Published : 08 Oct 2018 09:03 AM
Last Updated : 08 Oct 2018 09:03 AM

ஒருங்கிணைந்த கல்வி ஏன் அவசியமாகிறது?

சமீப ஆண்டுகளில் உயர் கல்வியில் சேருவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அறிக்கை ஜூலையில் வெளியானது. 2004-05-ல் உயர் கல்வியில் சேருவோர் எண்ணிக்கை 10% ஆக இருந்தது 2017-18-ல் 25.8% ஆக உயர்ந்தது. 18-23 வயதில் உள்ளவர்களில் எத்தனை பேர் உயர் கல்வியில் சேர்ந்தார்கள் என்பதைக் கணக்கிட்டு, மொத்த சேர்க்கை விகிதம் (ஜிஇஆர்) கணக்கிடப்படுகிறது. வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவுதான் என்றாலும், சமீபகாலத்தில் இது அடைந்துவரும் வளர்ச்சி நம்பிக்கையளிக்கிறது. ஊடகங்களில் கல்வி நிர்வாகம், சுயாட்சி பற்றித்தான் அதிகம் விவாதிக்கப்படுகின்றன. இவை இரண்டு மட்டுமே முக்கியமானவை அல்ல. உயர் கல்வியில் ‘எதைக் கற்றுத்தர வேண்டும்’ என்று விவாதிப்பதும் அவசியம்.

நாடு சுதந்திரம் அடைந்த உடனேயே டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்தியா, பிரிட்டன், அமெரிக்காவைச் சேர்ந்த கல்வியாளர்களைக் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டது. இந்திய பல்கலைக்கழகக் கல்வி தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தர அது பணிக்கப்பட்டது. 1948 டிசம்பர் முதல் 1949 ஆகஸ்ட் வரையில் கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன. அவற்றின் அடிப்படையில் ‘ராதாகிருஷ்ணன் ஆணைய அறிக்கை’ வெளியானது. அதில் இடம்பெற்றுள்ள கருத்துகள் இன்றைக்கும் பொருத்தமானவை.

அடிப்படை மாதிரி

ராதாகிருஷ்ணன் கமிஷன் அறிக்கையின் பரிந்துரை, ‘பொதுக் கல்வி’, ‘தொழில் கல்வி’, கலை-கைவினைகளை ஊக்குவிக்கும் ‘தளைகளற்ற கல்வி’ என்று அனைத்தையும் சரிவிகிதத்தில் கொண்டிருந்தது. அனைத்துவிதப் பாடங்களையும் கொண்ட பொதுக் கல்வியைப் பெறாமல், சிறப்புக் கல்வியைப் புரிந்துகொண்டு முன்னேறிவிட முடியாது. பொதுக் கல்வியும் தொழில்சார்ந்த படிப்புக் கல்வியும் கைகோத்துச் செல்ல வேண்டும் என்றது அந்த அறிக்கை. தொழில்சார்ந்த கல்வி பயில்பவர்களும், வெளியுலகத் தொடர்புக்கு மொழிப் பாடங்களைக் கற்றுத் தேர்வது அவசியம். எனவே, மொழிப் பாடத்தில் தேர்ச்சி இல்லையென்றால், அது பின்னடைவாகிவிடும். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் உள்ள நடைமுறையால் ஈர்க்கப்பட்டு, பொதுக் கல்வியை அந்த அறிக்கை வலியுறுத்தியது. 1931-ல் இது தொடர்பாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆற்றிய உரையிலிருந்து ஒரு மேற்கோளையும் அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது.

அமெரிக்காவின் தேசிய அறிவியல், பொறியியல், மருத்துவ கல்விக் கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் என்ஏபி என்ற அமைப்பு இந்த ஆண்டு ஓர் அறிக்கையை அளித்துள்ளது. “பொதுப்பாடங்கள், கலைப் பாடங்கள், அறிவியல், பொறியியல், மருத்துவம் ஆகியவற்றை உயர் கல்வியில் ஒருங்கிணைக்க வேண்டும். இவையனைத்தும் ஒரே மரத்தின் வெவ்வேறு கிளைகள்” என்று அது கூறுகிறது. ராதாகிருஷ்ணன் அறிக்கையிலும் என்ஏபி அறிக்கையிலும் ஒருங்கிணைந்த கல்வி வலியுறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க உதாரணம்

