Published : 29 Nov 2018 10:05 AM
Last Updated : 29 Nov 2018 10:05 AM

பேரழிவு அம்பலப்படுத்தும் ஓட்டைகள்: ரயில் திட்டங்களை உடனே நிறைவேற்றுங்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரயில்கள் மூலமாக அனுப்பப்பட்டுவரும் நிவாரணப் பொருட்களுக்கான கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருக்கிறது ரயில்வே அமைச்சகம்.

தாமதம் என்றாலும், ரயில்வே அமைச்சகத்தின் இந்த அறிவிப்பு வரவேற்புக்குரியது. அதேசமயம், காவிரிப் படுகையில் புயலுக்குப் பின் பத்து நாட்களாகியும் நிவாரணப் பணிகளில் ஏற்பட்டிருக்கும் தேக்கத்துக்கும் அங்கு கிடப்பில் போடப்பட்டிருக்கும் ரயில் திட்டங்களுக்கும் உள்ள தொடர்பை இப்போதேனும் ரயில்வே துறை சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சிக் காலகட்டத்திலேயே ரயில் போக்குவரத்து சிறப்பாக இருந்த பகுதி காவிரிப் படுகை. அரிசியையும் உப்பையும் மீன் - கருவாடையும் ஏற்றிக்கொண்டு இந்தப் பகுதியிலிருந்து சரக்கு ரயில்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் நோக்கி பயணித்திருக்கின்றன. பிரிட்டிஷார் இந்தப் பகுதியை ரயில் தடங்களால் இணைப்பதில் காட்டிய அக்கறைக்கான இரு முக்கியமான காரணங்களை இன்றைய ஆட்சியாளர்கள் நினைவுகூர வேண்டும். நாட்டுக்கு உணவு படைக்கும் பகுதி இது; இயற்கைப் பேரிடர் வந்தால் ஆறுகளினூடாக அமைக்கப்பட்ட சாலைகள் எளிதில் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து முடங்கிவிடும். இதனாலேயே ரயில்வே திட்டங்களில் காவிரிப் படுகை முக்கியத்துவம் பெற்றது.

பிரிட்டிஷார் அன்றைக்கு உருவாக்கிய கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு உரிய வகையில் விஸ்தரித்திருந்தால் சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்த எழுபதாண்டுகளில் காவிரிப் படுகையில் ரயில் நுழையாத ஊரே இல்லை என்ற சூழலை உருவாக்கியிருக்கலாம். ஆனால், அகல ரயில் பாதையாக்கும் பணிகளில்கூட மிக மோசமான மெத்தனம் இந்தப் பகுதியில் காட்டப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மீட்டர்கேஜ் பாதைகள் அகல ரயில் பாதைகளாக மாறிவிட்டன. ஆனால், காவிரிப் படுகை மாவட்டங்களிலோ இந்தப் பணிகள் பல காலமாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன.

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர், பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடி செல்லும் ரயில்வே வழித்தடத்தை அகலப்பாதையாக மாற்றும் பணி பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்துகொண்டிருக்கிறது. தற்போது, காரைக்குடி தொடங்கி பட்டுக்கோட்டை வரையிலான பாதை மட்டுமே போடப்பட்டிருக்கிறது. ரயில்கள் இயக்கப்படவில்லை. பட்டுக்கோட்டை - திருத்துறைப்பூண்டி - திருவாரூர் பாதைகளுக்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆக, காவிரிப் படுகையின் கடைமடைப் பகுதிகளுக்கு உள்ளான போக்குவரத்தில் தற்போதைக்கு திருவாரூர் - மயிலாடுதுறை பாதையில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன.

ஒரு பேரிடர் நமக்கு ஏராளமான பாடங்களைக் கற்பிக்கிறது. ரயில்வே துறையை வெறுமனே லாபத்துக்காக நடத்தும் நிறுவனமாகப் பார்க்கும் பார்வையைப் புதிய பொருளாதார யுகத்துக்குப் பிந்தைய சூழல் இங்கு உருவாக்கிக்கொண்டிருக்கும் சூழலில், அதை மறுபரிசீலனை செய்வதற்கான தேவையை கஜா புயல் பாதிப்புகள் உருவாக்கியிருக்கின்றன. நிலுவையிலுள்ள திட்டங்களை அரசு உடனே முடிக்க வேண்டும். புதிய பாதைகளுக்கான முன்மொழிவுகளை யோசிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x