

அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியோரின் நல்வாழ்வுக்காகவும் அவர்களை மனச்சோர்விலிருந்து விடுவித்து ஊக்கமளிக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டிருக்கும் ‘அன்புச்சோலை’ திட்டம் வரவேற்கத்தக்கது. நவம்பர் 10ஆம் தேதியன்று திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்திருக்கும் இந்தத் திட்டம், தனிமையை மட்டுமே துணையாகக் கொண்ட முதியோரை ஆசுவாசப்படுத்தும் என்று கருதப்படுகிறது.
தமிழகமெங்கும் 25 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பகல்நேரப் பராமரிப்பு மையங்களில் நூலகம், யோகா, இயன்முறை மருத்துவச் சேவை, விளையாட்டு உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.