Published : 30 Aug 2018 09:06 AM
Last Updated : 30 Aug 2018 09:06 AM

தொழுநோயாளிகளின் துயரம் நீங்க வழிவகுப்போம்!

சிகிச்சை மூலம் குணப்படுத்தக்கூடிய தொழுநோய் தொடர்பாகப் பொதுச் சமூகத்தில் இன்னமும்கூட சரியான புரிதல் உருவாகாத நிலையில், சமீபத்தில் நடந்த இரு சம்பவங்கள் சற்றே நம்பிக்கை அளிக்கின்றன. வாழ்க்கைத் துணைக்குத் தொழுநோய் இருப்பதால் மணவிலக்கு தேவை என்று கோரலாம் என்று இருந்த சட்டம் தற்போது திருத்தப்படுகிறது. மற்றவர்களுக்குள்ள உரிமைகளையும் சலுகைகளையும் தொழுநோயாளிகளுக்கும் அளிக்க உரிய சட்டத்தை இயற்றுவீர்களா என்று மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டிருக்கிறது. சொல்லொணா துயர்களை அனுபவிக்கும் தொழுநோயாளிகளுக்குச் சட்டரீதியான ஆறுதலை இவை அளித்தாலும், மக்களிடம் மனமாற்றம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.

தொழுநோயே வராமல் இருப்பதற்கான மருத்துவத் திட்டங்களும், நவீன சிகிச்சை முறைகளும் இன்றைக்குச் சாத்தியமாகியிருக்கின்றன. இத்தனைக்குப் பிறகும், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் குடும்ப உறவுகளிலிருந்தும் சமூகத்திலிருந்தும் விலக்கும் மனோபாவமே இன்றுவரை நிலவுகிறது. சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், பெரும்பாலான நிலை இதுதான். தொழுநோய் தொடர்பான காலனி ஆட்சிக் காலத்திய சட்டங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டதும் ஒருவகையில் இதற்குக் காரணமாக அமைந்தது. 1898-ல் பிரிட்டிஷ் அரசால் இயற்றப்பட்ட தொழுநோயாளிகள் சட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால்தான் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு உத்தேசித்துள்ள திருமணம், சொத்துரிமை குறித்த ‘சமயம் சார்ந்த (சட்டத்திருத்த) மசோதா, 2018’ குறிப்பிடத்தக்க அம்சங்களைக் கொண்டிருக்கிறது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கக் கோரி ‘விதி’ என்ற சட்ட ஆய்வு மையம் தொடுத்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தால் கடந்த ஆண்டிலிருந்து விசாரிக்கப்பட்டது. மனிதாபிமான உணர்வுகளோடு நீதிமன்றம் இந்த வழக்கை அணுகியது. தொழுநோயாளிகளைப் பாரபட்சமாக நடத்தும் சட்டப் பிரிவுகளை ரத்துசெய்ய வேண்டும் என்பதை சட்ட ஆணையமும் தனது 256-வது அறிக்கையில் வலியுறுத்தியிருந்தது. பிச்சை எடுப்பது தொடர்பான சட்டத்தையும், சமயம் சார்ந்த சட்டத்தையும் ரத்துசெய்ய வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்தது. தொழுநோயாளிகளைப் பாரபட்சமாக நடத்தக் கூடாது என்று ஐநா சபையின் பொதுக்குழு 2010-ல் நிறைவேற்றிய தீர்மானத்தையும் சட்ட ஆணையம் சுட்டிக்காட்டியிருக்கிறது. தொழுநோயாளிகளை விலக்கிவைக்கும் சட்டங்கள், விதிகள், சடங்குகள், நடைமுறைகள் கைவிடப்பட வேண்டும் என்று ஐநா தீர்மானம் கோருகிறது.

இவை ஒருபுறம் இருக்க, சமூகம் தன்னுடைய கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்டு தொழுநோயாளிகளுக்குத் தேவைப்படும் மருத்துவ சிகிச்சை, அரவணைப்பு, அன்பான வார்த்தைகள் ஆகியவற்றை அளித்தால்தான் இந்நோயுடன் பின்னிப் பிணைந்திருக்கும் சமூகப் புறக்கணிப்பு மறையும். சமூகம் இதைப் புரிந்துகொள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அரசு தீவிரமாகப் பரப்புரை செய்ய வேண்டும். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் பிறரைப் போல் எல்லா உரிமைகளுடனும் வாழ வழிவகுப்பது மக்கள் சமூகத்தின் முக்கியக் கடமை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x