

கு.ப.ரா. ‘விடியுமா’ என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். “சிவராமையர் டேஞ்சரஸ்” என்று தந்தி வருகிறது. அக்காளும் தம்பியும் உடனே இரவிலேயே சென்னைக்குப் புறப்படுகின்றனர். செல்லும்முன் குஞ்சம்மாளின் தாய் எதிர்கொண்ட நல்நிமித்த ஆறுதல்கள், பயணத்திற்கு வேண்டிய பொருட்கள், நோம்பிக்கு கும்பகோணம் வந்த குஞ்சம்மாள் மனத்தத்தளிப்புடன் எதிர்கொள்கிற விதம், அத்திம்பேர் அக்காளை வரவழைக்கச் செய்திருக்கும் குறுக்குவழியாக இருக்குமோ என்று தோன்றும் சமாதானங்கள், அக்காவின் முகத்தில் தோன்றும் புதுப்பொலிவு தரும் நம்பிக்கை, எழும்பூரில் இறங்கும்போது எதிர்கொண்டு நின்றாலும் நிற்பார் என்கிற நினைப்பில் தவிப்படங்கி மனங்கொள்ளும் ஆறுதல் என இருவரது மனநிலைகளை உரையாடல்களிலும் மன ஓட்டங்களிலும் கு.ப.ரா. விவரிக்கிறார்.
எழுத்தாளர், கலைஞராக மிளிர்வது அவர் உருவாக்கும் ஆக்கத்தின் பரிபூரணத்தன்மையால் விளைவது. மனதின் உண்மை ஒளியைக் காண முயல்பவரால் மட்டுமே அடைய முடிவது. சிவராமையர்உயிருடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து மனம் ததும்புகிறது. அவர் காசநோய் காரணமாக மருத்துவம் பார்த்துவருவது சொல்லப்படுகிறது. தன் மங்கலத்தன்மை போய்விடக்கூடாது என்ற தவிப்பும் தொடர்ந்தது. அந்த விடிவை நோக்கித்தான் இந்தப் பயணம் என்ற எண்ணம் குஞ்சம்மாளுக்குத் தோன்றுகிறது. இப்படி ஓடும் எண்ணத்திலிருந்து வேறொரு கதவு திறக்கிறது.