

காவிரி டெல்டா பகுதியின் நெல் விவசாயிகள் நெல்மணிகளை விற்பதில் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையில் (எம்எஸ்பி) கொள்முதல் நிலையங்களில் விற்பதற்கு ஒரு வாரத்துக்கு மேல் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. இது மட்டுமல்லாமல், நெல்மணிகளைக் கொள்முதல் நிலையங்களில் ஏற்றுக்கொள்வதற்காக, ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய்க்கும் மேலாக லஞ்சம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
சில வேளைகளில், நெல்லின் பதிவு செய்யப்பட்ட எடை வேண்டுமென்றே குறைக்கப்படுவதாகவும் அல்லது அதிக ஈரப்பதம் இருப்பதாகக் கூறி நெல் நிராகரிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பயிர்ச்சாகுபடி மூலம் வேளாண் குடும்பங்களுக்குக் கிடைக்கும் மாத வருமானத்தில் வெறும் 2,641 ரூபாயுடன், இந்தியளவில் 21ஆவது இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டில், இந்த முறைகேடுகள் விவசாயிகளைக் கோபப்படுத்தியுள்ளன.