Last Updated : 10 Aug, 2018 09:40 AM

 

Published : 10 Aug 2018 09:40 AM
Last Updated : 10 Aug 2018 09:40 AM

பெரியார், ராஜாஜி, காமராஜர், ஜானகிக்கு மெரினாவில் இடம் மறுத்தாரா கருணாநிதி?

கருணாநிதி மரண நாளில் அவருக்கான நினைவிடம் தொடர்பில் நடந்த இழுபறி கூடவே பெரியார், ராஜாஜி, காமராஜர், ஜானகி மரணங்களையும் விவாதத்துக்குக் கொண்டுவந்தது. இவர்களுக்கெல்லாம் மெரினாவில் இடம் கொடுக்க மறுத்தார் என்பது கருணாநிதி மீதான குற்றச்சாட்டு. நடந்தது என்ன? உடனிருந்தவர்கள் சொல்கிறார்கள்.

ராஜாஜி

"சென்னை பொது மருத்துவமனையில் மூதறிஞர் ராஜாஜி இறந்தது 25.12.1972 அன்று. கிருஷ்ணாம்பேட்டையில் அவரது உடல் எரியூட்டப்பட்டது. ராஜாஜிக்கு மெரினாவில் இடம் தர கருணாநிதி மறுத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டே அர்த்தமற்றது. ஏனென்றால், நாங்கள் மெரினாவில் இடம் கேட்கவே இல்லை. நாங்கள் எங்கள் சுதந்திரா கட்சியின் சார்பில், முதல்வராக இருந்த கருணாநிதியிடம் எதைக் கோரினோம் என்றால், ராஜாஜிக்குக் கிண்டியில் நினைவிடம் கோரினோம்.

குறிப்பாக, ராஜாஜி ராம பக்தர் என்பதால் நினைவில்லத்தின் வடிவமைப்பு அதையொட்டி இருக்குமாறு கேட்டோம். கோரிக்கையை ஏற்ற கருணாநிதி அவ்வாறே அமைத்துக் கொடுத்தார். தொடர்ந்து காமராஜர், பக்தவத்சலம் என்று அடுத்தடுத்த காங்கிரஸ் தலைவர்களுக்கும் அதே பகுதியில் நினைவில்லங்கள் அமைக்கப்பட்டன. காந்தி மண்டபம் அங்கிருப்பது காங்கிரஸ் தொடர்பான நினைவுகளை ஒன்றாக்குகிறது" என்கிறார் ராஜாஜி இறந்தபோது சுதந்திரா கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்தவரான டாக்டர் ஹெச்.வி.ஹண்டே.

காமராஜர்

"பெருந்தலைவர் காமராஜர் சென்னையில் 2.10.1975 அன்று காந்தி ஜெயந்தி நாளில் இறந்தார். காமராஜர் உடலை தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான திடலில் (தற்போது காமராஜர் அரங்கம் உள்ள இடத்தில்) எரியூட்டுவது என்று முடிவுசெய்திருந்தோம். முதல்வர் கருணாநிதியிடம் நாங்கள் எந்த இடத்தையும் கேட்கவில்லை. ஆனாலும், கருணாநிதி தாமாகவே முன்வந்து கட்சி இடத்தில் காமராஜருக்கு நினைவிடம் அமைவதைக் காட்டிலும் பொது இடத்தில் நினைவில்லம் அமைக்கலாமே என்று கேட்டார். ஒப்புக்கொண்டோம். கிண்டியில் ராஜாஜி நினைவில்லம் இருந்த பகுதியிலேயே காந்தியின் சீடரான காமராஜருக்கும் நினைவில்லம் அமைய எல்லா ஏற்பாடுகளையும் அரசுத் தரப்பில் செய்து கொடுத்தார்" என்கிறார் காமராஜருக்கு அக்காலத்தில் தளபதியாக இருந்த பழ.நெடுமாறன்.

"காமராஜரின் உடலை இந்து மத முறைப்படி எரியூட்ட வேண்டும் என்று குடும்பத்தினர் கருதியதால், அவரது தங்கை பேரன் எரியூட்டினார். அஸ்தியை கன்னியாகுமரி கடலில் கரைக்கும் முன், அங்குள்ள காந்தி மண்டபத்தில் 3 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்குமாறு கூறி, இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அஸ்தியை காந்தி மண்டபத்துக்குள்ளேயே வைத்தால், பின்னாளில் தனி நினைவிடம் எழுப்புவது கடினம் என்பதால், வெளியே ஒரு பீடம் அமைத்து அதில் அஞ்சலிக்கு வைக்க ஏற்பாடு செய்யுமாறு முதல்வர் கருணாநிதியைக் கேட்டேன். அவ்வாறே செய்தார். பிறகு, எனது கோரிக்கைப்படி மணி மண்டபம் கட்ட மத்திய அரசிடம் கருணாநிதி அனுமதி கோரினார். பிற்பாடு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில்தான் அதற்கான அனுமதி கிடைத்தது. காமராஜருக்கு உரிய மரியாதையோடு அந்த நினைவு மண்டபத்தைக் கட்டியும் கொடுத்தார்" என்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவரான குமரி அனந்தன்.

பெரியார்

"பெரியார் 24.12.1973-ல் வேலூர் மருத்துவமனையில் மறைந்தார். அப்போதே அன்னை மணியம்மையாரும், நாங்களும் பெரியாருடைய உடலை, பெரியார் திடலில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டோம். அதை முதல்வர் கருணாநிதியிடத்திலே சொன்னோம். இப்போது சமூக வலைதளங்களில் மட்டுமல்ல; அரசுத் தரப்பிலேயே தவறான வாதத்தை நீதிமன்றத்தில் வைத்திருக்கிறார்கள். பெரியாருக்கு கருணாநிதி மெரினாவில் இடம் தர மறுத்துவிட்டார் என்பது ஒரு தவறான, பொய்யான, புரட்டான வாதம்" என்கிறார் திக தலைவர் வீரமணி.

ஜானகி

"எம்ஜிஆரின் மனைவியும், இடைக்கால முதல்வராக 23 நாட்கள் இருந்தவருமான ஜானகி ராமச்சந்திரன் 19.5.1996-ல் மறைந்தார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியிடம் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவோ, மற்றவர்களோ மெரினாவில் இடம் கேட்கவில்லை. எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்தில் உள்ள அன்னை சத்யா நினைவிடம் அருகிலேயே ஜானகி அம்மாளின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது " என்கிறார் முன்னாள் மத்திய அமைச்சரும், அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான கடம்பூர் ஆர்.ஜனார்த்தனன்.

மெரினாவில் உள்ள 4 முன்னாள் முதல்வர்களின் உடல்களும் எரியூட்டப்படவில்லை; திராவிட இயக்கத்தினரின் பாரம்பரியப்படி அடக்கம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x