Last Updated : 14 Aug, 2018 08:56 AM

 

Published : 14 Aug 2018 08:56 AM
Last Updated : 14 Aug 2018 08:56 AM

வங்கத்திலிருந்து வருகிறார்கள்... இங்கிருப்பவர்கள் கண்டுகொள்வதில்லை! - ரோஜா முத்தையா ஆய்வு நூலகர் சுந்தர் பேட்டி

ஒரு நூலகம் அதிக நூல்கள் இருப்பதால் மட்டுமே அது சிறந்த நூலகமாகிவிடாது. வாசகர், தான் தேடி வரும் நூலை, கால விரயமின்றி, மிக வேகமாக எடுத்துத் தரும் இயங்குமுறைதான், அந்த நூலகத்தைத் தனித்துவப்படுத்திக் காட்டும். அதுவே, சிறந்த நூலகமாகவும் இருக்கும். அப்படி ஒரு இயங்குமுறைக்காகத்தான் ‘பட்டியலிடுதல்’ (கேட்டலாகிங்) எனும் நடைமுறை நூலகங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று நாட்டிலிருக்கும் பெரும்பாலான பொது நூலகங்களில், பட்டியலிடுதல் நடைமுறை முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. எந்தப் புத்தகம் எந்த வரிசையில் இருக்கிறது என்பது போன்ற தகவல்கள் தெரியாததால், வாசகர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரின் நேரம் விரயமாகிறது. இதைத் தவிர்ப்பதற்காக, ‘இ-கேட்டலாகிங்’ எனப்படும் இணைய வழிப் பட்டியலிடுதல் முறை, மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படுகிறது. இந்திய அளவில் மிகச் சில நூலகங்கள் மட்டுமே இந்த முறையைப் பின்பற்றிவருகின்றன. தமிழகத்தில், சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆய்வு நூலகம், அப்படியான இணைய வழி பட்டியலிடுதலில் முன்னோடியாக இருக்கிறது. அந்தப் பெருமைக்குக் காரணகர்த்தாவான அந்த நூலகத்தின் இயக்குநர் மற்றும் நூலகர் க.சுந்தருடன் உரையாடியதிலிருந்து…

இணைய வழி பட்டியலிடுதலின் முக்கியத்துவம் குறித்துச் சொல்லுங்கள்…

ஒரு நூலகம் என்பது பல்வேறு துறை சார்ந்த, பல்வேறு தலைப்புகள் கொண்ட, பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய, பல்வேறு பதிப்பகங்கள், பல்வேறு ஆண்டுகளில் பதிப்பித்த புத்தகங்களைக் கொண்ட இடம். அந்தப் புத்தகங்களைத் துறைவாரியாக, நூலாசிரியர் வாரியாக, பதிப்பக வாரியாக, ஆண்டு வாரியாக எனப் பல வகைகளில் பகுத்து, புத்தகங்களை அடுக்கி வைக்க வேண்டும். எந்தப் புத்தகம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள ‘பட்டியலிடுதல்’ பயன்படுகிறது.

இந்தப் பணியை முன்பெல்லாம், ஒரு பதிவேட்டில் எழுதிவந்தார்கள். அதில் புத்தகத்தின் தலைப்பு, அதன் ஆசிரியர், பதிப்பகத்தின் பெயர், பதிப்பித்த ஆண்டு, வரிசை எண் போன்ற அடிப்படையான தகவல்கள் மட்டுமே இருக்கும். இந்த முறையில், புத்தகங்களைத் தேடுவது மிகவும் சிரமமாக இருந்தது. பின்னர், மேற்கண்ட தகவல்களை ஒரு அட்டையில், கையால் எழுதிவந்தார்கள். அதை ‘கார்ட் கேட்டலாகிங்’ என்பார்கள். அதன் மூலம், ஆசிரியர் வாரியாக, தலைப்பு வாரியாக என சில வகைகளில் மட்டுமே உங்களால் புத்தகங்களைத் தேடி எடுக்க முடியும். ஒரு குறிப்பிட்ட ஆண்டில் வெளிவந்த புத்தகத்தைத் தேடுகிறீர்கள் என்றால், அது முடியாது.

