Last Updated : 30 Oct, 2018 10:10 AM

 

Published : 30 Oct 2018 10:10 AM
Last Updated : 30 Oct 2018 10:10 AM

மு.அருணாசலத்தின் விமர்சன முகம்!

இலக்கிய வரலாறு, இசை நூல்கள் ஆராய்ச்சி, நாட்டுப்புறவியல், சைவ சமய ஆராய்ச்சி, மொழிபெயர்ப்பு, காந்தியம் என்று பல்வேறு தளங்களில் இயங்கியவர் தமிழறிஞர் மு.அருணாசலம். 1930-களில் தொடங்கிய அவரது எழுத்துப் பயணம் 1992-ல் அவரது இறுதிக்காலம் வரை தொடர்ந்தது. தீவிர ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்த அந்தக் காலகட்டத்தில், தமிழில் வெளிவந்த முக்கியமான நூல்களைப் பற்றிய விமர்சனங்களையும் உடனுக்குடன்  அவர் எழுதியிருக்கிறார்.

மு.அருணாசலம் எழுதிய நூல்களும் சேகரித்து வைத்த நூல்களும் ஏராளமான ஆய்வாளர்களுக்குத் தகவல் சுரங்கமாக விளங்குகின்றன. நாகை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் உள்ள அவரது நூலகத்திலிருந்த 8,000-க்கும் மேற்பட்ட நூல்கள் சென்னையிலுள்ள ரோஜா முத்தையா நூலகத்துக்கும் 150-க்கும் மேற்பட்ட சுவடிகள் உ.வே.சா. நூலகத்துக்கும் வழங்கப்பட்டுள்ளன. நூலகத்தில் தற்போது எஞ்சியிருக்கும் சேகரிப்புகளில் அவர் எழுதிய நூல்களின் சில பிரதிகளும் இலக்கிய வரலாற்றின் அடுத்தடுத்த  பாகங்களை எழுதுவதற்கான குறிப்புகள், அவருக்கு வந்த கடிதங்கள், நாட்குறிப்புகள்  மற்றும் பல்வேறு நாளிதழ்களிலிருந்து கத்தரித்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிகள் ஆகியவை உள்ளன.

மு.அருணாசலத்தின் சேகரித்து வைத்திருந்த நாளிதழ் துண்டுகளில், அவர் எழுதி வெளியான புத்தக விமர்சனங்களும் உண்டு. 1966 முதல் 1988 வரையிலான 22 ஆண்டுகளில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் 55 புத்தக விமர்சனங்களை எழுதியிருக்கிறார் மு.அருணாசலம். வரலாற்று நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், நாட்டுப்புறவியல், சமய இலக்கியங்கள், பதிப்பு நூல்கள் என்று பலதரப்பட்ட புத்தகங்களைப் பற்றி அவர் எழுதியிருக்கிறார். சிறுகதை, நாவல் பற்றி அவர் எழுதியதாகத் தெரியவில்லை. ‘தி இந்து’ ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்கள், வெளியான கட்டுரைகளுக்கு அவர் எழுதிய எதிர்வினைகள், அவரது நூல்களுக்கு மற்ற தமிழறிஞர்கள் எழுதிய விமர்சனங்கள் ஆகியவையும் இந்தச் சேகரங்களில் உண்டு.

தமிழ் ஆராய்ச்சியின் பயன்கள் பொதுவெளியைச் சென்றுசேர வேண்டும், தமிழைத் தாண்டி அது வேறு பல மொழிகளுக்கும் கொண்டுசெல்லப்பட வேண்டும் என்ற மு.அருணாசலத்தின் நோக்கமும் எழுத்தியக்கமும் இன்றும் நமக்கு வழிகாட்டத்தக்கது.

- ஜெ.சுடர்விழி, சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்.

அக்டோபர் 29, மு.அருணாசலம் பிறந்தநாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x