Published : 23 Aug 2018 10:01 AM
Last Updated : 23 Aug 2018 10:01 AM

அக்கம் பக்கம்: நிலத்தடி நீரை இழந்துவரும் பஞ்சாப்

பஞ்சாபில் நிலத்தடி நீர் கடுமையாகக் குறைந்துவருகிறது என்று அபாய மணி அடித்திருக்கிறது சண்டிகரிலிருந்து செயல்படும் ‘கிராமப்புற மற்றும் தொழில் துறை வளர்ச்சி ஆய்வு மையம்’ வெளியிட்டிருக்கும் அறிக்கை. சட்லெஜ் – யமுனை இணைப்புக் கால்வாய் கட்டுவது தொடர்பாக ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்துசெய்திருக்கும் பஞ்சாப், நிலத்தடி நீர்ப் பற்றாக்குறையால் பெரும் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கிறது அந்த அறிக்கை.

விவசாயத்துக்குத் தேவைப்படும் நீரைப் பொறுத்தவரை பஞ்சாபில் பாயும் ஆறுகள், பாசனக் கால்வாய்கள் மூலம் 23%தான் பூர்த்தியாகிறது. மீதம் 77% தேவையை நிலத்தடி நீர்தான் பூர்த்திசெய்கிறது. 1971-ல் 1.92 லட்சமாக இருந்த ஆழ்துளைக் கிணறுகளின் எண்ணிக்கை இன்றைக்கு 14.1 லட்சமாகியிருக்கிறது. நீர்ப் பாசனக் கால்வாய்கள் மூலம் பெறப்படும் நீரில் 80% நெல் வயல்களுக்கே பயன்படுத்தப்படுகிறது.

பல மாவட்டங்களில், நிலத்தடி நீர் 6 முதல் 22 மீட்டர் ஆழத்துக்குக் கீழே சென்றுவிட்டது. பஞ்சாபில் அடுத்தடுத்து அமைந்த அரசுகள் நீர் மேலாண்மையில் தோல்வியடைந்துவிட்டன என்பதைத்தான் இது காட்டுகிறது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.

 

ராஜஸ்தான் காங்கிரஸில் ரகளை

ராஜஸ்தான் சட்ட மன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், காங்கிரஸ் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், கட்சியின் மாநிலத் தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையிலான மோதலைச் சமாளிக்க முயன்றுகொண்டிருக்கிறார் ராகுல் காந்தி. இந்தத் தேர்தலிலும் முதல்வர் வேட்பாளர் என்று யாரையும் முன்னிறுத்தும் திட்டம் காங்கிரஸ் தலைமையிடம் இல்லை. ஆனால், ராஜஸ்தான் முதல்வராக இரு முறை பதவி வகித்தவரும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட், தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவதில் முனைப்புடன் இருக்கிறார்.

கட்சிக்குள் சச்சின் பைலட்டுக்கு இருக்கும் செல்வாக்கைக் குறைக்கும் வகையில், அவரைச் சகட்டுமேனிக்கு விமர்சிக்கவும் கெலாட் தயங்குவதில்லை. ராஜஸ்தான் அரசியல் களத்துக்கு வெளியே ஒருங்கிணைப்பு – பயிற்சிக்கான தேசியப் பொதுச் செயலாளராகக் காங்கிரஸ் தலைமை தன்னை நியமித்ததையும் அவர் ரசிக்கவில்லை. மறுபக்கம், கெலாட்டுக்கு அவ்வப்போது பதிலடி கொடுத்துவரும் சச்சின் பைலட், ராகுலுடன் நெருக்கம் காட்டுகிறார். இரு தரப்பையும் அமைதிப்படுத்த, கட்சி மேடைகளில் கட்டிப்பிடி வைத்தியத்தைக் கடைப்பிடித்துவருகிறார் ராகுல்!

பிஹார்: தொகுதிப் பங்கீட்டுப் போர்!

2019 மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு விஷயத்தில், பாஜகவுடன் பேரம் பேசுவதில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி ஆகியற்றுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. ஜூலை மாதம் பாட்னாவுக்குச் சென்றிருந்த அமித் ஷாவைச் சந்தித்துப் பேசிய நிதீஷ் குமார், தொகுதிப் பங்கீடு விஷயத்தில் விரைவில் முடிவுக்கு வருமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஏற்கெனவே, சிவசேனையும் தெலுங்கு தேசம் கட்சியும் முரண்டு பிடித்துவரும் நிலையில் நிதீஷ் போன்ற செல்வாக்கு மிக்க தலைவர்களை இழக்க பாஜக தயாராக இல்லை. இதற்கிடையே, தங்களிடம் தொகுதிப் பங்கீடு குறித்து பாஜக இன்னும் பேசாததில் ராம் விலாஸ் பாஸ்வானுக்கும் உபேந்திர குஷ்வாஹாவுக்கும் வருத்தம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தபோதெல்லாம் கணிசமான இடங்களை ஐக்கிய ஜனதா தளம் பெற்றுவிடும். இந்த முறை எத்தனை என்பது இனிமேல்தான் தெரியவரும்!

தொகுப்பு: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x