பேரரசின் தேவைக்கானவையே தவிர, சாமானிய இந்தியர்களின் நலன்களுக்கானவை அல்ல. அவற்றை இந்தியத் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியவர் நேரு.

அறிவியல் அறிமுகம்

நேருவின் சிறு வயதில் அவருக்குப் பாடம் கற்பித்தவர் பெர்டினான்ட் புரூக்ஸ். இறையியல் சிந்தனையாளரான இவர், அறிவியல் புதிர்களை நேருவுக்கு அறிமுகப்படுத்தியவர். வீட்டிலேயே சிறு ஆய்வுக்கூடத்தை அமைத்து அடிப்படை வேதியியல், இயற்பியல் ஆய்வுகளைச் செய்துபார்த்தார் நேரு.

1905-ல் லண்டனில் ஹாரோ பள்ளியிலும், பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியிலும் அறிவியல் கற்றார். 19-வது, 20-வது நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியலாளர்கள் பயன்படுத்திய கேவன்டிஷ் ஆய்வுக்கூடத்துடன் நேருவுக்குத் தொடர்பு ஏற்பட்டது. ஜேம்ஸ் ஜீன்ஸ், ஆர்தர் எடிங்டன், ஜே.ஜே.தாம்சன், லார்ட் ரூதர்போர்ட் பயன்படுத்திய ஆய்வுக்கூடம் அது. பின்னர், சட்டம் படிக்கத் தொடங்கியபோது அறிவியலுடனான தொடர்பு நேருவுக்கு விட்டுப்போனது. பிறகு, அரசியலே அவருக்கு வாழ்க்கையானது. ஆனாலும், மனிதர்களின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அறிவியலில் தீர்வு உண்டு என்ற ஆழ்ந்த நம்பிக்கை அவருக்குள் இருந்தது.

இந்தியாவுடன் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றன. இந்தியாவின் வளர்ச்சிக்கு அறிவியல் வழிமுறையையே நேரு கையாண்டார்.

1930-களிலேயே தொடங்கிய முறைமை இது. அப்போதைய காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சந்திர போஸ், ‘தேசிய திட்டக் குழு’வை ஏற்படுத்தினார். இயற்பியலாளர் மேகநாத் சாஹா அதற்கு ஆலோசகர். சாஹாவும் கல்கத்தாவைச் சேர்ந்த சில அறிவியலாளர்களும் சோவியத் மாதிரியால் உந்தப்பட்டு தேசிய வளர்ச்சிக்கு அறிவியல்-தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தீர்மானித்திருந்தனர். இதற்காக 1935-ல் ‘சயன்ஸ் அண்ட் கல்ச்சர்’ என்ற மாத இதழையும் நடத்தினர். தேசிய திட்டக் குழுவின் தலைவராக நேருவைத்தான் நியமித்தார் சுபாஷ் சந்திரபோஸ். “காங்கிரஸ் கட்சி அறிவியலைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அறிவியல்தான் இந்த யுகத்தின் ஆன்ம சக்தி” என்று 1937-ல் குறிப்பிட்டார் நேரு.

பிரதமரான அறிஞர்

பிரதமர் பதவியை நேரு ஏற்றபோது, லட்சக்கணக்கானோரைப் பலிவாங்கிய வங்கப் பஞ்சம், தேசப் பிரிவினை என்ற இரு பெரும் துயரங்களையும் களைய வேண்டிய பெரும் பொறுப்பையும் ஏற்றார். அறிவியல், தொழில்நுட்ப உதவியோடுதான் நாடு தன்னிறைவு பெற முடியும் என்று அவர் நம்பினார். தன்னைச் சுற்றிய உலகம் அறிவியலால் மாறிக்கொண்டிருப்பதை முழுக்க உணர்ந்தவர் அவர். ‘உலக வரலாறு - ஒரு பார்வை’ என்ற நூலை எழுதிய அந்த அறிஞர், மேற்கு நாடுகளைத் தவிர, மற்ற நாடுகளின் முன்னேற்றத்துக்கு அறிவியலும் தொழில்நுட்பமும்தான் உதவும் என்று உணர்ந்திருந்தார். “அறிவியல் என்பது சோதனைக் குழாய்களைச் சூடேற்றுவதும், வெவ்வேறு வாயுக்களைக் கலந்து புதியதை உருவாக்குவதும், கருவிகளையும் சாதனங்களையும் தயாரிப்பது மட்டுமல்ல. அறிவியல் என்பது எண்ணங்களுக்குப் பயிற்சி தருவது, பயிற்சிபெற்ற எண்ணங்களின் உதவியோடு வாழும் வழிகளையும் முறைகளையும் அறிவியல்படி மேற்கொள்வது” என்று குறிப்பிட்டுள்ளார் நேரு.

உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள்

தொழில்துறை வளர்ச்சிக்கென தனி ஆராய்ச்சி அமைப்பின் தேவை உணரப்பட்டபோது, அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) என்ற அமைப்பை வடிவமைத்தார் விஞ்ஞானி பட்நாகர். பின், நாடு முழுவதும் 22 தேசிய ஆய்வுக்கூடங்கள் 1948 முதல் 1958 வரையில் படிப்படியாக ஏற்படுத்தப்பட்டன. நேரு, கல்வியமைச்சர் மவுலானா அபுல் கலாம் ஆசாத்துடன் ஒவ்வொரு ஆய்வுக்கூடத் திறப்பு விழாவிலும் நேரில் பங்கேற்றார்.

