Published : 23 Aug 2018 09:30 AM
Last Updated : 23 Aug 2018 09:30 AM

பிராந்திய வர்த்தகப் பேச்சில் இந்தியா தொடர வேண்டும்!

இந்தியா உட்பட 16 நாடுகள் ‘ஆர்செப்’ எனப்படும் பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. ‘ஆசியான்’ அமைப்பைச் சேர்ந்த 10 நாடுகளும் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, கொரிய குடியரசு ஆகிய தடையற்ற வர்த்தக ஒப்பந்த நாடுகளின் பட்டியலில் உள்ள 6 நாடுகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த அமைப்பின் வர்த்தக உறவுகள் பற்றிய பேச்சுவார்த்தை முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் வர்த்தக பேரம் தொடர்பாக வலுவான ஒப்பந்தத்தை இறுதிசெய்துவிட அனைத்து உறுப்பு நாடுகளும் ஆர்வம் காட்டுகின்றன.

இந்த ஒப்பந்தம் தொடர்பாகச் சில நாடுகளுக்கு ஆட்சேபங்களும் சந்தேகங்களும் இருக்கின்றன. எனவே, ‘முழு நம்பிக்கை இல்லாவிட்டால் விலகிக்கொள்ளுங்கள்’ என்று கூறப்பட்டுவிட்டது. ‘இந்த வர்த்தக பேரத்தை இறுதிசெய்ய சிறிய குழு இருந்தால் போதும்’ என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

‘இப்போது சேராத நாடுகள் பிறகு சேர்ந்துகொள்ளலாம்’ என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாகப் பிரதமர் மோடிக்கு ஆலோசனைகள் வழங்க நான்கு இந்திய அமைச்சர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும்போது சீனத்திலிருந்து பெருமளவிலான பொருட்கள் இந்தியச் சந்தையில் இறக்குமதி செய்யப்படும். இந்தியச் சந்தையை சீனப் பொருட்களுக்கு வெவ்வேறு நிலைகளில் அனுமதிப்பது தொடர்பாகவும் பேச்சு நடக்கிறது.

ஊஹானில் இரு நாடுகளின் தலைவர்களும் சந்தித்துப் பேசிய பிறகு வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க இந்தியாவிடமிருந்து மருந்து - மாத்திரைகளையும் வேளாண் பொருட்களையும் அதிகம் வாங்க சீனா சம்மதித்திருக்கிறது.

‘ஆர்செப்’ அமைப்பில் உள்ள நாடுகளில் சில, அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலைச் சந்திக்கவிருக்கின்றன. இந்தச் சமயங்களில் நாடுகள் தங்களுடைய உள்நாட்டுத் தொழில், வர்த்தகத் துறைகளைக் காக்கும் நடவடிக்கைகளில்தான் அதிக கவனம் செலுத்தும். இந்நிலையில், இந்தப் பேச்சுகளில் இந்தியா தீவிரம் காட்டாமல் நிதானிப்பதோ, பேச்சிலிருந்து ஒரேயடியாக விலகுவதோ நன்மை தராது.

இந்த அமைப்பிலிருந்து இந்தியா விலகிவிட்டால் நம் நலனுக்காக விதிகளைத் திருத்தவோ, கொள்கைகளை வகுக்கவோ எந்த நாடும் குரல் கொடுக்காது. ஓராண்டுக்குப் பிறகு இந்த அமைப்புக்கு இந்தியா திரும்பும்போது ஒப்பந்தம் தொடர்பான பேச்சு முடிந்து கையெழுத்தாகியிருக்கும். அதன் அம்சங்கள் இந்தியாவுக்குச் சாதகமாக இல்லாவிட்டாலும் அதை ஏற்றாக வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்படும்.

எனவே, இந்தப் பேச்சில் இந்தியா நீடிக்க வேண்டும். ‘ஆர்செப்’ நாடுகளின் மொத்த ஜிடிபி மதிப்பு, உலக ஜிடிபி மதிப்பில் 40% என்பதிலிருந்தே இதன் முக்கியத்துவத்தை உணரலாம். ஆசியான் நாடுகள் மீது கவனத்தைத் திருப்பிய இந்தியா, கிழக்கு நாடுகளுடன் உறவை வலுப்படுத்தவும் முடிவெடுத்திருந்தது. அதை மேலும் வலுப்படுத்த ‘ஆர்செப்’ அமைப்பு பேச்சில் தொடர்வதே நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x