Last Updated : 26 Oct, 2018 09:35 AM

 

Published : 26 Oct 2018 09:35 AM
Last Updated : 26 Oct 2018 09:35 AM

மரபை நவீனத்தோடு இணைத்தது முத்துசாமியின் கொடை: ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் பேட்டி

ந.முத்துசாமியின் உற்ற தோழர் ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன். தனிப்பட்ட உறவாக மட்டும் அல்லாமல், கலை இலக்கியச் செயல்பாட்டிலும் கூட்டுறவாக வெளிப்பட்டு, தமிழ்ப் பண்பாட்டுக் களத்தை மேம்படுத்திய ஆத்ம நட்பு இவர்கள் இருவருக்கும் இடையேயானது. முத்துசாமியின் புத்தகங்களைப் பதிப்பித்தவர் ராமகிருஷ்ணன். ‘கூத்துப்பட்டறை’யை முத்துசாமி கட்டி எழுப்பிய நாட்களில் அவருக்கு உறுதுணையாக நின்று அதன் நிர்வாகத்தைக் கவனித்தவர். ராமகிருஷ்ணன் இணைந்து நடத்திய இலக்கிய அமைப்பு, சிறுபத்திரிகைச் செயல்பாடுகளிலும் சேர்ந்து பணியாற்றியவர் முத்துசாமி. சமீபத்தில் ஆங்கிலத்தில் வெளியான முத்துசாமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் ‘புல்லக்ஸ் ஃப்ரம் தி வெஸ்ட்’ நூலையும் டேவிட் ஷுல்மனுடன் இணைந்து மொழிபெயர்த்தவர் ராமகிருஷ்ணன். முத்துசாமியின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

உங்கள் இருவரின் முதல் சந்திப்பு எப்போது நடந்தது?

50 வருட உறவு எங்களுடையது. 1966-1969 காலகட்டத்தில், சா.கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, மா.ராஜாராம், நான் நால்வரும் ‘இலக்கிய சங்கம்’ எனும் நட்புரீதியான அமைப்பை உருவாக்கினோம். “அன்றைய சூழலில் இலக்கியக் கூட்டங்களின் விவாதங்களில் தீவிரத்தன்மை இல்லை, யாரும் முழு ஈடுபாட்டோடு பேசுவதில்லை, கூட்டம் நடத்தப்படுவதில் ஒழுங்கு இல்லை” என்ற குறைபாடுகள் எங்களுக்கு இருந்தன. இதற்கு மாற்றாக, கூட்டத்தை நேரத்துக்கு ஆரம்பிப்பது, பேச்சைக் கட்டுரையாக்கிக் கொண்டுவந்து வாசிப்பது, பிறகு கேட்கப்படும் கேள்விகளுக்கு உரையாளர் பதில் அளிப்பது, நிகழ்வு குறித்த குறிப்புகள் தயாரிப்பது என்று இந்த அமைப்பின் கூட்டங்களை நடத்தினோம். அந்தக் கூட்டத்தில்தான் முத்துசாமியை முதன்முறையாகச் சந்தித்தேன். சி.சு.செல்லப்பா,

வி.து.சீனிவாசன், கி.அ.சச்சிதானந்தன் என்று அந்தக் கூட்டத்துக்கு வந்தவர்களோடு அறிமுகமானார். பின்னர் அது ஆழமான உறவாகிவிட்டது.

முத்துசாமி எழுதத் தொடங்கியதும் அதே காலகட்டத்தில்தானா?

