

சமீபத்தில் ஒரு காணொளியைப் பார்த்தேன். ரயில் நிலையங்களில் எடை பார்க்கும் இயந்திரங்களை நிறுத்திவைத்திருப்பதுபோல், சீனாவில் ஒரு மருத்துவ அரங்கில், பத்துக்கும் மேற்பட்ட கணினிகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. அவை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) கொண்ட மேம்பட்ட கணினிகள்.
அந்த அரங்குக்கு வருகிற மருத்துவப் பயனாளர்கள் ஒவ்வொருவரும் வரிசையாக, அந்த இயந்திரங்களில் ஒன்றையடுத்து இன்னொன்றாக ஏறி இறங்குகின்றனர். ஓர் இயந்திரம் அவருடைய உடல் பிரச்சினையைக் கேட்கிறது. அடுத்த இயந்திரம் அவரைப் பரிசோதிக்கிறது. இது முதல்நிலைப் பரிசோதனை. அதற்கடுத்த இயந்திரம் அவரை மேற்பரிசோதனைக்கு அனுப்புகிறது. இன்னொன்று, அவரது பழைய பரிசோதனை முடிவுகளையும் தற்போதைய முடிவுகளையும் ஒப்பிடுகிறது. இறுதி இயந்திரம் நோயைக் கணித்துச் சிகிச்சையைப் பரிந்துரைக்கிறது.