Published : 31 Oct 2018 08:50 AM
Last Updated : 31 Oct 2018 08:50 AM

மூக்கையூர் மீன்பிடித் துறைமுகம்: கேட்டது வேறு, கிடைத்தது வேறு!

ஒரு திருமண நிகழ்வுக்காகச் சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பாரம்பரியக் கடற்கரை ஊரான மூக்கையூர் சென்றிருந்தேன். மூக்கையூர் துறைமுக அமைவுக்காகக் கடந்த 2014 நவம்பரிலிருந்து தொடர்ச்சியாய் மத்திய அமைச்சர்களை டெல்லியில் சந்தித்து, இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திச் சொன்ன பலரில் நானும் ஒருவன். திருமண நிகழ்வுகளுக்குப் பிறகு, துறைமுகப் பணியைப் பார்க்கக் கடற்கரைப் பக்கம் சென்றேன். வலைக்கூடத்தில் குவிந்துகிடந்த வழி வலைகளுக்கு மத்தியில் ஆரோக்கியம் படுத்துக்கிடந்தார். என்னைப் பார்த்ததும் எழுந்தார்.

“இன்னக்கி நேத்து இல்ல, நாலு தலமுறையா மன்றாடிக் கேட்ட தொறமுகம். ஆனா, அது இருக்க சீரப் போயிப் பாருங்க; கண்ணுல தண்ணி வந்துரும். தடுப்புச் சுவர் ரெண்டயும் நேர் தெக்காக் கொண்டுபோயி வுட்டுருக்கான்வ. கச்சான் காலத்துக் கடலடிய கட்டியம் போட்டு வரவேற்குறான்வ” என்றார் ஆற்றாமையுடன்.

நீண்ட காலக் கோரிக்கை

தென்கடலில் கச்சான் காலத்துக் கடலடி பொறுக்க முடியாமல்தான் இப்பகுதி மீனவர்கள், 1930 தொடங்கி ராமேஸ்வரம் தீவுப் பகுதிக்குச் சென்று தொழில்செய்து வாழத் தொடங்கினார்கள். வாடையில் தென்கடலும், கச்சானில் வடகடலும் வாரி வழங்கியது. வளமான வடகடல் தொழில், அத்துமீறிய மீன்பிடிப்பால் இல்லை என்றே ஆகிவிட்டது. வணிக மீனவரின் பேராசைதான் இதற்கு முக்கியக் காரணம். பாக் நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினைக்குத் தீர்வாக, ஆழ்கடல் மீன்பிடிப்பைக் கருத்தில் கொண்டு மூக்கையூர் மீன்பிடித் துறைமுகம் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

2014-ல் இந்தப் பிரச்சினை தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர்களுடனான சந்திப்பில், பாக் நீரிணைப் பிரச்சினை ஆரம்பம், பாதிப்பு மற்றும் அதற்கான தீர்வு என விரிவான அறிக்கை சமர்ப்பித்திருந்தேன். அந்த ஆய்வறிக்கையின் முக்கியப் பரிந்துரையே இந்த மூக்கையூர் ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகம். நில அமைவின் காரணமாக, மூக்கையூரில் கடல் தென்பகுதியில் இருக்கிறது. தீவுகள் சூழ பூத்துக் குலுங்கும் வளமான பாற்கடல். ஆனால், கச்சான் காலத்தில் தொழில் செய்ய முடியாது. மே மாதம் தொடங்கி அக்டோபர் முடிய தென்கடலில் கச்சானின் கடுங்காலம். இந்தக் காலத்துக்கான பாதுகாப்புக்காகத்தான் நான்கு தலைமுறையாக மீன்பிடித் துறைமுகம் கேட்டார்கள் இப்பகுதி மக்கள். துறைமுகம் வந்து தடுப்புச் சுவரும் அமைந்துவிட்டால், கச்சானிலும் தாராளமாய்த் தொழில் செய்யலாமே என்பது அவர்களது எண்ணம். ஆனால், நடந்தது வேறு!

என்ன பிரச்சினை?

துறைமுகத்துக்கான கிழக்கு மற்றும் மேற்குத் தடுப்புச் சுவர்கள் முற்றிலும் தவறாக, ஆழ்கடலை நோக்கி நேர் தெற்காக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த அமைப்பு கச்சான் காற்றையும், கடலடியையும் கட்டியம் கூறி வரவேற்கும் என்கிறார்கள் பாரம்பரியக் கடலோடிகள். ஆத்துவாயின் நேர்க்கோட்டிலிருக்கும் படகுத் தளத்தில், தீவிரம் குறையாமல் தொடர்ச்சியாய் உள்ளே வரும் அலைகளால் பெரும் விபரீதங்கள் நடக்கும் என்கிறார்கள் கடல், காற்று, நீரோட்டத்தின் தன்மை புரிந்த உள்ளூர் மீனவர்கள்.

கிழக்குப்புறத் தடுப்புச் சுவரின் வடபகுதியை மண்சரிவிலிருந்து தடுப்பதற்காக நீட்டிக் கேட்டிருக்கிறார்கள், அதற்கும் உடன்படவில்லை ஒப்பந்தக்காரர். விளைவு, கிழக்குப்புறமிருந்து தானாய்ச் சரியும் மணலோடு, கிழக்கு நோக்கித் திருப்பாமல் விடப்பட்ட மேற்குப்புறத் தடுப்புச் சுவரால் துறைமுகத்துள்ளே மண்வந்து குவிகிறது. இதன் காரணமாகப் படகுகளைத் திருப்பி துறைமுகப் படகுத் தளத்தோடு கட்டவே முடியாது.