மேற்கண்ட முறைகளுக்கு மாற்றாக இணைய வழி பட்டியலிடுதல் முறை தற்போது பின்பற்றப்படுகிறது. ‘இ-கேட்டலாகிங்’ என்று சொல்வதை நாங்கள் ‘மெஷின் ரீடபிள் கேட்டலாகிங்’, சுருக்கமாக, ‘மார்க்’ என்று சொல்கிறோம். அமெரிக்காவில் உள்ள ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ எனும் அமைப்பு இதை அறிமுகப்படுத்தியது. தற்போது ‘மார்க் 21’ எனும் பட்டியலிடுதல் முறைதான் உலகம் முழுக்கப் பின்பற்றப்படுகிறது. இந்த முறையில், ஒரு புத்தகத்தின் தலைப்பு தொடங்கி, அதன் துணைத் தலைப்பு, அதன் ஆசிரியர், பதிப்பகம், வருடம், காப்புரிமை, எத்தனை முறை பதிப்பக்கப்பட்டது என்ற விவரங்கள், எந்த அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டது என்ற தகவல், புத்தகத்தில் உள்ள படங்களின் விவரங்கள் என எத்தனை தகவல்களை வேண்டுமானாலும் சேர்த்துக்கொண்டே போகலாம். இதனால் ஒருவர், ஒரு புத்தகம் சார்ந்து, எந்த விவரத்தை வைத்துத் தேடினாலும், அந்தப் புத்தகம் விரைவாகக் கிடைத்துவிடும் என்பது இதன் பெரிய பலம்.

இந்த வகையான பட்டியலிடுதலில் ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் கடந்து வந்த பாதையைக் கூறுங்கள்..?

1994-ல் இந்த நூலகம் தொடங்கப்பட்டது. அப்போது, நாங்கள் கைகளில்தான் புத்தகங்களைப் பட்டியலிட்டு வந்தோம். பிறகு, கணினிகள் மெல்ல மெல்ல ஊடுருவ, நாங்கள் கணினிக்கு மாறினோம். அதிலும் நிறைய சிக்கல்கள் இருந்தன. காரணம், அன்று தமிழுக்கான எழுத்துருக்கள் இருக்கவில்லை. எனவே, ஆங்கிலத்தில் தமிழை எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதனால், நிறைய தவறுகளும் குழப்பங்களும் ஏற்பட்டன. பிறகு, புணேவில் உள்ள ‘சென்டர் ஃபார் டெவலப்மெண்ட் ஆஃப் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங்’ எனும் நிறுவனம் தமிழ் எழுத்துருக்களை உருவாக்கியது. அதை ‘பென்டிரைவ்’ போன்ற உருவ அமைப்பு கொண்ட ‘டாங்கிள்’ எனும் கருவியில் கட்டமைத்தது. அந்தக் கருவியைக் கணினியுடன் இணைத்தால்தான், நம்மால் அந்த எழுத்துருக்களைப் பயன்படுத்த முடியும். அது எங்களின் பணியை ஓரளவு எளிமையாக்கியது. பின்னாளில், கணினியுடன் கூடிய ‘யுனிகோட்’ எழுத்துரு வந்துவிட்டது.

 எந்த மொழியில் புத்தகங்கள் சேகரிக்கிறோமோ, அதே மொழியில் பட்டியலிட்டால்தான், புத்தகங்களைத் தேடுவதற்கு எளிமையாக இருக்கும். ஆனால், வேற்று மொழிக்காரர் என்ன செய்வார்? எனவே, தனக்குத் தேவையான புத்தகத்தைத் தேட, அந்தப் புத்தகத்தின் விவரங்களை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால், அவை ஒலிபெயர்ப்பாக (டிரான்ஸ்லிட்டரேஷன்) மாற்றப்பட்டு, அவர் தேடும் புத்தகம் கிடைக்க, எங்கள் வலைதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது, பட்டியலிடுதலுக்கான விதிகள் தொடர்பாக, தமிழில் ஒரு புத்தகத்தை வெளிக்கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறோம். இந்தப் பணிகளுக்கெல்லாம் வித்திட்டவர்கள் இந்த நூலகத்தின் முதல் இயக்குநர் சங்கரலிங்கமும், சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கே.எஸ்.ராகவனும்தான்.

இன்று பட்டியலிடுதலில் உள்ள சவால்கள் என்ன?