1968-ல் ‘நடை’ சிறுபத்திரிகையை ஆரம்பித்தார்கள். ‘நடை’யில் முத்துசாமி ரொம்பவும் தீவிரமாக இருந்தார். அந்தப் பத்திரிகைக்குப் பங்களிப்பதில், வாசகர்களிடம் அதைக் கொண்டுசேர்ப்பதில் நானும் வெங்கட் சாமிநாதனும் கவனமாக இருந்தோம். பிறகு, ‘கசடதபற’ பத்திரிகையை ஆரம்பித்தோம். அப்போது கிட்டத்தட்ட தினமும் நாங்கள் ஞானக்கூத்தன் அறையில் சந்திப்பது வழக்கமாக இருந்தது. எப்படி முத்துசாமியின் நாடகங்களுக்கும் சிறுகதைகளுக்கும் ‘நடை’ களம் ஆனதோ, அதேபோல ‘கசடதபற’வும் அவருக்கு ஒரு களம் ஆனது. அவருடைய புகழ்பெற்ற ‘நாற்காலிக்காரர்’, நாடகம்,  ‘நீர்மை’ சிறுகதை எல்லாம் ‘கசடதபற’ இதழில்தான் வெளிவந்தன.

நீங்கள் முதலில் பதிப்பித்தது முத்துசாமியைத்தான் இல்லையா? ஏன் அவரைப் பதிப்பிக்க நினைத்தீர்கள்?

தமிழ்ப் பதிப்புலகில் அதுவரை சாத்தியமில்லாத அல்லது எல்லோரும் தயங்கும் தீவிரமான விஷயங்களை முயற்சிப்பது என்ற எண்ணமே ‘க்ரியா பதிப்பக’த்தின் தொடக்கத்துக்கான காரணமாக இருந்தது. நவீன நாடகம் வெளியே தெரியாமல் இருந்த காலகட்டம் அது. எனவே, ‘க்ரியா’வின் முதல் வெளியீடாக ந.முத்துசாமியின் மூன்று நாடகங்களை ‘நாற்காலிக்காரர்’ நூலில் கொண்டுவந்தோம்.

நாடகங்களில் முத்துசாமியின் தனித்துவம் எப்படி சாத்தியமானது? கூத்துப்பட்டறை அனுபவங்களையும் சொல்லுங்களேன்…

1972-க்குப் பிறகு முத்துசாமி நாடகங்கள் எழுதுவதில் கவனம் செலுத்தினார். நாடகம் என்பது நிகழ்த்தப்பட வேண்டியதென்பதால், டெக்ஸ்டாக வாசித்தால் அதன் முழு வீரியம் தெரியாது. நாடகம் நிகழ்த்தப்படும்போது முழு வீரியத்தோடு வெளிப்பட வேண்டும். நாடகத்தில் மேடையில் தோன்றி வசனத்தைப் பேசுவது மட்டுமல்ல; முழுப் பிரக்ஞையோடு மேடையில் தோன்றி மேடை எனும் வெளியையும் உடல் எனும் ஊடகத்தையும் பயன்படுத்தி, எப்படி நாடகத்தை உருவாக்க முடியும் என்பதில் முத்துசாமி முனைப்புடன் இருந்தார். குரல் பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்றவற்றை எல்லோருக்கும் சொல்லிக்கொடுப்பது, களரி, சிலம்பம், தேவராட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட வெவ்வேறு விதமான கலைகளைச் சார்ந்த வல்லுநர்களை அழைத்துவந்து பயிற்சி கொடுப்பது என நவீன நாடகத்துக்கு வேண்டிய மூலவளங்களைச் சேகரித்து, அதை நடிகர்கள் மூலமாக வெளிக்கொண்டுவந்து நாடகம் என்பதை ஒரு புது மீடியமாக உருவாக்குவதில் அவர் தீவிரமாக இருந்தார். இதன் நீட்சியாகவே 1977-ல் ‘கூத்துப்பட்டறை’ உருவானது. அதன் நிர்வாகப் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருந்ததால் அப்போதெல்லாம் தினமும் நாங்கள் சந்திப்பது வழக்கமாக இருந்தது. தியேட்டர் குறித்து நிறைய ஐடியாஸ் அவருக்கு இருந்தது. ஒரு புது மீடியத்தைக் கண்டுபிடித்த உற்சாகமும் இருந்தது. மரபோடு பெரிய உறவு இருந்ததால், நாட்டார் கலைகள் உள்ளிட்ட பாரம்பரியக் கலைகளின் இழைகளை நவீன நாடகத்தோடு அபாரமான முறையில் அவரால் இணைக்க முடிந்தது. இந்த இணைப்புதான் தமிழ் நாடகத்துக்கு அவர் அளித்த முக்கியமான கொடை.

