Published : 01 Nov 2018 09:56 AM
Last Updated : 01 Nov 2018 09:56 AM

காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல்: மக்கள் கோபத்தின் வெளிப்பாடு!

காஷ்மீர் மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக்கு நடந்த தேர்தலில், காஷ்மீர் பகுதியில் மிகக் குறைவான வாக்குகளே பதிவாகியிருப்பது அப்பகுதியில் வசிக்கும் மக்களின் அதிருப்தியைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, அரசியல் சட்டத்தின் பிரிவு 35(ஏ) அடிப்படையிலான அதிகாரத்தை நீக்க உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது. காஷ்மீரின் நிரந்தரக் குடிமக்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் அந்தச் சட்டப்பிரிவை நீக்குவதன் மூலம் காஷ்மீருக்கு வழங்கியுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்யும் நோக்கத்துடன் இயங்கிவரும் பாஜக அரசுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகவும் இதைப் பார்க்க முடிகிறது.

அக்டோபர் 8, 10, 13, 16 ஆகிய தேதிகளில் நான்கு கட்டங்களாக நடந்த இந்தத் தேர்தலை, தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தன. இதைத் தொடர்ந்து, காஷ்மீர் பகுதியில் பெரும்பான்மையான வாக்காளர்கள் வாக்களிக்க முன்வரவில்லை. அதேசமயம் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் வலுவாக உள்ள ஜம்மு பகுதியில் அதிகமான வாக்குப்பதிவு நடந்தது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் முன்பெல்லாம் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரும் பிரிவினைவாதிகளின் குரல்கள் எடுபடாத சூழல் இருந்தது. 1990-கள் தொடங்கி ஒவ்வொரு தேர்தலில் வாக்குப்பதிவு அதிகரித்துத்தான் வந்திருக்கிறது. இந்நிலையில், கிட்டத்தட்ட தேர்தலைப் புறக்கணிக்கும் அளவுக்கு ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களும் முடிவெடுப்பதன் பின்னணியை அரசு புரிந்துகொள்ள வேண்டும். பிடிபி-பாஜக கூட்டணி அரசு இந்த ஆண்டு ஜூன் மாதம் உடைந்தது, அதைத் தொடர்ந்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது போன்ற நிகழ்வுகள், நிலையான அரசுக்காக ஏங்கிவரும் காஷ்மீர் மக்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியிருப்பதில் வியப்பில்லை. மறுபுறம், காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக மத்திய அரசால் பேச்சு நடத்த அனுப்பப்பட்ட தூதர் தினேஷ்வர் சர்மாவின் நடவடிக்கைகள் மக்களுடைய அச்சங்களையும் சந்தேகங்களையும் போக்கிவிடவில்லை. மாறாக, சமீப காலங்களில் முன்னெப்போதும் இருந்ததைவிட பதற்றமான சூழலே காஷ்மீரில் அதிகரித்துவிட்டது. இதற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகள் முக்கியக் காரணம் என்று காஷ்மீர் மக்கள் கருதுகிறார்கள்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பது மாநில நலனுக்கும் அங்கு சுமுக நிலையை உருவாக்கும் முயற்சிகளுக்கும் நல்லதல்ல என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. இப்படியான போக்குகள், காஷ்மீர் மக்களை மைய நீரோட்டத்திலிருந்து மேலும் தொலைதூரத்துக்கு அழைத்துச்சென்றுவிடும் என்பதில் சந்தேகமில்லை. இந்தச் சூழலில், காஷ்மீர் மக்களின் குறைகளைத் தீர்க்கும் நடவடிக்கைகளில் இரட்டிப்பு வேகத்தில் அரசு இறங்க வேண்டும். காஷ்மீருக்கு வழங்கியுள்ள சிறப்பு அந்தஸ்தை நீக்குவது பாஜக ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், கடுமையான பின்விளைவுகளை அது ஏற்படுத்திவிடும். அரசு இதை உணர்ந்து செயல்பட வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x