வழக்கமான அதிகாரவர்க்கத்தின் அலட்சியப் போக்கு, இந்தத் திட்டத்தையும் இருந்தும் இல்லாமலாக்கியிருக்கிறது. இதே கதைதான் தனுஷ்கோடி பாதையில் இருக்கும் முகுந்தராயர் சத்திரத்திலும், கோதாண்ட ராமர் கோயில் பக்கமும். தங்கச்சிமடத்தில் தென்வடலாக 200 மீட்டர் நீளத்தில் அமைந்துள்ள ஜெட்டி, வாடைக்கான தேவை. வடகிழக்கிலிருந்து மேற்காக இழுத்து தென்மேற்காகத் திருப்புங்கள் என்றால், சம்பந்தமில்லாமல் நேர் தென்வடலாக நீட்டிவைத்திருக்கிறார்கள். வாடையில் ஒரு துரும்புகூட ஜெட்டி பக்கம் போக முடியாது.

பாம்பன் தெக்குவாடியில் தென்வடலாக அமைந்துள்ள ஜெட்டி தவறான அமைவிடம் காரணமாக நீவாட்டால் மண்மூடிக் கிடக்கிறது. குந்துகாலில் தென்கடலில் தற்போது அமைக்கப்படும் ஜெட்டியாலும் மீனவர்களுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை. மூக்கையூர் மீன்பிடித் துறைமுகத்தின் அசலான திட்ட வரவின்படி, மேற்குப்புறத் தடுப்புச் சுவர் தெற்காக 550 மீட்டர் கடலுக்குள் செல்ல வேண்டும். கிழக்குப்புறத் தடுப்புச் சுவர் 350 மீட்டர் கடலுக்குள் செல்ல வேண்டும். ஒப்பந்தக்காரரின் செலவைக் குறைத்து லாபம் சேர்க்கும் எண்ணத்தால் மேற்குப்புறச் சுவர் 375 மீட்டராகவும், கிழக்குப் புறச்சுவர் 300 மீட்டராகவும் குறைந்துபோனது. இது அரசியல் மற்றும் அதிகாரவர்க்கத்தின் ஆதரவில்லாமல் நடந்திருக்க முடியாது.

உள்ளூர் போலி மீனவர்களும் இதில் கைகோத்ததுதான் அசிங்கத்தின் உச்சம். அசலாகப் போட வேண்டிய பாக்கியுள்ள இருபுறத் தடுப்புச் சுவர்களின் நீளத்தைக் கிழக்குப் பக்கமாகத் திருப்பித் தந்தாலே அது கச்சானைத் தடுக்கும் பாதுகாப்பாக அமைந்துவிடும். அல்லது முழு நீளத்தைத் தென்கிழக்காகக் கொடுத்தாலும் எதிரே இருக்கும் நம் தீவும் இணைந்த பாதுகாப்பாக மாறிவிடும். துறைமுகத்துக்குள் மண் சேர்வது முழுமையாக நின்றுவிடும். கச்சான் காலத்துக் கடலடியிலிருந்தும் பாதுகாப்பு கிடைத்துவிடும்.

ஏமாற்றப்படும் மக்கள்

தங்களின் வெகுநாள் எதிர்பார்ப்பான மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படுகிறதே என்ற அக்கறையில், அதன் கட்டுமானப் பணிக்காக ஊருக்கு உள்ளே இருக்கும் பள்ளியின் எதிரே உள்ள குறுகிய சாலையைத் தற்காலிகமாய் பயன்படுத்தக் கொடுத்திருக்கிறார்கள் ஊர்மக்கள்.

இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஒப்பந்தக்காரர், திட்ட வரைவின்படி வடக்குப் பாலத்திலிருந்து ஊருக்கு வெளியே அமையவிருந்த பிரதான இணைப்புச் சாலையை, உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரவர்க்கத்தின் துணையோடு அமைத்துக் கொடுக்க மறுக்கிறார். காரணம், திட்டத்துக்கான நிதி முடிந்துவிட்டதாம்.

போராடித் திட்டங்களைப் பெறுகிறோம். ஆனால், அந்தத் திட்டங்களை - அது பேரிடர் பாதுகாப்பு அம்சமாக இருந்தாலும்கூட - அதன் உள் நுழைந்து தன் சுய, சுக வாழ்க்கைக்குச் சாதகமாக்கிக்கொள்கிறார்கள் சுயநலவாதிகள். பல்வேறு நிதி நெருக்கடிக்கிடையிலும் இந்தத் திட்டத்துக்கான நிதி, மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. நிதி ஒதுக்கியதோடு தன் கடமை முடிந்துவிட்டது என்று எண்ணாமல் திட்டத்தின் செயலாக்கத்திலும் பணியிலும் அது கவனம்செலுத்த வேண்டும். தமிழக அரசு கடலோடிகள் விஷயத்தில் அவர்களுடைய குரல்படி திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

- ஜோ டி குருஸ், எழுத்தாளர்,

'ஆழி சூழ் உலகு', 'கொற்கை' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: mjoedcruz@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x