‘அப்டேட்’ செய்வதுதான் பெரிய சவால். ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை சந்தித்து, பட்டியலிடுதலில் என்ன மாதிரியான தரம் உயர்த்துதல்களைச் செய்ய வேண்டும் என்பதை ஆலோசித்து அதைச் செயல்படுத்துவார்கள். இந்தியாவில் அப்படி ஒரு விஷயத்தை ‘நூலகத் தந்தை’ என்று போற்றப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதன் செய்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவருக்குப் பிறகு, யாரும் அதைத் தொடரவில்லை.

இன்னொரு பெரிய சவால், ‘சர்நேம்’ எனும் குடும்பப் பெயரால் ஏற்படும் குழப்பங்கள். தமிழகத்தைத் தவிர, இதர மாநிலங்களில் தங்கள் பெயருக்குப் பின்னால், குடும்பப் பெயரைச் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் உள்ளது.

எனவே, பெரும்பாலான புத்தகங்களைப் பட்டியலிடும்போது, ஆசிரியர்களின் குடும்பப் பெயரை முன்னால் போடுகிற வழக்கம் உண்டு. ஆனால், தமிழகத்தில் நம்முடைய தந்தையர்களின் பெயர்கள்தான், நமக்கான ‘சர்நேம்’. ஆனால் நாம் பெரும்பாலான நேரம், அப்பாவின் பெயரை, ‘இனிஷியலாக’ போடுவதுதான் வழக்கம்.

இதனால் நான் எழுதிய ஒரு புத்தகத்தைப் பட்டியலிடும்போது, ‘கணேசன், சுந்தர்’ என்று பட்டியலிடுவார்கள். அப்போது, புத்தகம் தேடுபவர்கள், ‘கணேசன்’ என்ற பெயரில் தேடுவார்கள். ஆனால் புத்தகத்திலோ ‘ஜி.சுந்தர்’ என்று இருக்கும். இதனால், ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்க, அதற்கென ஒரு தனி குழுவை உருவாக்கிச் செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது.

பட்டியலிடுதலில் நமது நூலகங்களை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்?

இன்றிருக்கும் பல நூலகர்களுக்குப் பட்டியலிடுதலில் போதிய பயிற்சி இல்லை. அவர்களுக்கு நாங்கள் பயிற்சியளிக்கிறோம். சிக்கிம், மேற்கு வங்கம், ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்தும், வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் எங்களை அணுகி, இங்கே வந்து பயிற்சி பெற்றுச் செல்கிறார்கள். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த நூலகர்கள்தான் கண்டுகொள்வதில்லை.

தவிர, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பொது நூலகங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சென்னையில் உள்ள ஒரு நூலகம் ஒரு மாதிரியாகவும், திருநெல்வேலியில் உள்ள ஒரு நூலகம் வேறு மாதிரியாகவும் பட்டியலிடுவதால், ஒரு வாசகரால், தான் தேடி வந்த புத்தகம் ஒரு நூலகத்தில் கிடைக்கவில்லை என்றால், அது வேறு எந்த நூலகத்தில் இருக்கிறது என்ற தகவலைத் தெரிந்துகொள்ள முடிவதில்லை. மாறாக, ஒருங்கிணைந்து செயல்பட்டால், ஒரே மாதிரியான பட்டியலிடுதல் முறையைப் பின்பற்றி, செலவீனங்களையும் நேர விரயத்தையும் குறைக்க முடியும். இதனால்தான் ‘யூனியன் கேட்டலாகிங்’ வேண்டும் என்று பல காலமாகச் சொல்லிவருகிறேன். முன்பு ‘நூலக அறிவியல்’ என்று இருந்த துறை, இப்போது ‘நூலகம் மற்றும் தகவல் அறிவியல்’ என்பதாக மாறியிருக்கிறது. ஆனால் அதற்கேற்றபடி, நூலகத் துறை சார்ந்த படிப்புகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டிருக்கிறதா என்றால், சந்தேகமே! காலத்துக்கேற்ப மாற்றங்கள் வரும்போது, நூலகத்தின் பயன் இன்னும் விரிவடையும்.

- ந.வினோத் குமார்,

தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in

ஆகஸ்ட் 12: தேசிய நூலகர் நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x