Published : 09 Oct 2018 08:58 AM
Last Updated : 09 Oct 2018 08:58 AM

காற்று மாசைக் கட்டுப்படுத்த புதிய முயற்சி பலன் தரட்டும்!

காற்று மாசு பிரச்சினையைச் சமாளிக்க, நெல் அறுவடைக்குப் பிறகு எஞ்சும் அடிக்கட்டைகள் எரிக்கப்படுவதைத் தடுக்க பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு எடுத்திருக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது. உச்ச நீதிமன்ற ஆணைப்படி நியமிக்கப்பட்ட ‘சுற்றுச்சூழல் மாசுத் தடுப்பு கட்டுப்பாடு ஆணையத்தின் (இபிசிஏ) பரிந்துரையை ஏற்று இந்நடவடிக்கையை அரசு எடுத்திருக்கிறது. குளிர்காலங்களில் வட மாநிலங்களுக்குத் தலைவலியாக இருக்கும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவது சற்றே ஆறுதல் அளிக்கிறது.

நெல் சாகுபடி நிலங்களை அடுத்து கோதுமைச் சாகுபடிக்குத் தயார்படுத்துவதற்காக ஒரே சமயத்தில் எல்லா விவசாயிகளும் நெல் அடிக்கட்டையை எரிக்கின்றனர். கையால் அறுவடை செய்யும்போது அந்தத் தாள்கதிரை ஒட்ட அறுக்க முடியும். இப்போது விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை அல்லது செலவு காரணமாக அறுவடை இயந்திரங்கள்தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இயந்திரங்கள் கட்டைகளை முற்றிலுமாக அறுப்பதில்லை. இவற்றை எரிக்கும்போது மாசு அதிகரிக்கிறது. இதனால் 20% அளவுக்குக் காற்று மாசு ஏற்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இந்நிலையில், எஞ்சும் அடிக்கட்டைகளை வேரோடு அகற்ற விவசாயிகளுக்கே மானிய விலையில் இயந்திரம் வழங்க முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. விவசாயிகள் நேரடியாகப் பெறும் இயந்திரங்களுக்கு 50% மானியம் தரப்படும்.

கூட்டுறவுச் சங்கங்கள், வேளாண் கருவிகளை வாடகைக்குத் தரும் அரசு முகமைகள், விவசாயிகள் நலன்சார்ந்த தன்னார்வக் குழுக்கள், கிராமப் பஞ்சாயத்துகளுக்கு இவை 75% மானியத்தில் விற்கப்படும். ஹேப்பி சீடர், பேடி ஸ்டிரா சாப்பர்ஸ், ஜீரோ டில் டிரில் என்ற பெயர்களில் உள்ள இந்த இயந்திரங்களை வழங்க மாநிலங்களுக்கு ரூ.650 கோடியை அரசு வழங்குகிறது. பஞ்சாப் அரசு 24,315 இயந்திரங்களை வாங்க இலக்கு நிர்ணயித்திருக்கிறது.

ஐந்து ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகள், இந்த இயந்திரத்தால் அடிக்கட்டையை முழுதாக அகற்றிவிட முடியுமா என்று சந்தேகப்படுகிறார்கள். எனவே, இதுதொடர்பாகச் செயல்விளக்கம் செய்து விவசாயிகளின் சந்தேகங்களைப் போக்க வேண்டும். நிலத்துக்குச் சேதம் ஏற்படாது என்று உறுதியளிக்க வேண்டும். சுற்றுச்சூழலை மாசடையாமல் காப்பதால் விவசாயிகளின் குடும்பங்களுக்கும் ஏற்படக்கூடிய நன்மைகளை விளக்க வேண்டும்.

நெல் அடிக்கட்டை எரிப்பால் ஏற்படும் மாசு அளவு 20% தான். மோட்டார் வாகனங்கள் - ஆலைகள் வெளிவிடும் புகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படும் 80% மாசுகளுக்கும் இதைப் போல தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளைச் சிந்தித்து நடைமுறைப்படுத்த வேண்டும். வட மாநிலங்களில் தூசுப் படலப் புயல் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று இபிசிஏ எச்சரித்திருப்பதையும் மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த முயற்சியால் மாசு குறையுமே தவிர முழுப் பலன் கிட்டாது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x