‘உயர் கல்வியின் நோக்கமே வேலைக்கும் வாழ்க்கைக்கும் பட்டதாரிகளைத் தயார்செய்வது, துடிப்புள்ள குடிமகனாக வாழச்செய்வது, எழுத்து மற்றும் பேச்சுத் திறமைகளைக் கற்றுத்தருவது, பல்துறைகளைப் பற்றிய அறிவை ஊட்டுவது’ என்று அமெரிக்க என்ஏபி அறிக்கை விவரிக்கிறது. ‘அத்துடன் குழுவாகச் செயல்படுவது, நெறிசார்ந்து முடிவுகளை எடுப்பது, விருப்பு வெறுப்பில்லாமல் சிந்திப்பது, யதார்த்த உலகின் தேவைக்கு, பல்கலைக்கழகங்களில் பெற்ற அறிவின் மூலம் தீர்வு காண்பது’ என்றும் அறிக்கை விவரிக்கிறது. பொதுக் கல்வி என்பது அத்தியாவசியமானது என்கிறது ராதாகிருஷ்ணன் அறிக்கை. பொதுப்பாடங்களை இணைக்க வேண்டும் என்கிறது என்ஏபி அறிக்கை. பொதுப்பாடங்களுடன் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை ஒருங்கிணைக்க வேண்டும் என்கிறது. பட்டதாரிகள் ஒரேயொரு பிரிவில் முழு அறிவு பெற்றவர்களாக இருப்பதைவிட, பல துறைகளையும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நிறுவனங்கள் எதிர்பார்ப்பதை என்ஏபி அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அன்றாட வாழ்க்கையில் பிரச்சினைகள் வெவ்வேறு துறைகளுடன் தொடர்புள்ளவை. ஒரு துறையில் மட்டும் சிறப்புக் கவனம் செலுத்திப் படிப்பதால் பல நன்மைகள் விளைகின்றன. ஆனால், சமூகத்தில் உருவாகும் பிரச்சினைகள் பல துறைகள் சார்ந்தவை. இதற்கு இரண்டு உதாரணங்களைக் காண்போம். மின்சாரத்துக்கு அதிகரித்துவரும் தேவை, தொழில்நுட்பத்தில் ஏற்படும் தொடர் முன்னேற்றங்கள். பெரிய அளவில் எரியாற்றலைப் பயன்படுத்துவதும், சுற்றுச்சூழலைக் கெடுக்காமல் அதைப் பெறுவதும் பெரிய சவால்கள். இதை ஒரே துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களால் தீர்த்துவிட முடியாது. அன்றாட வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்படுகின்றன. புதிய கண்டுபிடிப்புகளால் சமூகத்தில் ஏற்படும் விளைவுகளை எல்லா கோணத்திலிருந்தும் பார்ப்பது அவசியம். “கலை மற்றும் பொதுப்பாடங்களை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவை கலந்து வாசிப்பதால் கிடைக்கும் சிந்தனைத் திறனும், ஆழ்ந்த வாசிப்பு அனுபவமும், பிரச்சினைகளைத் தீர்க்கும் இயல்பூக்கமும், குழுவாகச் சேர்ந்து செயல்படும் தன்மையும், கருத்துகளை மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்லி காரியமாற்றும் நுட்பமும் ஒருங்கிணைந்த கல்வியால் கிடைக்கிறது என்று ஒட்டுமொத்தமாகக் கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன” என்று என்ஏபி அறிக்கை கூறுகிறது.

யதார்த்த நிலை

இத்தகைய பின்னணியில் இந்தியாவின் இப்போதைய கல்வி நிலையை ஆராய்வோம். இந்திய உயர் கல்வி நன்கு ஒருங்கிணைந்ததாக இல்லை. பொதுக் கல்வியின் கூறுகளைப் பட்டவகுப்பு மாணவர்களின் பாடத்திட்டங்களில் சேர்ப்பதில் நிலைமை ‘இருவிதமாகவும்’ இருக்கிறது. சில பொறியியல், அறிவியல் கல்வி நிறுவனங்களும் - ஆய்வு நிறுவனங்களும் பொதுக் கல்வியைத் தங்களுடைய பாடங்களுடன் இணைத்தே கற்பிக்கின்றன. பெரும்பாலான பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்ட அறிவியல் கல்லூரிகளிலோ அப்படி இணைக்கப்படாமலேயே கற்பிக்கப்படுகின்றன. ஒற்றைப் பாடப்பிரிவைக் கற்பிக்கும் சில கல்வி நிலையங்களில், மாணவர்களும் வேறு வகை பாடங்களைக் கற்றுத்தரும் ஆசிரியர்களும் சந்திப்பதற்குக்கூட வாய்ப்புகள் இல்லை. பட்ட வகுப்புகளில் நீண்ட காலமாகக் கற்றுத்தரப்படும் பாடத் தொகுதிகளுடன் பொதுக்கல்விப் பாடப் பிரிவுகளும் சேர்க்கப்படுவது அவசியம். முதுகலைப் பட்டவகுப்பில் மட்டும் ஒரே பிரிவு பாடங்களைக் கற்றுத்தரலாம்.

1959-ல் கல்வியாளர் சி.பி.ஸ்னோ இருவித கலாச்சாரங்கள் குறித்துப் பேசினார். ‘பொதுப் பாடங்களைப் படிப்பது’, ‘சிறப்புத் துறைப் பாடங்களை மட்டுமே படிப்பது’ என்ற இவ்விரு வேறுபட்ட கலாச்சாரங்களை இணைக்க ‘மூன்றாவது கலாச்சாரம்’ உருவாக வேண்டும். அதில் முதல் இரு கலாச்சார மாணவர்களும், மற்றவர்களுடைய பாடச் சிறப்பை ஆழமாக உணர்ந்து படிக்கும் நிலைமை ஏற்பட வேண்டும்!

- ஆர்.பி.குரோவர்,

அணுவிசை ஆணையத்தின் உறுப்பினர்,

ஹோமி பாபா தேசியக் கழகத்தின்

மேனாள் துணைவேந்தர்.

தமிழில்: சாரி, ‘தி இந்து’ ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x