பொதுவில் இன்று நாடகக்காரர் முத்துசாமியே பரவலாக அறியப்படுகிறார். சிறுகதையாசிரியர் முத்துசாமியை எப்படி மதிப்பிடுவீர்கள்?

இடையில் ஒரு முப்பதாண்டு காலம் (1974-2004) அவர் சிறுகதை எழுதாததாலும், அதே காலகட்டத்தில் நாடகங்களில் அவர் வேறு ஒரு இடத்துக்குச் சென்றுவிட்டதாலும் ஏற்பட்ட விளைவு இது. உண்மை என்னவென்றால், ஒரு சிறுகதையாசிரியராக அவரது சாதனைகள் ரொம்ப ரொம்ப முக்கியமானது. தவிர, 2004-க்கு அப்புறம் மீண்டும் அவர் சிறுகதைகள் எழுத வரும்போது, இடைப்பட்ட முப்பது வருட நாடக அனுபவமும் இணைந்து, அவரது சிறுகதைகளுக்கு மேலும் செழுமை சேர்த்தது. முத்துசாமி சிறுகதை எழுதினாலும் நாடகம் எழுதினாலும் அடிப்படையில் படைப்பு மனம் என்பது ஒரே மாதிரிதான் வேலைசெய்தது. வெளி, உடலை ஊடகமாகப் பயன்படுத்துவது இந்த மாதிரி கூறுகளை அவரது கதைகளில்கூடப் பார்க்கலாம். ‘பாஞ்சாலி’ ஆகட்டும், ‘மேற்கத்திக் கொம்பு மாடுகள்’ ஆகட்டும்; அதில் தியேட்டர் எனும் வடிவம் சிறுகதைக்குள் எப்படி வந்திருக்கிறது என்பதையும் நாம் பார்க்கலாம்.

நீங்கள் மெட்ராஸ்காரர், முத்துசாமியோ தஞ்சாவூர்க்காரர். மேலும், நீங்கள் ஒரு அகராதியாளரும்கூட. முத்துசாமியின் மொழியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

முத்துசாமிக்குத் தனது கிராமமான புஞ்சையின் பண்பாடு, அதன் நிலம், மனிதர்களுடன் நெருக்கமான உறவு இருந்தது. புஞ்சைதான் அவருடைய களம். அந்தக் களத்தில் அவர் கவனித்திருப்பதெல்லாம் அற்புதமான விஷயங்கள்; நுணுக்கமானவை. ஓரியெண்டேஷன் என்பார்கள். அதாவது, நமது இருப்பை மற்ற விஷயங்களோடு வைத்துப் பார்த்து எங்கே இருக்கிறோம், எப்படிப் போகிறோம் என்பது. அவரது நாடகங்களிலும் சரி;  கதைகளிலும் சரி; அமைப்புரீதியாக ஒன்று சொல்லும்போது திசைகள் தொடர்பில் அவருக்குப் பெரிய பிணைப்பு இருந்தது. “இதனுடைய தெற்குல, அதனுடைய கிழக்குல” என்றுதான் அவர் பேசுவார். அதாவது, உங்கள் மனதில் அந்தத் திசையின் அமைப்பை வைத்தே, ஒரு முழு உருவத்தை உருவாக்கிவிடுவார். அது ஒரு அசாதாரணமான திறன். இதோடு இணைத்தே அவருடைய மொழியைப் பார்க்கிறேன்.

திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவராக, திமுககாரராகத் தன்னை முத்துசாமி அடையாளப்படுத்திக் கொண்டிருக் கிறார். இது அவரிடம் என்ன தாக்கங்களை உண்டாக்கியதாக நினைக்கிறீர்கள்?

அவருடைய படைப்புகள் எல்லாவற்றிலுமே சாதிக்கு எதிரான குரல் உறுதியாக ஒலித்தது. ஓர் உதாரணத்துக்கு ‘இங்கிலாண்ட்’ நாடகத்தைச் சொல்லலாம். சாதி வேற்றுமையை, சாதிக் கொடுமையை வன்மையாக மறுத்துப் பேசிய நாடகம் அது. சாதிக் கொடுமையை நுணுக்கமாகவும் அதே நேரத்தில் வீரியத்துடனும் அவருடைய படைப்புகள் பேசின. ‘நெய்ச் சொம்பு’, ‘கல்யாணி’, ‘மேற்கத்திக் கொம்பு மாடுகள்’ கதைககளிலும் ஒரு சரடுபோல சாதிக்கு எதிரான குரல் வந்துகொண்டே இருக்கும். அவருடைய வீடும், வாழ்க்கையும் எல்லோரையும் இணைத்துக்கொண்டதாகவே இருந்தது. முத்துசாமி மட்டுமல்லாது, அவருடைய மனைவியும் தன்னை திமுகவுடன் அடையாளப்படுத்திக்கொள்பவர். அவரது முதல் வாசகர் அவருடைய மனைவிதான். அவர் மனைவியைக் குஞ்சலி என்றுதான் கூப்பிடுவார். திடீரென குஞ்சலி என்பார். கதையோடு வரும் சந்தேகங்களைக் கேட்பார். வார்த்தை குறித்துக் கேட்பார். அபாரமான சமத்துவ உணர்வு அவரிடம் இருந்தது.

ஒரு நண்பராக அருகிலிருந்து பார்த்தவராக முத்துசாமியின் சிறப்பம்சம் என்று எதைச் சொல்வீர்கள்?

அவருடைய படைப்புரீதியான உத்வேகம் இருக்கிறதே அது ரொம்பவும் அசாதாரணமானது. எந்த நேரத்திலும் படைப்புரீதியான பிரக்ஞையிலிருந்து அவர் விலகியிருந்ததாக எனக்குத் தோன்றவில்லை. அதற்கு ஒரு முக்கியமான காரணமும் இருக்கலாம்; ஐவான் குர்ஜிப் என்றொரு ரஷ்ய மிஸ்டிக். முத்துசாமி, சி.மணி, வி.து.சீனிவாசன் இவர்களுக்கெல்லாம் ஒரு பெரிய சக்தியாக அவர் இருந்திருக்கிறார். “முழுமையான மனிதன் எப்படி உருவாவது, அந்த மனிதன் பிரக்ஞையோடு எப்படி எல்லா கணங்களிலும் இருப்பது, எப்படி மனிதர்களுக்கு உள்ளார்ந்த படைப்பாற்றல் இருக்கிறது” என்றெல்லாம் விரிவாகப் பேசியவர் குர்ஜிப். “படைப்பாற்றல் எப்படி நம்மால் உணரப்படாமலேயே இருக்கிறது; தூக்கத்தில் இருப்பதுபோலவே நமது வாழ்க்கையை ஒரு பழக்கத்தின் அடிப்படையில் வாழ்கிறோமே தவிர, படைப்பின் அடிப்படையில் அல்ல” என்பது குர்ஜிப்பின் எண்ணம். “ஒவ்வொருவரிடமும் படைப்பாற்றல் இருக்கிறது; எந்த நேரமும் விழிப்புடன் இருக்கும்போது படைப்புநிலை சாத்தியம்” என்று சொன்னவர். முத்துசாமி இதில் ஆழ்ந்திருந்தார். அவர் தேடிக்கொண்டே இருந்தார். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x