Published : 21 Aug 2018 09:22 AM
Last Updated : 21 Aug 2018 09:22 AM

வரலாற்று நியாயங்களை புறக்கணிக்காதீர்!

நாடு சுதந்திரம் அடைந்த 1947 முதல் நாம் அடைந்து வந்துள்ள வளர்ச்சியைப் பாராமுகமாகக் கடக்க நினைப்பது சரியல்ல; தேசப்பிரிவினைக்குப் பிறகு வெடித்த மதக் கலவரங்களும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும், அகதிகள் பெருக்கமும் சுதந்திர நாட்டின் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பெரும்பகுதி நேரத்தையும் உழைப்பையும் நிம்மதியையும் பறித்துக்கொண்டன.

“தேசப்பிரிவினைக்குப் பிறகு நடந்த சம்பவங்களால் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகளைத் தங்கவைக்க இடங்களுக்கும் உணவு, உடை, மருத்துவ உதவிகளுக்கும் வேண்டிய ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டிய பெரும் பொறுப்பு புதிய ஆட்சிக்கு ஏற்பட்டது. அதைவிட முக்கியம், மதக் கலவரங்கள் மேலும் பெருகாமல் அமைதியை ஏற்படுத்த வேண்டியிருந்தது. ஆட்சி அனுபவமே இல்லாத புதிய அரசுக்கு மிகப் பெரிய சவாலாக இந்த மனிதாபிமானப் பிரச்சினை வடிவெடுத்தது. புதிய அரசு மிக விரைவாகவும் வெற்றிகரமாகவும் இதைக் கையாளவில்லையா?” என்று பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் 1952 அக்டோபரில் எழுதிய ஒரு கட்டுரையில் கேட்டிருந்தார்.

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் அளித்த நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டி, “தேசப்பிரிவினைக்குப் பிறகு ஏற்பட்ட சோகச் சம்பவங்களால், அரசின் முழுக் கவனமும் அன்றாட நிர்வாகத்திலிருந்து மனிதாபிமானப் பிரச்சினைகளுக்குத் திசைதிருப்பப்பட்டது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சவாலான தொடக்கம்

ஏற்கெனவே இருந்த பிரச்சினைகள் போதாது என்று தேசப் பிரிவினை என்றொரு பெரும் பிரச்சினையும் சேர்ந்துகொண்டது. இந்தியாவின் 35 கோடி மக்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கெனவே வறுமையால் பசி-பட்டினிக்கு ஆளாகியிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் உணவு வழங்குவது அரசின் முன்னுரிமைக் கடமையாக இருந்தது. வங்கத்தில் 1943-ல் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தால் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்தது எல்லோருடைய நினைவுகளிலும் ஆழமாகப் பதிந்திருந்தது. “உணவு தானியக் கையிருப்பு நிலைமை மாகாண அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் மிகப் பெரிய கவலையாக நீடிக்கிறது” என்று நிதியமைச்சர் சண்முகம் செட்டி பட்ஜெட் உரையில் கவலை தெரிவித்தார்.

சுதந்திரம் கிடைத்ததற்கு 10 ஆண்டுகள் கழித்து 1958-ல் இந்தியா குறித்து எழுதிய பொருளாதார அறிஞர் ஜான் கென்னத் கால்பிரெய்த், “இந்திய மக்களில் 80%-க்கும் மேற்பட்டோர் கிராமங்களில்தான் வாழ்கின்றனர். அவர்கள் அனைவருமே விவசாயம் சார்ந்த வேலைகளைத்தான் செய்கின்றனர். இந்தியாவின் பொருளாதாரம் என்பதே சாப்பிடுவதற்கான உணவு தானியங்களைச் சாகுபடி செய்வதாகத்தான் இருக்கிறது” என்று விவரித்துள்ளார். உணவு தானியப் பற்றாக்குறையைப் போக்க நம்முடைய முதல் அரசு பாசன நிலப்பரப்பை அதிகப்படுத்தும் வேலையில் அக்கறை செலுத்தியது.

“தாமோதர், ஹிராகுட், பக்ரா-நங்கல் என்ற மிகப் பெரிய நீர்த்தேக்க அணைகளைக் கட்டுவதில் இந்திய அரசு தீவிரம் காட்டுகிறது. இந்த மூன்று அணைகளும் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, புதிதாக ஏற்படும் பாசனப் பரப்பு, அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள கிராண்ட் கூவ்லி அணைக்கட்டின் ஆயக்கட்டில் 70% அளவுக்கு இருக்கும்” என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செஸ்டர் பவுல்ஸ் தனது கட்டுரையில் எழுதியிருக்கிறார். அப்போது உலகின் மிகப் பெரிய பாசன அமைப்பு கிராண்ட் கூவ்லிதான். எதிர்பாராத பிரச்சினைகளையும் நிச்சயமற்ற பல தன்மைகளையும் எதிர்கொண்டிருந்த இந்திய அரசு, மக்களுக்கு உணவு வழங்குவதற்காக இவ்வளவு பெரிய பாசனத் திட்டங்களைச் சிந்தித்துச் செயல்படுத்த முடிந்தது மிகப் பெரிய அதிசயம்தான்.