1950 ஜனவரி 21-ல் டெல்லியில் தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடத்தைத் திறந்துவைத்தபோது அறிவியல், தொழில்நுட்பத்தின் மீது தனக்கிருந்த தணியாத ஆர்வத்தை வெளிப்படுத்தினார். “பிரதமராவதற்கு பெற்றுள்ள தகுதியைவிட அதிகம் இருந்திருந்தால் இந்த ஆய்வுக்கூடத்தின் இயக்குநராகவே ஆகியிருப்பேன்” என்று மனமுருகிப் பேசினார் நேரு. பெரிய அளவிலான அறிவியல் தொழில்திட்டங்களை நிறைவேற்றப் பயிற்சிபெற்ற ஏராளமான தொழில்நுட்பவியலாளர்கள் தேவை என்பது நேருவுக்குத் தெரியும். இந்தியாவின் பெருமைமிகு நிறுவனங்களான இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (ஐஐடி) இதன் விளைவாகவே உருவாக்கப்பட்டன. முதல் ஐஐடி வங்கத்தின் கரக்பூர் நகரில் ஹிஜ்லி காவல் முகாம் பகுதியில் 1950-ல் தொடங்கப்பட்டது. தொடர்ந்து பம்பாய், சென்னை, கான்பூர், டெல்லி என்ற நான்கு நகரங்களில் இக்கல்விக் கழகம் திறக்கப்பட்டு, நாட்டின் அனைத்துப் பகுதி மாணவர்களும் உயர் தொழில்நுட்பம் பயில வழிசெய்யப்பட்டது.

உணவு தானிய உற்பத்தியில் சுயச் சார்பு, தன்னிறைவு ஆகியவற்றை அடைவதில் உறுதிகொண்டிருந்தார் நேரு. நாடு சுதந்திரம் அடைந்தால் என்னவெல்லாம் கிடைக்கும் என்று மக்களுக்கு வாக்குறுதி தந்தாரோ அவற்றையெல்லாம் நிறைவேற்றி முடித்துவிட வேண்டும் என்று விரைந்து செயல்பட்டார். பாசன வசதியை அதிகப்படுத்த பெரிய அணைகளைக் கட்டும் திட்டங்களைத் தீட்டினார்.

சோவியத் பாணியில் ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டு அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டன. வெள்ளக் கட்டுப்பாடு, மண் அரிமானத் தடுப்பு, பாசனத்துக்கு நீர், மின்சார உற்பத்தி, குடிநீர்த் தேவை என்று பல்வேறு நோக்கங்களைப் பூர்த்திசெய்ய மிகப் பெரிய ஆறுகளின் குறுக்கே மிகப் பெரிய அணைகளைக் கட்டும் திட்டங்களை நிறைவேற்றினார். ஹோமி பாபா, மேகநாத் சாஹா உதவியோடு அணு இயற்பியல் திட்டங்களை வளர்ச்சிக்குப் பயன்படுத்த முன்வந்தார்.

1945-ல் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலையத்தை பாபா உருவாக்கியிருந்தார். முதலில் பெங்களூரில் இந்திய அறிவியல் கழக வளாகத்தில் செயல்பட்ட அதை, அதே ஆண்டின் பிற்பகுதியில் பம்பாய்க்குக் கொண்டுசென்றார். கொலாபாவில் அதன் புதிய வளாகத்தை பிரதமர் நேரு

15.1.1962-ல் தொடங்கிவைத்தார். அணு இயற்பியல் வளர்ச்சிக்காக 1948-ல் அணுசக்தி ஆணையத்தை உருவாக்கினார். 1954-ல் டிராம்பேயில் அணுசக்தி நிறுவனத்தை ஏற்படுத்தினார். 1967-ல் அது பாபா அணு ஆராய்ச்சி மையம் என்ற பெயரைப் பெற்றது.

நிலைத்த பார்வை

நேரு தானாகவும் தொடர்ந்தும் அளித்துவந்த ஆதரவால்தான் இந்தியாவில் அறிவியல், தொழில்துறை வளர்ச்சி சாத்தியமானது. நேரு பிரதமராக இருந்த 17 ஆண்டுகளில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் 45-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கூடங்கள் திறக்கப்பட்டன. அவருடைய ஆட்சியின் கடைசி இரண்டு ஆண்டுகளில்தான் மின்னணுவியல் துறை, விண்வெளித் துறை ஆகியவற்றில் இந்தியா கால்பதிப்பதற்கான ஆரம்பகட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தன் வாழ்நாள் முழுக்க அறிவியல் உணர்வோடு செயல்பட்ட நேருவின் இந்தக் கூற்று, அவருடைய அணுகுமுறையை மேலும் நமக்கு விளக்கக் கூடியது: “அரசியல், என்னைப் பொருளாதாரத்தை நோக்கித் திருப்பியது. பொருளாதாரமோ அறிவியலை நாடச்செய்தது. அறிவியலும் அறிவியல் அணுகுமுறையும் நம்முடைய எல்லா பிரச்சினைகளுக்கும் வாழ்க்கைக்குமே தீர்வாகத் திகழ்கின்றன!”

- எஸ்.இர்ஃபான் ஹபீப்

சுருக்கமாகத் தமிழில்: சாரி,

© ‘தி பிரன்ட்லைன்’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x