

மா.அரங்கநாதன் சிறுகதைகள் தனித்துவமானவை. நேரடியாகச் சொல்லப்படும் கதையின் அடிச்சரடாக, மனிதர்களின் பாவனைகளும் எண்ணங்களின் விசித்திரங்களும் ஆழமாக மறைந்திருப்பவை. அதில் 'பூசலார்' சிறுகதை முக்கியமானது.
முத்துக்கருப்பனின் தாய்மாமா மிகவும் நல்லவர். தன் மகள் வடிவுவை மணமுடித்துத் தருவதாக சொல்லி வருபவர், திடீரென வேறுவிதமாக நடந்துகொள்கிறார். ஏதோ காரணம் சொல்லி, மகளுக்கு வேறு இடம் பார்த்து விட்டதைச் சொல்கிறார். அதன்பிறகு, அவன், தான் பணியாற்றும் நகரமான காஞ்சிபுரத்திற்கு திரும்பி விடுகிறான். அலுவலக நண்பர்களிடம் திருமணம் விலகிப்போய் விட்டதைச் சொல்லவில்லை. திருமணம் ஆகிவிட்டது என்று பொய் சொல்லி, மூன்று மாதத்தில் அழைத்து வருவதாகக் கூறுகிறான். முத்துக்கருப்பன் தனது பொய்களுக்காக, பல விதங்களில் சமாளிக்கிறான்.