உழைப்பின் பலன்

நமது நாட்டின் தலைவர்கள் தொலைநோக்குப் பார்வை உள்ளவர்கள். சமச்சீரான வளர்ச்சி தேவை என்று புரிந்துகொண்டவர்கள். இந்தியத் தொழிற்சாலைகளின் உற்பத்திக் குறியீட்டெண் இப்போது உயர்வதும்  சரிவதுமாக இருக்கிறது. சுதந்திரம் பெற்றபோது தொழிற்சாலைகளில் தயாரிக்கும் பொருட்களை 90% இறக்குமதி செய்துதான் பயன்படுத்தினோம். இப்போது பரிகசிக்கப்படும் ஐந்தாண்டுத் திட்டங்கள் மூலம்தான் 1950-65 காலத்தில் இந்தியத் தொழில் துறை வளர்ச்சி ஆண்டுக்கு 7% என்று தொடர்ந்தது. பிரிட்டிஷ் காலத்தில் தொய்வடைந்திருந்த தொழில் துறை உற்பத்தி, வேகம் அடைந்தது. அத்துடன் புதிய சமூக-பொருளாதார முறைமையும் ஏற்றம்பெற்றது.

சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் 50 ஆண்டுகளாக மொத்த உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) ஆண்டுக்கு 0.9% என்றே இருந்தது. முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்ட காலங்களில் அது ஆண்டுக்கு 4% சராசரி என்ற அளவை எட்டியது. 2018-ல் நாம் சொல்கிறோம் - நம்முடைய நாட்டை ஆண்ட முன்னவர்கள் செயல்படத் தவறியவர்கள் என்று! இந்தியாவின் வளர்ச்சி 4% தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் இருக்கும் என்று 1900-ல் யாராவது கற்பனை செய்திருக்க முடியுமா? 1900-1947 காலத்தில் இருந்ததைவிட நபர்வாரி ஜிடிபி வளர்ச்சி வீதம், 20 மடங்கு அதற்குப் பிறகு அதிகரித்திருக்கிறது.

மறக்கப்படும் வரலாறு

‘இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (ஐஐடி) மாற்றத்துக்கான கருவிகள்’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார்; ஆனால், அவற்றை உருவாக்கியவர்களுக்கு நன்றி கூறத் தவறுகிறார். இந்தியக் கல்வியின் தரம் போதவில்லை என்று பலர் கருதலாம். ஆனால், நாடு சுதந்திரம் அடைந்தபோது எழுத்தறிவு பெற்றவர்கள் வெறும் 12% தான்.  18,000 கிராமங்களுக்கு மின்இணைப்பு வழங்கியதற்கு வெற்றி விழா நடத்துகிறது இப்போதைய அரசு. நாடு சுதந்திரம் அடைந்தபோது 0.2% அளவுக்கே மின்இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. நரேந்திர மோடியிடம் மன்மோகன் சிங் ஆட்சியை ஒப்படைத்தபோது 97% கிராமங்கள் மின்வசதியைப் பெற்றிருந்தன.

இந்தியா உண்மையிலேயே முன்னேற வேண்டும் என்று விரும்புவோர், எங்கிருந்து இந்த இடத்துக்கு வந்திருக்கிறோம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், இப்போதிருக்கும் காலத்தை மனதில் கொண்டு முன்னவர்களையெல்லாம் குற்றஞ்சாட்டிவிட முடியும். 21-வது நூற்றாண்டில் உள்ள அறிவு, விஞ்ஞான-தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றுக்கு இடையே, படுபாதகமான பொருளாதாரக் கொள்கைகளைக் கையாண்டு மக்களைத் தாங்கொணாத துயரத்தில் ஆழ்த்தியவர்தான் இப்போதைய பிரதமர். கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக அவர் எடுத்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையை, அவருக்கு முன்னால் பிரதமராக இருந்த பொருளாதார அறிஞர், ‘திட்டமிட்ட கொள்ளை, சட்டப்படியான சூறையாடல்’ என்று கண்டித்தார். இதை எப்போதும் மறக்கக் கூடாது!

- சல்மான் அனீஸ் சோஸ்

உலக வங்கியில் பணியாற்றியவர்,

தமிழில்: சாரி, ‘தி இந்து’ ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x